அரும்புகள்
வேதம் கொடுத்த வெற்றித் தேசம்
வாதம் கொண்டே வதங்கி விடாமல்
மேதை களாலே மேலும் கிளைத்து
பாதை களெல்லாம் பூக்கள் வேண்டும்
கொள்ளை ஈட்டும் கொள்கை மாறி
பிள்ளைக் கான பண்பைச் சொல்ல
பள்ளிக் கூடம் பக்கு வமாக
வள்ளல் பலரால் வளர வேண்டும்
மாதர் உயர்வை மறந்தே என்றும்
போதை கொண்டே புணரத் தாவும்
தீதுக் கண்ணைத் தீண்டிக் குடையும்
நீதிச் சட்டம் நிலைக்க வேண்டும்
கிண்ண மதுக்கள் கிடந்து நொறுங்க
கண்ணை மறைக்கும் காமம் எரிய
மண்ணைத் தரிசாய் மாற்றும் பலர்க்காய்
எண்ணைச் சட்டிகள் எரிந்திட வேண்டும்
காட்டுக் கரையில் காவல் வைத்துத்
தீட்டுச் சொல்லும் தீயோர் தீர
நாட்டைத் தீயும் நாவிற் கருக்க
வீட்டைப் புதிதாய் வேய வேண்டும்
அண்டை மறந்து அந்நி யமாகி
ஆண்டு பலவாய் அழுந்திக் கிடக்கும்
பண்டை மனிதம் மீண்டும் திரும்ப
வேண்டும் யாவும் வேண்டும் அரும்ப
வாய்ப்பாடு: மாச்சீர்
... மீ.மணிகண்டன் ( மணிமீ )