கடவுள் உள்ளே நுழைகிறார்

அது மிக நீண்டதொரு விவாதம்...

இடைவெளி இல்லாமல் நீண்டு கொண்டிருந்தது.அந்த விவாதத்தில் கடவுள் முக்கிய பங்கேற்றிருந்தார்.இருக்கிறாரா...? இல்லையா.?என்பதே அது.

இருக்கிறார் என்பது அவர் வாதம்... இல்லை என்பது என் வாதம்... தொடர்ந்தது எங்கள் விவாதம். இருக்கிறார் என்பதற்கு அவர் நூறு எக்ஸாம்ல்ஸ்...இல்லை என்பதற்கு நான் நூறு எக்ஸாம்ல்ஸ்....

இருவரும் அவரவர் கொள்கையை விடுவதாயில்லை.ஒவ்வொருவருக்கும் அவரவர் தரப்பு வாதம்தான் நியாயம்...எனக்கும் அப்படித்தான்...

எப்போது...எதற்காக... அந்த வாதம் தொடங்கியது.

எதுவுமே எளிதாக கிடைத்து விடுவதில்லை.இந்த அரசாங்க வேலையும் அப்படித்தான்...மூன்று வருட முயற்சிக்கு பிறகுதான் கிடைத்தது.இதற்கு முன்னதாக தனியார் கம்பெனிகளில் குறைந்த சம்பளத்திற்கு கூத்தாட வேண்டியிருந்தது.இனிமேல் அந்த கவலை இருக்காது.வேலை பார்த்தாலும் சரி... பார்க்காவிட்டாலும் சரி... மாதம் வந்தால் சம்பளம்.மத்தபடி எகஸ்ட்ரா...எக்ஸ்ட்ரா...அதற்காகத்தானே அனைவரும் அரசாங்க வேலைக்கு அடித்து கொள்வது.

இன்றுதான் பணியில் சேர்ந்தேன். அனைத்தும் புதிதாக தெரிகிறது.அனைவரும் புதியவர்கள்.தனியார் அலுவலகங்களில் காணப்படும் ஒன்று இங்கே மிஸ்ஸிங்...அது சுறுசுறுப்பு...

அங்குதான் அவரை பார்த்தேன்.நல்ல அகலமான நெற்றி...அந்த நெற்றி நிறைய விபூதி கீற்று...அணிலுக்கு முதுகில் போடப்பட்ட கோடு போல.அதன் மையத்தில் ஒரு சந்தன பொட்டு...அதில் குங்குமம் இட்டிருந்தார்.பார்த்தாலே புரிந்தது, ஆச்சாரமானவர்...நல்ல பக்திமான் என்று...

பொதுவாகவே இவர் போன்றவர்களை நான் நம்புவதில்லை.வெளியில் பட்டையும்...கொட்டையுமாக... பக்தி பழமாக காட்சியளிப்பவர்கள்... உள்ளுக்குள் மிக மோசமானவர்களாக இருப்பார்கள். அன்னம் பிசைந்த கையால் காக்கையை கூட விரட்ட மாட்டார்கள்.

சாமியார் வேடமிட்டு கோடி கோடியாய் பணம் சேர்த்திருப்பார்கள்...சரச,சல்லாப லீலைகளில் ஈடுபடுவார்கள்.பிறகு வீடியோ...ஆடியோவென்று கோர்ட்டுக்கும்...ஜெயிலுக்கும் அலைவார்கள்.இதையெல்லாம் கண்டுகொள்ளாத சாமியையும்... சாமியார்களையும்...நான் நம்புவதில்லை.

ஆனால் இவரைப்பார்த்தால் அப்படி தெரியவில்லை. எல்லாவற்றையும் தாண்டி ஒரு ஈர்ப்பு தெரிந்தது.சிலரை பார்த்திருக்கவே மாட்டோம்... ஆனால் முதன்முறை பார்க்கும்போதே பரம எதிரியை பாரப்பது போலிருக்கும்.ஆனால் ஒரு சிலரை முதல் பார்வையிலே பிடித்து போகும்.அப்படித்தான் இவரையும் பிடித்துப்போனது.

வயிறு இராட்சத பலூனாய் ஊதிப்போயிருந்தது.அரசு உத்தியோகத்தின் உபயம்.குனிந்து தன் பாதங்களை பார்த்து விட்டாலே பெரிய சாதனைதான் அவருக்கு...

மறுநாள்...

அலுவலகத்தின் உள் நுழைகையிலே சாம்பிராணி... ஊதுபத்தி...வாசம் கமகமத்தது. கோயிலின் உள்ளே நுழைந்த உணர்வுதான் ஏற்பட்டது.வரிசையாக வைக்கப்பட்ட சாமி படங்களின் முன்னால் அகல் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.சிறிதாய் கோபம் தலைகாட்டினாலும் கூட கட்டுப்படுத்ததான் வேண்டியிருந்தது.பிறர் உணர்வுகளை புண்படுத்துவதற்கு நமக்கு உரிமையில்லை.

"என்ன தம்பி...அப்படியே திகைச்சு நின்னுட்டீங்க...?"

"ஒண்ணுமில்லே...சும்மாதான்...''

"புரியுது...புரியுது...இது என்ன கோயிலா...ஆபிஸான்னு...தானே நினைக்கிறீங்க...?"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..."

"செய்யும் தொழிலே தெய்வம்... நாம வேல பாக்குற எடமும் ஒரு கோயில்தான் தம்பி..."

"அதை வெளிக்காட்டணும்கற அவசியம் இல்லையே..."

"உண்மைதான் தம்பி...ஆனா... இதெல்லாம் இல்லாம வெறும் ஆபிஸ்...பைலுன்னு நெனச்சுபாருங்க...கொஞ்சம் போரடிக்கும்.அதுவுமில்லாம ரூம் ஸ்பிரே அடிக்க தேவையில்ல பாருங்க..."

சிரித்துக்கொண்டே சொன்னார். அவர் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகத்தான் தோன்றியது.அதன்பிறகு அவருடன் வாதிடவில்லை.

பின்வந்த நாட்களில் அவருக்கும், எனக்கும் நிறைய பகிர்தல்களும்... புரிதல்களும்... உண்டாயின. அவருடனான எல்லா கருத்துக்களும் ஒத்துபோயின. கடவுள் என்ற ஒன்றை தவிர...

ஒருநாள் காலை அந்த செய்தி இடியென தாக்கியது. அலுவலகத்திற்கு வரும்வழியில் விபத்தில் இறந்து விட்டாரென்று. ஒரு ஆட்டோவை பிடித்துக்கொண்டு அரக்க,பரக்க ஓடினேன்.விபத்து நடந்த இடத்தில் கூட்டம் கூடியிருந்தது.கூட்டத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தேன். பகீரென்றது....மோசமான விபத்துதான்.அந்த குறுகிய வளைவில் காரை திருப்பமுடியாமல் மோதியிருக்கிறான் அந்த காரோட்டி..அதிகாலையிலே மதுவின் ஆளுமையிலிருந்த அவனை ஒரு கூட்டம் புரட்டியெடுத்து போலிஸில் ஒப்படைத்திருந்தது.

"அரசாங்கத்த மூடச்சொல்லுங்கடா...நாங்க குடிக்காம இருக்கோம்..."நிறைந்த போதையில் உளறிக் கொண்டிருந்தான்.அதற்குமேல் அங்கு என்னால் நிற்கமுடியவில்லை.

மூன்று நாட்கள் ஓடிப்போயிருந்தது.அவரது இருக்கை காலியாக கிடந்தது.என் மனம் முழுதும் அவரது நினைவுகளால் நிரம்பி வழிந்தது.அவரது குழந்தைதனமான பேச்சும்...சிரிப்பும்...மின்னி மறைந்தது.

வெத்தலையைக் குதப்பிக்கொண்டே "தம்பி,சீக்கிரமா கல்யாணத்த பண்ணிக்கோங்க...அப்பத்தான் வாழ்க்கையில ஒரு பிடிப்பு வரும்..." அவர் அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது.

நிமிர்ந்து பார்த்தேன்.வரிசையாக வைக்கப்பட்டிருந்த சாமிபடங்கள் களையிழந்து கிடந்தன.காற்றில் அசைந்து,அசைந்து எரியும் அகல்விளக்கு இன்று எரியவில்லை.கடைசியாக அவர் ஏற்றி வைத்த ஊதுபத்திகளின் குச்சிகள் மட்டும் மீதமிருந்தன.

"தம்பி,நான் சொல்ற எல்லா கருத்துகளையும் ஏத்துகறீங்க,இந்த கடவுள் நம்பிக்கையை மட்டும் ஏத்துக்க மாட்டேங்கறீங்களே...ஏன்..."

"என்னமோ தெரியல சார்... என்னால அதமட்டும் ஏத்துக்க முடியல..."

"சரி,அத விடுங்க... என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பா ஏத்துக்குவீங்க... வாங்க கேண்டீன் வரைக்கும் போயிட்டு சூடா ஒரு டீ சாப்பிட்டு வருவோம்..." சிரித்துக்கொண்டே சொல்வார்.

நினைத்து பார்த்தேன்.வலித்தது.

இருக்கையை விட்டு எழுந்தேன், ஒரு முடிவோடு...பாத்ரூமில் போய் கை,கால்களை அலம்பிக்கொண்டு வந்தேன்.

மூன்று நாட்களில் விளக்கு தூசி படிந்திருந்தது.துடைத்துவிட்டு, எண்ணையிட்டு விளக்கை ஏற்றினேன்.மெல்ல எரிய தொடங்கியது.அதன் அசைவில் தனது நம்பிக்கையில் அவர் ஜெயித்து விட்டதாக நினைத்து சிரிப்பதாகவே தோண்றியது.

அவரது நம்பிக்கை என் மனதிலும், ஊதுபத்தியின் வாசம் அறையிலும் பரவத்தொடங்கியது....

எழுதியவர் : பனவை பாலா (14-Nov-15, 4:46 pm)
சேர்த்தது : பனவை பாலா
பார்வை : 755

மேலே