வின் ஞானம் போட்டிக்கவிதை

வின் ஞானம்  போட்டிக்கவிதை

வின் ஞானம் போட்டிக்கவிதை

போட்டிக்கான கவிதை
தலைப்பினை பார்த்தபோது
தலை கிறு கிறுத்தது
அர்த்தம் புரியவில்லை
அகராதியின் பக்கங்களை அளைந்தபோது
பொன் விழா கொண்டாடும் அகராதி
அழுதிருக்கக்கூடும் பக்கங்கள் கிழிந்ததில்..!!

இணையதளத்தில் கிடைக்காத விடைகளா...??
கணினிக்கு உயிரூட்டி
எழுத்துக்களின் தலையைக் குட்டியதில்
விசைப் பலகையின் எழுத்துக்கள்
ஒன்றிரண்டு தலையை
உள்ளிழுத்துக் கொண்டது தான் மிச்சம் ...!!
கணினியோ இயலாமையை
"ஊப்ஸ்" சொல்லி சளைத்துக் கொண்டது..!!

தாத்தா"வின்" ஞானத்தை
சுரண்ட நினைத்து அர்த்தம் கேட்டேன்
வின் ஞானம் என்றால் என்ன??
கண்களை சுருக்கி "வின் ஞானமா"
என் ஞானத்திற்கு எட்டவில்லை
உன் அப்பனிடம் கேள்"
முகம் திருப்பிக் கொண்டார்...!!

அப்பா"வின்" ஞானத்திற்கு புலப்படுகிறதா..??
தயக்கத்துடன்தான் கேட்டேன்
"வின் ஞானமா..??"
அப்பாவின் கேள்வியும் பார்த்த பார்வையும்
எனக்கு புத்தி மழுங்கி விட்டதற்கான
அர்த்தங்களை மௌனமாய்
உதிர்த்துக் கொண்டிருந்தது...
அவர் பார்வையில் இருந்து
"வின்" என்று காணாமல் போனேன்..!!

அம்மா"வின்" ஞானத்தையும் சோதிக்கலாம்
அடுப்பங்கரையில் கையும் கரண்டியுமாக
கிண்டிக் கொண்டிருந்தவளை
நான் கொஞ்சம் கிண்டினேன்
அம்மா "வின் ஞானம்" என்றால் என்ன..??
யார் மீது கோபமோ
கையிலிருந்த கரண்டி
"நங்" என்று மண்டையில் இறங்கியதில்
"வின்" என்று வீங்கித்தான் போனது
என் ஞானம்...!!

வலியோடு முடிந்த இந்த
வின் ஞான கவிதை
என்னை நையாண்டி செய்து
சிரித்துக் கொண்டிருக்கிறது...!!

எழுதியவர் : சொ.சாந்தி (14-Nov-15, 8:49 pm)
பார்வை : 113

மேலே