வஞ்சி மன்னன் - சரித்திரத் தொடர்- பாகம் 6 நடுவிலிருந்து போகும் கதை

.................................................................................................................................................................

பாணிணி முனிவரின் சீடர் கந்தவேள் என்பவர் அணிமாவின் அண்ணன் முறை. அணிமாவை விட ஐந்து வயது மூத்தவரான அவர், இப்போது பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடித்து குருகுல வாசத்தில் இருந்தாலும் அவர் கண்ணுக்கு மட்டும் அணிமா இன்னும் பாவாடை தடுக்க ஓடும் சிறு பிள்ளையாகவே தென்படுவாள். பாணிணி முனிவரின் ஆசிரமத்துக்கு அணிமா வருகிற போதெல்லாம் கந்தவேளின் சீராட்டோடு நைவேத்தியப் பலகாரங்களும் நிறையக் கிடைக்கும்.!

பணியிலிருந்து விலக்கப்பட்டது அணிமாவுக்குச் சங்கடமாக இருந்தாலும் அவள் பாதங்கள் சுதந்திரம் பெற்றது ஒரு வகையில் நல்லதாகவும் பட்டது. மகாராணி மீது தொடுக்கப்பட்ட இந்த சதியை பாதாள லோகம் சென்றாவது கண்டுபிடித்தாக வேண்டும்..! ஒரு தேன்குழலை எடுத்துக் கடித்தபடி கந்தவேளிடம் நடந்தவற்றை சொல்லிக் கொண்டிருந்தாள் அணிமா. பொற்காசு முடிச்சை பெருமை பொங்கக் காட்டினாள்.

“ இந்த க்ஷத்திரியர்கள் நன்றி மறந்தவர்கள்..! பிறர் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாதவர்கள்..! ” என்று கூறினான் கந்தவேள்.

“அப்படி எதுவுமில்லை. மகாராணியார் என்னை சந்திக்காமல் போனது ஏமாற்றம்தான் என்றாலும் அதற்காக இப்படியெல்லாம் நீ சொல்லக்கூடாது..! ” என்றாள் அணிமா.

“ உங்கள் மகாராணி மாறி விட்டராமே? இப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறாராம்..! ராஜ்ஜியத்தில் என்ன நடக்கிறது என்றறிய தூதுவனை நியமித்துக் கொண்டாராம்..! ”

“எல்லாம் கணவர் கைபட்ட யோகம்..! அன்றிரவு மகாராஜாவுடன் ராஜகாளியம்மன் கோயில் சென்றார். நெடு நேரம் கழித்துதான் அந்தப்புரம் வந்தாராம்..! மன்னர் வழங்கியிருப்பார்..! ”

“ எதை? அறிவுரையையா? ”

“ சீ..போ..! அதை இங்கு வைத்துச் சொல்ல முடியுமா? எல்லாவற்றையும்தான் வழங்கியிருப்பார்..! ”

“ சரி, சரி, நீ ஏன் வெட்கப்படுகிறாய்? உனக்கே வழங்கியது மாதிரி? இருந்தாலும் மணிமாறனின் தலைவிதி இப்படி முடியும் என்று எதிர்பார்க்கவே இல்லை அணிமா..! எல்லையில் வசித்தவன்..! எந்தப் பகைவன் முடித்தானோ..? என்னைக் கேட்டால் நீயும் கவனமாக இருந்து கொள்..! இப்படி தோழி கையால் பொற்காசு வாங்கிக் கொள்ளாதே..! எந்தப் பரிசிலையும் ராஜ சபையில் வைத்துக் கொடுத்தால் மட்டுமே வாங்கிக்கொள்..! ”

“ நீ சொல்வது சரிதான். வேறென்ன செய்தி அண்ணா? “

“ ம்.. ம்.. நடக்கவிருந்த ராஜகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் மாதக்கணக்கில் தள்ளிப்போய் விட்டது..! இதில் வேடிக்கை என்னவெனில் நல்ல முகூர்த்தம் வாய்த்தும் கூட நிமித்தம் பார்த்து சமயம் சரியில்லை என்று சொல்லி விட்டார் பூசாரி..! பாணிணி முனிவரும் ஒப்புக்கொண்டார்..! ”

“ அப்படி என்ன நிமித்தமோ? ”

“ மகாராணி ராஜகாளியம்மன் சந்நதியை அடைந்ததும் அங்கிருந்த தூண்டா மணி விளக்கு அணைந்து விட்டதாம்..! மகாராணியை அனுப்பி விட்டு மன்னர், மகாராணி இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்து பார்த்திருக்கிறார் பூசாரி. சில கணக்கீடுகளின் அடிப்படையில் இப்படிச் சொல்லியிருக்கிறார்..! ”

“ எப்போது சொன்னார் இதை? ”

“ வளர்பிறை தசமியன்று..! ”

“ ம்.. ம்.. அண்ணா ! எனக்கொரு உதவி செய்கிறாயா? ” அவன் காதில் கிசுகிசுத்தாள்.!

“ அதற்கென்ன, அப்படியே ஆகட்டும்..! ஆனால் நீ பத்திரம் ” என்றான் கந்தவேள்.

ஆசிரமத்துக்குள் அணிமா செல்ல, சற்று நேரத்தில் கந்தவேள் வெளியில் விரைந்தான் புரவியில்..!

முதலில் அவன் சென்றது மணிமாறன் வாழ்ந்த வீட்டுக்கு..!

பச்சைக் குழந்தை தவழ்ந்த வீட்டில் பழ வௌவால் குடியிருந்தது.. எதிரே தொலைவில் ஒரு சுடுகாடு..!
மனிதருக்கு உண்மை விளங்குமிடம் இரண்டு..! ஒன்று சுடுகாடு; இன்னொன்று குப்பைத்தொட்டி..!

சில கந்தைகளை தரித்து தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டான் கந்தவேள். அகோரி போன்று காணப்பட்டான்.

சுடுகாடு சென்றான்..!

“ஆசை தணியாமல் செத்த பிணம் ஏதேனும் இருக்கிறதா? ” வெட்டியானிடம் வினவினான் அகோரி. ஒரு பொற்காசு எடுத்து நீட்டினான்.

அகோரிகள் சுடுகாடே கதியாகக் கிடந்து வழிபாடு செய்வது வழக்கம். வெட்டியான்களுக்கு மட்டுமல்ல, பொது மக்களுக்கும் அகோரிகளிடம் ஒரு பயபக்தி இருந்தது. திருநீறு கொடுக்கும் அகோரிகள் சமயங்களில் பொற்காசுகளையும் அள்ளி வீசுவார்கள்..!

வெட்டியான்கள் அங்கிருந்த பிரேதங்களைப் பற்றி சொல்லத் தலைப்பட்டார்கள்.

“ அப்படி எதுவும் இல்லை ஐயா..! ஆனாலும் பாருங்கள்..! பெண்களுக்கு என்ன கெட்ட நேரமோ, பச்சிலையால் செத்து வந்தாள் ஒரு பணிப்பெண்; இன்னொருத்தி பெண் கைதி..! மார்பில் கத்திக் குத்துப்பட்டு இறந்திருக்கிறாள். அனாதைப் பிணமாக எங்கோ கிடந்தவளை இங்கே கொண்டு வந்து போட்டார்கள்..! கைதிக்குரிய உடைகளை களைய முற்பட்டிருக்கிறார்கள். அதற்குள் ஆள் நடமாட்டம் தென்படவே ஓடியிருக்கிறார்கள்..! ”

“ என்னய்யா சொல்கிறாய்? பெண் கைதி என்றால் அவளுக்கு தண்டனைக்காலம் முடிகிற வரையில் பாதுகாப்பு இருக்க வேண்டுமே? ”

“ ஆம்..! அப்படித்தான்..! ஆனால் இவள் கதை என்னவோ தெரியவில்லையே? ”

“ வேறென்ன? ”

“ மகாராணியின் தாய்க்கிழவி..! காசி யாத்திரை சென்று திரும்பியவள்..! மகாராணிக்கு மஞ்சள் தேய்த்து விடுகிறபோது தவறிப் போய் தடாகத்தில் விழுந்து இறந்து விட்டாள். அவள் சடலம் இங்குதான் கிடக்கிறது..! உங்களுக்கேற்ற சடலம் அதுவாக இருக்கலாம்..! ஏனெனில் கேள்வியோடு இறந்திருக்கிறாள்.. வந்து பாருங்கள்..! ”

வயது முதிர்ந்த தேகம் அழுக ஆரம்பித்திருந்தது. வலது கை ஆட்காட்டி விரல் நீண்டு சுட்டும் பாவனையில் இருந்தது. இடது கையில் பட்டாடைத் துண்டும், கற்றை நீளக் கூந்தலும்..! நறுமணம் வீசும் கூந்தல்..! மகாராணியின் ஆடை..! கூந்தலும் அவருடையதே..!

கந்தவேள் அடுத்துச் சென்றது சிறைச்சாலை அதிகாரியான தன் நண்பனைப் பார்க்க..!

“ பெண் கைதியா? இல்லவே இல்லை..! இருந்ததே இரண்டு பெண் கைதிகள்..! அவர்களையும் சில நாட்களுக்கு முன்புதான் அரசர் முன்னிலையில் சுண்ணாம்புக் காளவாயில் வீசி ராஜ தண்டனை நிறைவேற்றினோம்..! ”

“ சில நாட்களுக்கு முன் என்றால் எப்போது? ”

“ வளர்பிறை சப்தமியன்று..! ”

முகம் முழுக்கக் குழப்பத்துடன் திரும்பினான் கந்தவேள்.

விடிந்தது..

அன்றைய தினம் அணிமா தன் நெருங்கிய தோழியான மல்லிகாவைப் பார்க்க அந்தப்புரம் சென்றாள். அது ஒரு மதியவேளை.! சூரியன் சுட்டெரித்த நேரத்தில் உண்ட களைப்பு எங்கும் பரவியிருந்தது. குமரிக்கோட்டத்தில் மல்லிகாவின் மடியோடு மடி பொருத்தி கிசுகிசுத்துக் கொண்டிருந்தாள் அணிமா..

மல்லிகா விசாரித்தாள்.. “ அணிமா.. உன்னைப் பணியில் அமர்த்தியது பழைய அரசர்..! அப்படியிருக்க மகாராணி உன்னை விலக்கியிருக்கிறார். இது குறித்து மன்னரிடம் தெரிவித்தாயா? மந்திரி அல்லது எண்பேராயத்தவர்களிடம் தெரிவித்தாயா? ”

இல்லை என்று உதடு பிதுக்கினாள் அணிமா. “ ராணியாரின் விகிதம் இருக்கிறது – இவர்கள் என்ன மறுத்தா சொல்லப் போகிறார்கள்? ”

“ ஓ பெண்ணே..! ” செல்லக்கோபம் காட்டினாள் மல்லிகா. “ மரபு என்று ஒன்று இருக்கிறதல்லவா? ”

மகாராணி மரபுகளை மதிக்கிற பிறவியில்லை..! அன்று மன்னர் முன்னிலையில் தளபதியை ஆணையிட்டு அவமானப்பட்டது இப்போது நினைவுக்கு வந்தது.

மகாராணி நெடுங்கூடம் வழியாக துள்ளல் நடையுடன் தோழிகள் புடைசூழ நந்தவனம் விரைவதை சாளரத்தின் மூலம் பார்த்தாள் அணிமா..!

பளிச்சிடும் மெல்லிய பட்டாடை என்ன? ஜொலிக்கும் அணிகள்தாம் என்ன? மலர் சூடிய கூந்தல் அலங்காரத்தை வர்ணிக்க கம்பன் மகன் அம்பிகாபதி வர வேண்டும்.. ! கலகலவென்ற கைவளையோசை, சலசலவென்ற கால் சிலம்போசை.. அப்பப்பா..!

தோழி திரும்பவும் ஞாபகப்படுத்தினாள்..! “ சொல்லி விடு..! ”

அணிமா அப்படி செய்யத்தான் வேண்டுமா என்று மனதில் நினைத்தாள். குறிப்பறிந்த மல்லிகா, “அணிமா உன் நல்லதுக்குத்தான் சொல்கிறேன் ” என்றவள், “ இந்த மகாராணியின் நடத்தை விசித்திரமாக இருக்கிறது..! பகலில் எங்கும் போவதில்லை..! ராஜகாளியம்மன் கோயிலுக்கும் செல்வதில்லை..! இரவில் மஞ்சத்தில் பதுமையை படுக்க வைத்து விட்டு அந்தப்புரத்தை அடுத்த காட்டில் யாரோ ஆண்மகனை அடிக்கடி சந்திக்கப் போகிறாராம்..!- அதுவும் மன்னனில்லாத வேளையில்..! ”

“ மாறுவேடமிட்டு வரும் மன்னரைச் சந்திக்கப் போகிறாரோ? ”

“ சே..! சிந்தித்துப் பார் அணிமா..! கணவரைத் திருட்டுத்தனமாக சந்திக்க அவசியமென்ன? மாறு வேடமிட்டு நகர்வலம் போகும் மன்னர் நடுநிசியில் அந்தப்புரத்தை அடுத்த காட்டில்தான் திரிவாரா? காடு வரை வந்தவருக்கு அந்தப்புரம் வர இயலாதோ? அது மட்டுமல்ல, பழைய விசுவாசமான பணிப்பெண்கள் அனைவரையும் ஏதேதோ காரணம் சொல்லி வெளியே அனுப்பி விட்டார்கள், உன்னை அனுப்பியதைப் போல..! அவர்களும் அரசவையைச் சந்திக்க தயங்குகிறார்கள், ஏதோ பயத்தால்...! அதுவும் உன்னைப் போல..! ”

“ அப்படியா? ” ஆச்சரியப்பட்டாள் அணிமா.. “ இது நான் கேள்விப்படாத விவகாரமாய் இருக்கிறதே? இருப்பினும் எனக்கு பயமெல்லாம் கிடையாது..! அவசியமில்லை என்று நினைத்தேன்.. அவ்வளவுதான்..! ”

“ ஆமாம், ராணியார் ஏன் இப்படி ஆனார்? “ அணிமா கேட்டாள்.

“ அதை ஏன் கேட்கிறாய்? அந்த அடைக்காய் மரத்தில் தாஹினி குடியிருக்கிறாள் அல்லவா? அவள் மகாராணியைப் பிடித்து ஆட்டுகிறாளாம்..! ! ! “

“ தாஹிணிக்கு வேறு வேலை ஏதும் இல்லையோ? ”

“ அடிப்போடி..! உன்னிடம் சொன்னேனே? சில நாட்களுக்கு முன்பு, குறி சொல்லும் குறத்திகள் இங்கு வந்திருந்தனர். அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டதை நான் கேட்டேன்..! இப்படி தாஹிணி பீடித்த பெண்ணென்றால் நாம் வந்திருக்கவே மாட்டோமே என்று அவர்கள் நொந்து கொண்டனர்..! என்னை கண்டதும் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டனர்..! ”

தோழிகள் வேறு பேச்சுக்கு மாறினார்கள்.

“ உன் புது வீடு கிரகப்பிரவேசம் என்ன ஆனது? ” மல்லிகாவைக் கேட்டாள் அணிமா..

“ நல்ல முகூர்த்த வேளை வாய்த்தும் கூட என் மாமனார் தவறி விட்டார்..! சமயம் சரியில்லை என்று தள்ளிப் போனது...! இனி ஒரு வருடம் கழித்துதான் எதுவும்..! ”

“ அடடா ! ” என்று வருந்திய அணிமா தேற்றும் பாவனையில் கூறினாள், “ காலம் சீக்கிரம் ஓடிவிடும்..! எல்லாம் சரியாகி விடும் மல்லிகா..! “

குமரிக்கோட்டம் விட்டு வெளியே வந்த அணிமா மல்லிகாவின் கூற்றை சோதிக்க விரும்பினாள்..

அரசியார் நந்தவனத்தில் பந்தாடிக் கொண்டிருப்பார்.! தன்னை சந்திக்க உடன்படுகிறாரா, பார்க்கலாம்..!

அனுமதி மறுக்கப்பட்டது ...! ! !

தொடரும்

..................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (15-Nov-15, 1:51 pm)
பார்வை : 188

மேலே