விஞ்ஞானம் - போட்டிக் கவிதை

ஆறு குளம் வாய்க்காலென்று
அத்தை மகளே குளித்தாலும்
கடந்து போன கண்களில்
காமமில்லை அன்று
அஞ்சி அஞ்சி பெண்களெலாம்
அறையில் பூட்டிக் குளித்தாலும்
அகிலம் பார்க்கச் செய்கிறது
விஞ்ஞானம் இன்று
*
மாட்டுச் சாண உரங்களிட்டே
மகசூல் கண்டன பயிர்கள் அன்று
மரபனு மாற்றி மண்ணுரம் மாற்றி
வீரியம் மாற்றி விடத்தினையூற்றி
விழுங்கச் சொல்கிறது விஞ்ஞானம் இன்று
*
அரையடி ஆழம் தோண்டினாலே
அமிர்தமாய் வந்தது ஊற்று அன்று
ஆயிரமாயிரம் அடிகள் தோண்டி
அண்ணாந்து பார்க்கிறது விஞ்ஞானம் இன்று
*
கயிற்றுக் கட்டிலோ கட்டாந் தரையோ
கண்ணில் உறக்கம் படுத்ததும் அன்று
உள்ளங் கையில் உலகை தேய்த்து
உறக்கம் பறித்தது விஞ்ஞானம் இன்று
*
மரம் செடி கொடிகளிளெல்லாம்
மனிதன் கண்டான் மருந்து அன்று
மாத்திரை மருந்தும் தந்து தந்தே
மரணம் தந்திடும் விஞ்ஞானம் இன்று
*
சந்திரன் சூரியன் வெள்ளியெல்லாம்
சாமியென்றே சொன்னான் அன்று
பத்திரம் எழுதி பட்டா போட்டு
கிரகத்தையும் கிரையம் பேசிட
விளம்பரம் செய்யும் விஞ்ஞானம் இன்று
*
அகிம்சை அன்பெனும் ஆயுதம் கொண்டே
அகிலம் வென்றான் மனிதன் அன்று
ஆயிரமாயிரம் கோடிகள் கொட்டி
அனு ஆயுதம் வாங்கிடும் விஞ்ஞானம் இன்று
*
விஞ்ஞானம் வேண்டாமென்று விட்டெறிய சொல்லவில்லை
மெஞ்ஞானம் இல்லா கையில் கிடைக்கின்ற விஞ்ஞானமோ
நாய் பெற்ற தெங்கம்பழமன்றோ அதனால்
நாட்டுக்கேதும் நன்மை உண்டோ.?
*
அகிலத்திற்கு நன்மை தரும் ஆக்கம்தானே விஞ்ஞானம்
அதை நீயும் புரிந்துக்கொண்டால் அதுதானே மெஞ்ஞானம்

எழுதியவர் : மணி அமரன் (15-Nov-15, 7:24 pm)
பார்வை : 493

மேலே