மீண்டும் மீண்டும்--போட்டிக் கவிதை
மீண்டும் ஒரு முறை
வானம் கிழிந்து
பொத்துக் கொண்டு
ஊற்றுகிறது
தாறுமாறாகக் கிழிந்த
சோளக் கொல்லைப்
பொம்மை மக்கி
நீரில் ஊதிப்போய்
பூதமாய் நிற்கிறது
நாளைய நடவுக்கான
நாற்றுகள் நனைந்து
அச்சு அசலான
பச்சை ஆறென
நசனசவென பச்சயம்
வழிந்து ஓடுகிறது.
ஒழுகிடும் கூரையின்
ஓட்டையில் தெரியும்
ஒளியினைப் பார்த்து
கிழவியின் சுருங்கிய
உதடுகள் எந்நேரமும்
சாபத்தைக் கொட்டி
உச்சரித்த வண்ணம்
கோணிக் கிடக்கிறது.
வீட்டுப் பூனையொன்று
அங்குமிங்கும் நகராமல்
அடுப்புக்குப் பக்கத்தில்
படுத்துக் கொண்டு
பூனையும் எலியும்
ஆடும் விளையாட்டை
கனாக் கண்டு
பிராண்டிக் கொள்கிறது
எப்போதும் போல
மழைக்கு ஒதுங்கிய
பூச்சிகள் பாவம்
தொங்கும் சிலந்தியின்
வலையில் விழுந்து
எட்டிக் கால் போட
இயலாமல் சிக்கி
எந்த நேரமும்
வரும் மரணத்தை
எதிர்நோக்கி இருக்க
மீண்டும் மீண்டும்
பெய்யும் இம்மழையில்
மாறாதப் பழைய
மலையினைப் போல
பழைய பொருள்களில்
ஒன்றாய் அந்தக்
கிழடுகள் இரண்டும்
நாற்றமடிக்கும் வரை
அழுகிக் கொண்டு
அங்கேயே கிடந்தன.
.