சொல்லிவிட்டு வா

மழையே மழையே இனி நீ
எங்கே எப்பொழுது எவ்வளவு என
முன்னறிவித்து பின் வா

நாங்கள் நின் வருகைக்காக
சாக்கடை மழைநீர் வடிகால்
ஏறி குளம் தயார்நிலை வைப்போம்

மற்றைய நாட்கள் எமக்கு
ஏரி குளங்கள் குடியிருக்கவும்
சாக்கடை வடிகால்கள் குப்பை
நெகிழிகள் நிரப்பவும் தேவை

எங்கள் தயார் நிலைகண்டு
நெகிழ்ந்து உன் கொடையை
தாராளமாக்காதே எங்கள்
கொள்ளளவு குறைவே

நெடு நாட்கள் ஆகிறது
உன்னை நம்புவதை விட்டு
காசு வீசி எறிந்தால்
நீர் வரும் என்ற
பிரமையில் உள்ளோம்

இங்கே உனைத்தேக்க ஊரில்
குளமும் ஏரியும் வீட்டில்
கிணறும் இல்லை

நீ வீம்புடன் கொட்டித் தந்தால்
நாங்கள் விரைவாய் வீதி வெட்டி
உன்னை சாக்கடையுடன் கலந்து
விரட்டிடுவோம் உன் பிறப்பிடத்திற்கு

அந்தச் சமரில் வென்றோம் என
மார்தட்டியும் கொள்வோம்...
ஆதலின் சொல்லிவிட்டு வா
சொகுசாய் சிறிது தூவிச் செல்

நாங்கள் காசுக்கு வாங்கிக் கொள்வோம்
கடலிலிருந்து பிரித்துக் கொள்வோம்
அண்டை மாநிலத்திலிருந்து கெஞ்சிப்
பிச்சைக் கேட்டுக் கொள்வோம்
--- முரளி

எழுதியவர் : முரளி (16-Nov-15, 4:06 pm)
சேர்த்தது : முரளி
Tanglish : sollivittu vaa
பார்வை : 261

மேலே