மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும்
ஆண்டும் கூடத்
தூண்டில் போட்டுத்
தூண்டித் துண்டாடும்
பதவியெனும் பாழும்
நாற்காலி!

உலகப் பந்தின்
ஒரு துளி இடந்தனை
சிலகாலம் வாழும் இந்த
மலசல மாசு தாங்கிய
சின்ன வாழ்வினுயிர்
தன் பெயரில் மாற்றிட
கலகம் செய்யும்
மீண்டும் மீண்டும்..

சுற்றம் மற்றும்
சூழுயர் உற்றம் தனில்
குற்றம் கண்டே
கூத்தாடும் நெஞ்சம்
மீண்டும் மீண்டும்.

பசி, காமம்,
பழியுடன் குரோதம்
பேதம், தற் பெருமை
ஓதும் மனிதம்
மீண்டும்.. மீண்டும்…

ஆயின்…

பதவி பட்டம்
பணமுடன் புகழும்
உதவி ஆகுமோ
உயிரொடுங்கு வேளை?
கதறி அழுதுக்
கலங்கி வேண்டினும்
சிதறிய காலம்
சேருமா மீண்டும்?

மண்ணில் வாழ்வு
மறைந்து முடியுமெனக்
கண்ணில் காணும்
காட்சிகள் உரைப்பினும்
என்றும் இப்படியே
இருக்கப் போவதுபோல்
தோன்றும் ஆசைகள்
மீண்டும் மீண்டும்..

எனவே நான்

மாண்டும் தமிழ் மண்ணில்
தோன்ற வேண்டும்
தமிழே உனைச் சுவைக்க
மீண்டும் மீண்டும்…

சீண்டும் சின்னச்
சிந்தனை தவிர்த்து
மீண்டும் மீண்டும்
தமிழே உனைத்
தீண்டும் இன்பம்
தெய்வ அருளால்
வேண்டும் வேண்டும்

எழுதியவர் : முத்துமணி (17-Nov-15, 10:57 am)
சேர்த்தது : முத்துமணி
Tanglish : meendum meendum
பார்வை : 68

மேலே