வஞ்சி மன்னன் - சரித்திரத் தொடர்- பாகம் 7 நடுவிலிருந்து போகும் கதை
............................................................................................................................................................................................
அணிமா, பாணிணி முனிவரின் ஆசிரமத்தில் ஒடுங்கியிருந்தாள். அவள் யோசிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.. நிறைய்ய.. நிறைய்ய..
முதலில் சம்பவங்களை வகைப்படுத்த வேண்டும்..
ஒன்று : கடுங்கண் சேரலாதர் திடீரென்று இறக்கிறார்; மதுரமொழிச் சேரலாதர் அரசராகிறார்; கீர்த்திவதனா அரசியாகிறார்.
இரண்டு: கீர்த்திவதனாவின் குருகுலத்து மாணவர் சதியில் ஈடுபடுத்தப்படுகிறார்.
மூன்று: பணிப்பெண் நச்சிலையால் மரணமடைகிறாள்.
நான்கு: அரசி சதியிலிருந்து தப்பிக்கிறாள்.. சதிகாரர்கள் தப்பிக்க வசதியாக மணிமாறன் கொல்லப்படுகிறார் – அதுவும் துரிதமாக... உண்மை வெளிச்சத்துக்கு வருமுன்..!
ஐந்து : பெண் கைதி மார்பில் குத்துப்பட்டு அனாதைப் பிணமாகக் கிடக்கிறாள்.
ஆறு : பாணிணி முனிவர் போட்ட புதிர்- காட்டிலாடும் மீன்; ஆற்றிலாடும் மான்..!
ஏழு : கீர்த்திவதனாவைக் குறித்து உலாவும் வதந்தி....!
எட்டு : தாய்க்கிழவியின் மரணம்..! சுட்டும் பாவனையில் நீண்டிருந்த விரல்.!
ஒன்பது : ராஜகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் தள்ளிப் போகிறது..! சுப முகூர்த்தம் வாய்த்தும் சமயம் சரியில்லாமல் போவது எப்போது? மல்லிகா என்ன சொன்னாள்?
இந்த ஒன்பது கண்ணிகளுக்கும் ஏதேனும் தொடர்புண்டா? யோசித்தாள்; யோசித்தாள்; சித்தம் பித்தேற யோசித்தாள். அடடா! அப்படி இருக்கலாகாது..! தெய்வமே.. வேண்டாம்..! வேண்டாம்..! ஆயினும்......????
அணிமாவின் கண்கள் ஈரமாயின. விம்மி விம்மி அழுதாள்..!
அடுத்து அவள் என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து விட்டது ! பாணிணி முனிவரைச் சந்தித்தாள்.
அங்கே வேடனாக வந்த மதுரமொழி மன்னனையும் சந்தித்தாள்.
பாணிணி முனிவர் இருவரையும் வனதுர்க்கையம்மன் கோயிலை ஒட்டிய காட்டில் சந்திக்கக் கோரினார்.
அவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடல் கதையின் முதல் அத்தியாயமானது..
மன்னரைச் சந்தித்து விட்டு வந்த அணிமா கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து காணாமல் போனாள்.
மதுரமொழிச் சேரலாதர் தன் தந்தையைப் போலவே உணர்ச்சிகளை முகத்தில் காட்டாதவர். மகாராணிக்கோ மற்றவர்க்கோ அவர் முகக் குறிப்பு புலப்படாதது..! அரண்மனையில் அமுது பரிமாறும் சேடிக்கிழவி அறிவார்.. மன்னர் வாட்டமுற்றிருப்பதை..! உணவின் பாதி அப்படியே அல்லவா மீந்து வருகிறது...
அந்தப்புரத்து பணிப்பெண் பச்சிலை பாய்ந்து இறந்திருக்கிறாள்.. ராஜ்ஜியத்து எல்லையில் மாண்டு போன மணிமாறன் குடும்பம்..! அவையினர் வினா எழுப்பினர்..! பகை செய்த சதி என்று முடித்து விட்டாலும் அநேக வதந்திகள்..! அந்தப்புரத்தில் தாஹினி உலா வருவதாக ஒரு வதந்தி..!
காலையிலேயே அந்தப்புரத்திலிருந்து பணிப்பெண் மூலம் அழைப்பு வந்தது மன்னனுக்கு..!
“ பெருமானார் வாழ்க..! தேவி கீர்த்திவதனாவின் ஜென்ம தினமான இன்று, இரவு அவர் தங்களுடன் களிக்க விரும்புகிறார்..! மன்னருக்காக காத்திருப்பார்..! “
பதிலை எதிர்பாராமல் தோழி சென்று விட்டாள்...! – சொன்னால் மட்டுமென்ன தாங்கள் வந்து விடவா போகிறீர்கள் என்ற பாவனையில்; அப்படி நடந்துகொள்ள அவளுக்கு உத்தரவு..!
மன்னனுக்கு அது தர்ம சங்கடமாயிருந்தது..! இரவில் வருவதாக வாக்களித்து, செய்தி அனுப்பினான்.
அந்தப்புரம் இரவில் இன்னொரு சந்திர மண்டலமாக இருந்தது. பூக்கள் மற்றும் தூப தீபங்களின் அலங்காரம்..!
மதுரமான விருந்துண்ட களைப்பில் மதுரமொழிச் சேரலாதன்..!
மஞ்சத்தில் இன்னொரு விருந்தும் அவனுக்கு இருந்தது. துடியிடை ஒடிய ஒடிய துள்ளலுடன் ஆட ஆரம்பித்தாள் கீர்த்திவதனா..!
“ தீம்..தீம்..தீம் தரிகிட தீம்.. தீம்.. “
ஆடல் மட்டும்தானா? ஐம்புலன்களுக்கும் ஒரு சேர இன்பம் கொடுத்தாள் அவள்..! அபிநயம் பிடித்தபடி அவனை அணைத்தும், இதழ் பதித்தும்... நெருக்கத்தில் உடல் பாகங்கள் உரசி, உரசி விலக...
மதுரமொழி கிறக்கத்தில் விழி மூடினான்..!
தன் இடக்காலை மஞ்சத்தில் வைத்து அவனைக் கொஞ்சி விலகினாள் மகாராணி.. சிலம்பு சப்தித்தது- ஆற்று நீரின் ஓசை போல்..! “ சல சல சல.. “ பொறிப் பொறியாய் வேலைப்பாடமைந்த சிலம்பு..!
மன்னன் கண் மூடிக் கிடந்தான்..!
வலக்காலை சுழற்றித் திருப்பினாள்- சப்தமில்லை..! சல்லடை வேலைப்பாடமைந்த சிலம்பு..!
மன்னன் கிறங்கிக் கிடந்தான் – ம்..ம்..ம் என்ற முனகலுடன்..!
தூபங்களால் கரும்புகை சுழன்ற சயன அறையில் மகாராணியின் நர்த்தனம் ஒன்றே மின்னலாக வெட்டி வெட்டிச் சென்றது..!
மகாராணி மன்னனை இறுக அணைத்தாள். அவளின் ஒருகை மேல் மன்னனின் தலை இருந்தது. தன் முகத்தால் மன்னனின் முகத்தை மூடியவள், மற்றொரு கையால் சிலம்பைத் தடவி ஒரு சிலம்பை மாத்திரம் பிரிக்காமல், கணுக்கால் வழியாக வெளியே எடுத்தாள். அதை மன்னனின் முதுகுப் பக்கம் கொண்டுசென்று.. பக்குவமாக..
“ க்ளக்.. “ சிலம்பு பிரியும் சத்தம்..!
மன்னன் வாயு வேகத்தில் மஞ்சம் விட்டுத் தரையில் படர்ந்தான். அது மட்டுமல்ல..! மகாராணியைத் தூக்கி மஞ்சத்தில் எறிந்தான்..!
“ ஆ..! “ என்ற சத்தம் எழுந்தது மகாராணியிடமிருந்து..!
அவளுடைய இன்னொரு கால் சிலம்பு இப்போது மன்னனின் கைகளில்..!
சிலம்பிலிருந்து பஞ்சணையில் விடுபட்ட பூநாகம் பலமுறை ராணியைக் கொத்தியது..! ராணி துடித்துத் துவண்டு அலறினாள் ஒவ்வொரு முறையும்..!
பலமுறை அவளைக் கொத்திய பாம்பு நச்சு தீர்ந்து, எவரும் சொல்லாமலேயே சிலம்புக்குள் புகுந்து ஒடுங்கியது..! என்னை ஒன்றும் செய்யாதே, நான் ஒரு பாவமும் அறியேன் என்பது போல் சுருண்டது. மதுரமொழி அந்தச் சிலம்பை மூடி, கைகளில் அணிந்தான்.
“ மன்னரே, என்னைக் காப்பாற்றுங்கள்..! ” மகாராணி மன்னரின் முகத்தை நோக்கினாள்.
சற்று முன் கிறங்கிக் கிடந்த முகமா இது? சிருங்கார ரசத்துக்கு சம்பந்தமே இல்லாமல், ருத்ரனைப்போல் முகம் மாறி, நரநரவென பற் கடித்து..!
பயந்து போனாள்....!
அங்கு தளபதி விஜயமல்லரிடம் ஒரு போர் வீரன் வேகமாக வந்தான்..! “ தளபதியாரே.. நான் பாணிணி முனிவரின் ஆசிரமத்திலிருந்து வருகிறேன். என்னுடன் கந்தவேளும் வந்தார். அவர் சத்திரத்துக்கு வடக்கு திசையில் செல்கின்ற வேளையில் இங்கு வஞ்சி நகரத்திலும் அவனைப் பார்த்தேன்..! இரண்டு இடத்தில் ஒருவர் எப்படி? ”
“ ஏய்..! ” விஜயமல்லர் பொங்கியெழுந்தார். தன் எண்ணங்களை மறைத்தவராக, பேரமைதி தவழும் முகத்தோடு வீரனுக்கு ஆணை பிறப்பித்தார்.
“ ஏதாவது சொல்லி வஞ்சி நகரத்துக் கந்தவேளை என் மாளிகைக்கு அழைத்து வா..! ” என்ற தளபதி வீரனின் காதில் ஏதோ கிசுகிசுத்தார்.
மாளிகைக்குள் கந்தவேள் வருவது தெரிந்தது. தளபதி சொல்லியபடி வீரன் கந்தவேளின் மார்பில் கை பதிக்க, “ வெடுக்“ என்று தள்ளியது கந்தவேளின் கை.
தளபதி தனக்குள் சிரித்துக் கொண்டார்.
இப்போது தளபதியும் கந்தவேளும் ஒரே தளத்தில் நின்றிருந்தனர். அங்கிருந்தே வாளை விட்டெறிந்தார் தளபதி.!
வாள் செல்லும் முன்னே ஒரு கை கந்தவேளைப் பிடித்திழுத்தது..! இழுத்த வேகத்தில் தலைப்பாகை கழன்று கூந்தல் புரண்டது..! – அணிமா..! அண்ணனைப் போல் மாற்றுரு கொண்டிருந்த அணிமா..!
வந்த உருவம் விற்சின்னம் பொறித்த தன் கணையாழிக் கரங்களால், பாய்ந்து வந்த வாளை முயல்குட்டி தடவுவது போல் முதுகில் தடவி, அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தாமல் திசையை மட்டும் மாற்றி, வந்த வழியே திருப்பி விட்டது..!
சேரலாதர்..! வந்தவர் மதுரமொழிச் சேரலாதர்..! மன்னவர்..! அணிமா பிரமித்தாள்..!
கத்தக்கூட முடியாமல் யாரோ சரியும் சத்தம்..!
தளபதி தொண்டையில் வாள் பாய்ந்த நிலையில் மடங்கி உட்கார்ந்திருந்தார்...!
அணிமாவும் அரசரும் அங்கு விரைந்தனர்.
“ அணிமா..! நீ உரைத்த காட்டிலாடும் மீன் இவர்தானே? ”
“ ஆம் மன்னரே..! ” மரியாதை மிகுத்துப் பேசினாள் அணிமா.. அன்று வேடர்களிடம் சிக்கிய போது இவர்தான் காப்பாற்றினார்..! இன்று தளபதியின் வாள் வீச்சிலிருந்தும் இவர்தான் காப்பாற்றியிருக்கிறார்..!
“ மன்னரே..! சேரர்களின் படை மாந்தர் மீன் பதக்கம் அணிவதில்லை..! ஏனெனில் அது பாண்டியர்களின் சின்னம். இதற்கு விதிவிலக்கு தளபதியார்தாம்..! இவருடைய மூதாதைகள் மதுரை மீனாட்சியம்மன்பால் பக்தி கொண்டவர்கள். அம்மனுக்கு மீன் பதக்கம் செய்வித்தபோது குழந்தையாயிருந்த தளபதிக்கும் அதே போன்று மீன் பதக்கம் செய்து அணிவித்தனர். அதைத்தான் இன்று வரை தளபதியார் சூடியிருக்கிறார். காடு போன்ற அவர் சென்னி முடியில் நீந்துகிற மீன் இதுதான்..! ”
தளபதிக்கு உயிர் இருப்பதை தெரிந்து கொண்ட மன்னன் அவரருகே குனிந்தார், “ நான் தங்களை என் தந்தையார் இடத்தில் வைத்திருந்தேன்..! ” மன்னனுக்குத் துயரம் மேலிட்டது..!
“ வீர்ர்களே..! தளபதியாரின் ஈமச்சடங்கை சகல மரியாதையுடன் நடத்துங்கள்..! அவர் சாம்பலைக் கூட மறந்தும் சுண்ணாம்புக் காளவாயில் வீசி எறிந்து விடாதீர்கள்..! ”
மன்னன் ஆணையிட்டான்.
தளபதியின் காதுகளில் அந்த ஆணை விழுந்தது; அவர்தம் கண் நிரம்பி நீர் விழுந்தது. ஆசிர்வதிக்க தூக்கிய கரம் ஜீவனின்றி தரையில் விழுந்தது..
தொடரும்
................................................................................................................................................................................................