வினாவாக நான்

குப்பையென நிரம்பிய
குழப்பங்களையும்
எல்லையற்ற கோபங்களையும்
அவ்வப் போதைய சோகங்களையும்
மெல்ல இறக்கி வைக்க
இமைகளின் தாழ்வாரத்தில்
இதயத்தை இருத்தி
இறைவனை தேடி
மௌனித்து தியானிக்கிறேன்

பேதை போன பாதையான
ஞானம் - மேதையென
வேடமிட்டு -பயணம்
தொடரப் பாதம் வைக்கயில்
சறுக்கி வீழ்வதாய்
அசரீரீ ...!!!?

என்னைப் போல இன்னொன்று
என் முன்னே நின்று
கண்களை குருடாக்கி
கற்பனையை பார்க்கச் செய்யும்
நிஜமற்ற -என் நிழலான ஜீவன்

ஊமையான மொழிகளில்
இதயத்தின் செவிகளை
தட்டி எழுப்பி
உன்னைப்பற்றிச் சொல்
யார் நீ ?? -என்று
என் புத்தியை - மௌனமாய்
பேசச் சொல்லியது

புதியது ஒன்றுமல்ல-இந்தப்
புரிதலின் விளக்கம்
சொல்வதாய்
பல முறை முயன்றும்
எனக்கு நானே - புரியாத
பைத்தியம் ஆனேன்

குட்டி இதயத்துள்
மொத்த உயிரும் அடங்கும்
வியூகம் கண்டு வியக்கையில்
விண்மீன் உண்டு - மழை அருந்தி
நாசிகளுக்குள் நட்ச்சத்திரத் துகள்
சிக்கியதான சித்தரவதை

இறந்த பின் எஞ்சும்
என் மீதி என்னவென்பது பற்றி
எண்ணம் ஓடுகையில்
வண்ணம் கரையும்
மழைக்காலப் பட்டாம் பூச்சியென
சிறகு தொலைத்து
உயிர் உடைகிறேன் ...

சிறகு முறிந்த பறவைக்கு
சொந்தமான - விரிந்த வானில்
விரிசல்கள் ஊடே மேலெழும்
ஈசல் பற்றி வன்மம் அடைகிறேன்

என்ன நான்?? - என்ற
கேள்வி பற்றிய
எல்லை மீறிய ஆவலுடன்
இன்னுமொருமுறை
விடை தேடும் முயற்சியில்
தோற்றுப் போகும்
நான் தான் நான்???- என
அடங்கி நிற்க்கிறேன்
வினாவாக நான் ????

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (18-Nov-15, 4:56 pm)
பார்வை : 81

மேலே