கவிதையுடனான சந்திப்பு
ஊர் தாண்டி
உறவுகள் பிரிந்து
படிப்பதற்க்காய்
ஒரு வீட்டில்
கட்டண விருந்தாளியாய்
தங்கியிருந்த காலம் அது
ஒருநாள் ....
இரவின் இமை தழுவிய
இருள் - பனியில்
குளியல் போட்டது
உடனிருந்த தோழி
விடுமுறையில்
வீடு சென்றதால்
தனிமையில் - என்
ஒருத்திக்கான படுக்கையில்
உறக்கம் தழுவ
தலையணை சாய்கையில்
இனம் புரியா ஒரு
புதுவித உற்ச்சாகம்
புரண்டு படுத்தும்
உறக்கம் என்னை
உதறித் தள்ளியது..!!
சலிப்புடன் எழுந்து
நாற்காலியில் உடல்
அமர்த்தி -
சிந்தனை சிப்பிக்குள் - என்னை
சிறை படுத்துகையில்
முத்தொன்று உருண்டு வரும்
சத்தம் தெரித்தது
திரும்புகையில்
தூரத்தில் ????
கவிதை தான் அது
கவிதயுடனான முதல்
சந்திப்பு -மௌனமாய்
திகைத்தேன்
கம்பன் ,செல்லி
சேக்ஸ்பியர், பாரதி
இன்னும் எத்தனையோ
காதலர்கள் கண்டதால்
அத்தனை வளைவு
நெளிவுகள் கொண்டு
எத்தனை லாவகமாய்
நடந்து வந்தது !!
அருகில் அமர்த்தி
கண்விழிக்க உதவியாய்
முன்னமே தயாரித்த
தேநீரில் ஒரு கோப்பை
விருந்தாளிக்கு
விருந்தோம்பல் செய்தேன்
அத்தனையும் வேண்டாம்
என்றதால் -
ஒரு கோப்பையில்
இருவரும் பருகினோம்
இனிய குரலில்
இங்கிதமாய்
பேசத் துவங்கியது
"அகத்தியன் படைத்த
அவர் மகளில்
கொஞ்சம் அள்ளி
பேனா திறந்து
மலர் பறித்து
என்னில் சூடு "
என்றது
கனிவான மொழி
கேட்டு - அக் கணமே
அப்படியே செய்தேன்
அது தான் என்
கவிதையுடனான்
முதல் சந்திப்பு
"மலர்களை பாடுகிறேன் "
அன்றிலிருந்து
நேசம் தொடர்ந்தேன்
இன்று வரை -கவிதை
என்னை அடிக்கடி
சந்திக்கும் வாய்ப்பு
அவ்வப் போது
கிடைத்து வருகிறது
தந்தை வழிச் சீர்
என்பதாலோ என்னவோ ...
சஹானா ஜிப்ரி
(கவிதையுடனான என் முதல் சந்திப்பை சில வார்த்தைகளால் வர்ணித்து எத்தி வைக்கிறேன் )