இதான் கடசி கத

இதான் கடசி கத!
இத்தோட கண்ண இறுக்க மூடி தூங்கிடனும்! சரியா? என்று கொஞ்சும் அதட்டுலுடன் தன் ஆசிரியர் தொழிலின் வார்த்தை சாயலுடன் கொஞ்சிய படியே கெஞ்சினான் தன் குழந்தையிடம்!

வாயில் விரல் வைத்து, அரை பார்வை அன்பாய் பார்த்து..உம் உம் என்று தலையாட்டிய படியே அவன் அப்பன் வயிற்றை கரத்தால் சுற்ற முயன்றான்.முடியாமலே தோற்றான்!

ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தானாம்....

அடேங்கப்பா! ஏங்க... ராஜா "இருந்தாராம்!" பிள்ளைக்கு மரியதைய சொல்லி தாங்க என்று பின் திரும்பி படுக்கையில் தனக்கும் பங்கு உண்டென்று அதட்டலாய் உடலை அசைத்து அருகில் அயர்ந்தாள்.

ஆமா! நீ வேற..உன் புள்ள பாட்டுக்கு நீ தான் வீணையா??
உனக்கு கூட விளங்குற மாதிரி பதிலா சொல்லிடலாம்... இந்த இருக்காப்ல பாரு, இவரு கேட்டு கத சொல்லலனா இருமாப்புல தொட கூட விட மாட்டாரு!!

சாமி கொடுத்த புள்ள..பழிச்சா உங்க ப்ரோமோஷன் அவுட்டு! என்று பதில் சொல்லி பேச்சை சுருக்கினாள்.

உம்...ஒரு ஊருல ஒரு ராஜா..என்ன பண்ணாரு! வயிற்றில் முகம் புதைத்து தொடர சொல்லி அழைத்தான்.

ஒரு பெரிய........ கோவில் கட்டினாரு!

அப்போ போனுமல அந்த கோயிலா...பெருசா...

ம்ம்..அது மாதிரி...

ஏன்ப்பா கோயில் கட்றாங்க?

உனக்கு தங்க, குளிக்க, சாப்பிட வீடு இருக்குல..? சாமிக்கு அது மாதிரி வேணும்ல? அதான் கோயில் கட்டுனாங்க!

அப்ப்பா! என்று கத்தி விடுக்கென புரண்டு வயிற்றின் மேல் ஏறி சாமி தான நமக்கு எல்லாம் கொடுக்குது.. அதுக்கு அதுவே ஒரு வீடு கூட கட்டாதாப்பா??

சாமி உனக்கு என்ன வேணும், அம்மாக்கு என்ன வேணும், அப்பாக்கு என்ன வேணும்னு எல்லாத்தையும் செயுதுள்ள அதான் மறந்துடுது! அதுக்கு தான் ராஜா கோவில் கட்டினாரு!

அது ஏன் ராஜா கட்டினாரு...அவரு லோகேஷ் அப்பா மாதிரியாப்பா ?நாமளும் கட்டலாம்ப்பா!

ராஜ கிட்ட நெறைய காசு, வைரம் எல்லாம் இருக்கும்...அதான் ஈசியா கட்டிட்டாரு என்று மனைவி குறிக்கிட..

நம்ம கிட்ட ஏன் ப்பா காசில்ல? ராஜா திருடுவாரா?

முடிஞ்சிச்சு! என்ற கண் ஜாடையுடன் மனைவியை பார்த்தான்!

நீ வாடா என் சாமி.. என்று அவனை உருட்டி தன மார்போடு புதைத்து கொஞ்ச, அவனோ "ராஜான்னா யாரும்மா?" என்று புள்ளி வைத்தான்.

ஒரு பெரிய காட்டுல நரி, முயல், குருவி, புலி எல்லாம் இருக்குல..ஆனா காட்டு ராஜா யாரு? சிங்கம் தான? என்று வினவி முடிக்கும் முன்னே...

அப்போ சிங்கமும் சாமிக்கு கோயிலு கட்டிருக்கா....
அம்மா அந்த பிளஸ் போட்டு கோவில்...பாட்டி வீட்டு பக்கத்துல...முன்னாடி பூரி விப்பாங்க மா.. நாளைக்கு போலாமா? என்று அம்மாவின் உதட்டை விரலால் வருடிய படியே கேட்டான்..
"ப்ரீத்தி வீட்டுல காசு இல்லையாமா..வெளில நிக்க வச்சுடாங்க...நம்ம கோவில கட்டுன ராஜா கிட்ட வாங்கிட்டு வரலாம்" என்றான்
நான்கு கண்கள் விழித்திருக்க இரண்டு கண்கள் மட்டும் தூங்கின!

எழுதியவர் : சத்யாதித்தன் (24-Nov-15, 6:50 pm)
சேர்த்தது : SATHYATHITHAN.A
பார்வை : 284

சிறந்த கவிதைகள்

மேலே