மூன்றெழுத்து ஆடை - உதயா

மூன்றெழுத்து ஆடையொன்றை
தூரிகையின் முனைதனில்
மைகளின் தயவினால்
கச்சிதமாய் தைத்துக்கொள்ள
நிர்வாண வார்த்தையுலகில்
மெய்தேடி அலைகிறேன்...!

உணர்ச்சியென எழுதிவிட்டு
அதன் தொடர்ச்சிதனை தொடுகையில்
கடிகாரத்தின் அலாரச் சத்தத்தில்
அது தொலைந்து போனது...!

கற்பனை குதிரையையும்
கற்பனையற்ற குதிரையையும்
எண்ணத்தில் ஏற்றிவைத்தும்
பார்வையில் தீட்டிவைத்தும்
அதன் கால் குழம்புகள்
கிழிய கிழிய விரட்டுகிறேன்
தொலைந்து போன தொடர்ச்சியோ
மீண்டும் தோன்றுவதாய் தெரியவில்லை...!

கட்டாந்தரையில்
படுத்துக்கொண்டு
கூரையின் ஓட்டிலிருந்த
ஓட்டையின் வழியிழே
தொடர்ச்சியை மீட்டெடுக்கையில்
என் குழந்தையின் அழுகையினால்
மீண்டும் கலைந்து போகிறது...!

கலைந்ததை தேடி தேடி
எண்ணக் குட்டையை குழப்பியும்
கண்ணெதிரே மேயும் மீன்களில்
நான் தொலைத்ததை தொட இயலவில்லை...!

நான் கசக்கி குப்பையாக்கிய
காகிதங்களை அப்புறப்படுத்த
என் அறையின் கதவை திறந்த
எட்டுவயது பணிப்பெண்ணில் கண்ணில்
கலைந்து போனதை கண்டெடுக்கிறேன்...!

அதை விரைவாக பிடித்து
என் காகித சிறையில் அடைப்பதற்குள்
கரைந்து கானலாகிறது
அவள் கண்ணீரின் தடம் வழியே...!

ஆடை தைக்கும் கருவிதனை
அப்படியே மேசையில் விட்டுவிட்டு
சன்னலை திறந்து பார்த்தேன்

பள்ளிக்கூட சிறுவர்களின்
" அதோ பாரு காரு " என்ற
பாடலின் வழியே
கரைந்ததை கட்டிட்டு பிடிக்கையில்
அதேவயது சிறுவன் பசியென
பிச்சையெடுக்கும் காட்சியில்
அது பிடிபடா தொலைவிற்கு
பறந்து மறைந்தது போனது...!

விரத்தியில் திரும்பி
மேசைதனை நெருங்கையில்
என் தூரிகை வெடித்து சிதறி
நான் எழுதி வைத்திருந்த
உணர்ச்சியை புரட்சி என்று
மாற்றிவிட்டு மாண்டுகிடக்கிறது...!

தொலைந்து கலைந்து
கரைந்து மறைந்து போன
தொடர்ச்சிகள் அனைத்தும்
பல்வேறு பரிமாணத்தில்
அந்த மூன்றெழுத்து ஆடைக்குள்
எரிமலையாய் மெய்யாகிறது...!

எழுதியவர் : உதயா (27-Nov-15, 9:17 am)
பார்வை : 85

மேலே