கார்த்திகை தீபங்கள்

கார்த்திகை தீபம் ஏற்றுங்கள்
கடுங்குளிர் நீங்கும் பாருங்கள்
பூத்திரி தீபம் ஏற்றுங்கள்
போர்த்தும் பனியை விரட்டுங்கள்
கார்த்திகை மாதக் குளிர்நீங்க
தட்ப வெப்பஞ் சீராக்க
சாத்திர மான மெய்ஞானம்
தமிழன் கண்ட விஞ்ஞானம்
கார்த்திகை தீபம் ஏற்றுங்கள்
காற்றைச் சுத்தம் செய்யுங்கள்
வார்த்த பசுநெய் தீபத்தால்
வாகனப் புகையை மாற்றுங்கள்
ஏத்தும் தீபம் பார்த்தீரா
எந்த மதத்தின் அடையாளம்
ஆத்திகம் சொல்லும் வழிபாடா?
அறிவியல் சொல்லும் வழி பாடும்
நேர்த்திக் கடனாய் நினையாமல்
நேர்த்தி யாக ஏற்றுங்கள்
நேர்த்தீ தீபம் ஏற்றுங்கள்
நெய்யால் தீபம் ஏற்றுங்கள்

கார்த்திகை மாதம் கார்காலம்
கடிக்கும் கொசுக்கள் வளர்காலம்
கார்த்திகை தீபம் ஏற்றுங்கள்
கனலால் கொசுவை விரட்டுங்கள்
பூத்திரி தீபம் ஏற்றுங்கள்
புலிக்கொசு ஓட விரட்டுங்கள்
ஆற்றல் மிக்க மின்விளக்கும்
அடுத்த விளக்கை ஏற்றிடுமா?
ஏற்றி வைக்கும் அகல்விளக்கும்
இன்னோர் விளக்கை ஏற்றிடுமே
ஏற்றும் தீபம் ஏற்றுங்கள்
இறைவ னென்றே போற்றுங்கள்
கூற்றை உதைக்கும் வழியாக
கொசுவை விரட்டப் பாருங்கள்
ஏற்றுந் தீப ஒளிகண்டே
இதுதான் தீபா வளியென்போம்

எழுதியவர் : சு.ஐயப்பன் (30-Nov-15, 8:40 am)
பார்வை : 387

மேலே