கஸல் கவிதைகள்
பூக்களையே
பாடிக்கொண்டிருப்பதால்
நமக்கும் வாடும்
தன்மை வந்துவிடுகிறது.
ஏழு நிறத்தையும்
காட்டிவிடுவதில்லை
எந்த வானவில்லும்
நிராகரிப்புகளைத்
தாங்கிக்கொள்ளாத இதயம்
வெறும் நினைவுகளை
தன் நிலங்களில்
விதைக்கிறது
வேர்கள் வெளியேயிருந்தால்
கிளைகள்
தழுவிக்கொள்ளக்கூடும்.
எந்த ஒப்பனையுமின்றி
உடலை நிர்வாணமாக
எடுத்துச்செல்லுங்கள்
அதுதான்
மரணத்தின் சாராம்சம்.
ஒரு நாள்
நிறங்களின் பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக்கொள்ளும்
ஓவியங்கள்.
நீங்கள் சிறகுகளை
சிலிர்த்தபடி
சிகரங்களைப்பாடுகிறீர்கள்
நானோ
முன்பாதத்தை அழுத்தி ஊன்றியவாறு பள்ளத்தாக்குகளைப்பாடுகிறேன்.
பேனாவின்
மைதெளித்து
பூக்களைத்திறந்துவிடும்
உங்களுக்கும்
வெளிச்சமின்றி
வேர்களோடு
புதைந்த எனக்கும்
பருவகாலம் வேறு வேறு.
மறக்காமல் எல்லாம்
எடுத்துக்கொள்ளப்
பழகியபிறகு
பயணச்சீட்டை
கிழிக்கின்றது விதி.
உயிர் வற்றும்வரை
கண்களில்
நீர் இறைக்கும்
கப்பிக்கட்டை
ஆசைகள்
தூங்காவனத்திலும்
சில தூங்குமூஞ்சி மரங்கள்.