தாயின் பெருமை

பகலென்றும் இரவென்றும் பாராது உழைத்திடும்
பாசமிகு அன்னையை மதி

அன்புக்கு இலக்கணமாய் ஆண்டவன் வடிவான
அன்னையை அன்றாடம் தொழு

பிள்ளையின் மகிழ்ச்சியை பெரிதாக எண்ணியே
உள்ளவரை உழைப்பவள் தாய்

உயிர்தந்து உனைக்காத்து உருதந்த அன்னையை
உயிருள்ள வரையிலும் போற்று

பெற்றதாய் போற்றவே பூமியில் வாழ்வதே
பிள்ளையாய் பிறந்தவர் கடன்

அந்திமக் காலம்வரை அன்புடன் துணையிருந்து
அன்னையைக் காப்பதுன் கடன்

பட்டினிக் கிடந்தாலும் பிள்ளையின் பசியினை
போக்கியே மகிழ்பவள் தாய்

அறியாமை அகற்றிடும் அறிவையும் அளித்திடும்
அன்புள்ள ஆசானே அன்னை

பிள்ளையின் மகிழ்ச்சியில் பெரும்சுகம் காண்பதே
பிறவியின் பயனென்பாள் தாய்

உனைஈன்ற தாயவளின் உள்ளத்தை மகிழ்வித்து
உலகத்தில் மனிதனாய் வாழ்


எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (2-Dec-15, 3:46 am)
பார்வை : 228

மேலே