கானல் நீரில் கட்டுமரமே நம் காதல்
சொல்லிட வேதனை நிறைய உண்டு,
அருகில் வந்துவிடு என் தேவதையே,
இருவரும் கொட்டி தீர்ப்போம்.
தீராத கனவுகளால்,
என் நினைவை எல்லாம் கனவாக்குகிறேன்,
அங்கே நீயும், நானும் மட்டுமே
கண்ணீர் மொழி பேசுகிறோம்.
வாயடைத்து கிடந்த அந்த நாட்களுக்கு,
இன்று பதில் சொல்கிறோம்.
துக்கங்களால் தொண்டை அடைக்குமாயின்,
இடமாற்றுவோம் நம் உமிழ் நீரை.
கனவுகள் சொல்லட்டுமா ?
பின்னிரவில், இருள் நிறையும் தனி அறையில் நான்.
எங்கேயோ இருந்தபடி என் அருகில் நீ.
நான் இருப்பதை உணராமல்,
அசையாமல் நீ.
உன்னை திடுக்கிட செய்யாமல்,
உன்னை பார்த்து கொண்டிருக்கிறேன் நான்.
இருவரும் தனிமையாய் இருந்து,
தனிமையை துறப்போம்.
யாவும் கடந்துவிட்டதாய் ஒரு பார்வை வீசுகிறாய்.
பதில் பேச தெரியவில்லை எனக்கு.
வாய் திறந்து சொல்லப்போகும் உனது பதிலை கற்பனை செய்கிறேன்.
"இனி, நீ தான் எனக்கு எல்லாம்"
ஒருவேளை, இப்படியாக கூட இருக்கலாம்,
"இனி, நான் தான் உனக்கு எல்லாம்"
அவள் பேசியதோ, "இனி, நமக்கு நாம் தானே எல்லாம்"
கண்ணீரும், உன் புன்னகையும் ஒன்றாய் பார்க்க
நான் மட்டும் வரம் பெற்றேனோ?
இல்லாத உன்னை தொட்டுபார்க்கிறேன்.
கண்ணீர் காயவேண்டிய கன்னகங்களா அவை?
நாம் உயிர் கொடுக்கும் குட்டி தேவதைகள்
முத்தம் தந்து ஆற்றட்டும் உன் கன்னங்களை.
அப்போது என்னை பார்த்து சிரிப்பாய்.
காரணம் கேட்ப்பேன், மீண்டும் சிரிப்பாய்.
கண் திறக்ககூடாது நான்,
திறந்ததுமே மறைந்துப்போகிறாய் நீ.
பாதி கண்திறந்த என் நிலையும், உணர்வும்
வார்த்தைகளில் சொல்லமுடிவதில்லை.
யாரோ சொல்லி உணர்கிறேன்,
கானல் நீரில் கட்டுமரமே நம் காதல்.
நம்மை கரை சேர்க்கும். சேர்க்கும். சேர்க்கும்.