நீர் கேட்ட நீதி - சந்தோஷ்

எப்போதும் பெய்திடும் மழைதானே என வெகு அஜாக்கிரதையாகவே மழையை வரவேற்றும் வெறுத்தும் கொண்டிருந்தவர்களை இந்த வருட வடகிழக்குப் பருவமழையானது சிறு சிறுத் துளிகள் பெரும் பெரும் துளியாக மருவி.. இணைந்து, பெருக்கெடுத்து பெருமழையாக வெள்ளச் சாட்டையை சுழற்றி..சுழற்றி அடித்து நீதி கேட்டு இந்தப் பூமியில் பொங்கியெழுந்தது. நல்லவன் எவன்.. கெட்டவள் எவள். நன்றியுடையவர். நன்றியற்றவர் என எந்த பாரபட்சமும் இன்றி தன் புகலிடத்தை ஆக்கிரமித்த இனம்..தன் வழிப்பாதையை அழித்த கொடூர இனம்... நீரின்றி அமையாது உலகு என படித்தும் நீர்நிலைகளை அழித்த இனம் இந்த மனிதயினம் தானே என எப்போதும் போல அல்லாமல் இம்முறை மற்ற மாவட்டங்களோடு குறிவைத்து தாக்கியது தலைநகர் சென்னையை. சென்னை மக்களை..!
ஓ! மழையும் ஊடக வியாதித்தன்மையை அறிந்திருக்கிறது போலும். ஆம்..! தலைநகர் பாதிக்கப்பட்டால் தானே தலைப்புச் செய்தியாகும்...!

அன்று நீதிக் கேட்டு
தீ வைத்தாள்
சிலப்பதிகாரத்து நாயகி.

இன்று நீர் கொட்டி
நீதி கேட்கிறாள்
பூகோளத்து மழைத்தோழி.


கடந்த நூறாண்டுகளில் பொழியாத அளவிற்கு பெய்திட்ட மாமழைதான். மறுப்பதற்கில்லை.
இதுவரை இல்லாத பெரும் பாதிப்புதான். மறுப்பதற்கில்லை.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் 1,218 மிமீ மழை பெய்துள்ளது.என்பது கூட பெரும் அதிர்ச்சிதான். மறுக்கவே இல்லை.

ஆனால், இப் பெருமழையை ஓர் அரசாங்கத்தால் சமாளிக்க முடியவில்லையே ஏன் ? நூறாண்டுக்கு முன்னிருந்த நிர்வாக வசதியின்மையா இப்போது இருக்கிறது.? நூறாண்டுகளாக விஞ்ஞானம் வளரவே இல்லையா.? மனித சக்தி பெருகவே இல்லையா? தொழில் நுட்பம் பெருகவில்லையா?

எல்லாம் வளர்ந்து இருக்கிறது.. எல்லாம் பெருகி இருக்கிறது. மக்கட் தொகையும் வளர்ந்து இருக்கிறது. கட்டிங்கள் பெருகி இருக்கிறது. கூடவே சென்னை மாநகரம் என்பது மாபெரும் குப்பைத் தொட்டியாகவும் மாறியிருக்கிறது. ஆனால் நீர்நிலைகளை, வடிநீர் கால்வாய்களை.. பாதுக்காப்பதில், சீரமைப்பதில் அக்கறை மட்டுமே வளரவே இல்லை.

அலட்சியம்.. அலட்சியம்.. அலட்சியம்.. ஒட்டு மொத்த மானுடத்தின் அலட்சியமே சென்னை மாநகரத்திலும் சாட்சியாக இருக்கிறது. இப் பெருமழையினால் உண்டான பாதிப்புக்கு ஒரே காரணம். இப்போது ஏற்பட்டது இயற்கை சீற்றத்தினால் உண்டான பேரழிவு அல்ல. இது முற்றிலும் மனிதப்பிழையே.. அரசாங்கத்தின் வக்கற்ற நிலையின் சாட்சியே..!

அரசாங்கம் என்பது இப்போது இருக்கும் ஆளும் கட்சியை மட்டும் குறிப்பிடுவது அல்ல. கர்ம வீரர் காமராஜர் ஆட்சிக்கு பின் வந்த கழக கட்சிகள் ஒவ்வொன்றையும் குறிக்கும். ஒவ்வொரு தலைமையையும் இக்கட்டுரை குற்றஞ்சாட்டுகிறது. கூடவே.. தமிழகத்தில் வாழ வந்த.. வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குடிமகனையும் இக்கட்டுரை குற்றஞ்சாட்டுகிறது. இக்கட்டுரை எழுதும் நானும் கூட ஒரு முக்கிய குற்றவாளியே...!



**அரசாங்கமும் அதன் குடிமக்களும் குற்றவாளிகளா ? ஏன் ? எப்படி ? :
--------------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த 1980களில் சென்னையில் 600 நீர் நிலைகள் இருந்தன, ஆனால் இப்போது அதில் மிகச் சொற்பமானவையே எஞ்சியுள்ளன. மீதி நீர்நிலைகள் என்னாயிற்று ? எல்லாம் கட்டிக்காடுகளாக மாறிவிட்டன.. பிறகு பொழிகின்ற மழைநீர் எங்குச் செல்லும்? . எங்குத் தேங்கும். ?குடியிருப்புகளில் புகாமல் வேறங்குதான் செல்லும். ?

தமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாக சுருங்கியுள்ளன, அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போயின

சென்னை மாநகரை வடிவமைக்கும் போதே மழை நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதற்காக போதுமான கட்டமைப்புகளும செய்யப்பட்டன. என்றாலும் தலைநகர் எனும் தகுதியில் தறிக்கெட்டு ஆடிய சென்னை வாசிகளும் வந்தேறிகளும் அரசுகளும் அக்கட்டமைப்புகளை சரியாக பராமரிக்கவில்லை. குப்பையை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என விளம்பரப்படுத்தி அறிவுறுத்தும் அளவிற்கு நம் மக்களின்/ நமது ஒழக்கம் இருந்திருக்கிறது. என்றாவது சென்னையிலுள்ள ஒரு வீதியை யாரேனும் ஒரு சிறுக் குப்பை கூட இல்லாமல் பார்த்தது உண்டா ? வீதியில் சாலைகளில் உலாவும் குப்பைகள் சாலைகளின் இருமருங்கிலும் உள்ள வடிகால்களை நிரப்பி விடுகிறது. பிறகு பெருமழை வந்தால் மழைநீர் எங்குதான் செல்லும்..? சாலைகளில் தானே தஞ்சம் புகும் .

மேலும்,

சென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன. கோடி கோடியாக மத்திய அரசிடம் கடன் வாங்கும் மாநில அரசு.. ஒவ்வொரு நிதியாண்டிலும் நீர்நிலைகள் தூர்வாறவும், மழைநீர் , கழிவுநீர் வாய்கால்களில் குப்பைகளை அகற்றவும் , புதிய வடிகால்களின் கட்டமைப்புக்கான திட்டத்திற்கு என்று நிதி ஒதுக்கும் அரசு, நிதிகளை சரியாக திட்டமிட்டு செலவழித்து செயல்பட்டிருந்தால் இந்த பெருமழையில் சாலைகள் மூழ்கியிருக்காது அல்லவா ? குடியிருப்புகள் மிதந்து இருக்காது அல்லவா ?


இப்போது சொல்லுங்கள். நீர்நிலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பேணிப் பராமரிக்காத நிலையில் , சென்னையில் கூவம், அடையாறு போன்ற நதிகளை இணைக்கும் இயற்கை கால்வாய்களும், வடிகால்களும் இருப்பதை கூட சரியாக முறையாக பராமரிக்காத நிலையில் பருவநிலை மாற்றத்தால் அசாதாரணமான அளவுக்கு மழை பெய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது என்றால் இந்த பெரும் பாதிப்புக்கு யார் காரணம் இயற்கையா ?
மனிதனா ?


வெகு அஜாக்கிரதையாக, பொறுப்பற்று நாம் மாநகர தெருக்களில் சாலைகளில்.. நீர்நிலைகளில் வீசிய ஒவ்வொருத் துண்டு குப்பைக்கள் தான் ஆறுகளை , ஏரிகளை, குளங்களை மாசு ஏற்படுத்தி அவைகளை குப்பைத் தொட்டியாக மாற்ற வைத்திருக்கிறோம். நாம் வீசிய ஒவ்வொருத் துண்டு பிளாஸ்டிக் கழிவுகள் தான் அமைக்கப்பட்ட கழிவு நீர் , மழைநீர் வடிகால்களை அடைத்திருக்கிறது.
.
நாம் வீசிய குப்பைகளால்.. செய்த அசுத்தங்களால் நீர்நிலைகள் எவ்வாறு மோசமாக சீரழிந்திருக்கிறது என்பதற்கு சென்னையிலுள்ள போரூர் ஏரி...ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக கூறலாம்.

ஒர் அரசாங்கம் சரியான நேரத்தில் நீர்நிலைகளின் அசுத்தங்களை சரிசெய்யாதப்போது.. தூர்வாராதப்போது நாம் யாரும் பெரிய அளவில் அரசாங்கத்தை கண்டித்தது இல்லை. மாறாக ஒரு பெரும் அசம்பாவிதம் ஏற்படும் போது மட்டுமே.. ஆட்சியாளர்கள் சரியில்லை, முதலமைச்சர் சரியில்லை. நிர்வாகம் செயல் இழந்துவிட்டது என பொங்கி எழுகிறோம். எல்லாம் மூழ்கியப் பிறகு ஞான உதயம் வந்தால் என்ன.. வராவிட்டால்தான் என்ன ? பிறகு நிலைமை சரியாகி விட்டால்.. நாம் நமது சுய நல வேலைகளில் மீண்டும் கவனம் செலுத்திவிடுகிறோம். எவர் எக்கேடு கெட்டால் என்ன என்பது போல நம் மனநிலையும் மாறிவிடுகிறது.

இந்த பேரழிவு நிகழ்வுகளில், ஊடகங்கள் வாய் கிழிய பேசுகிறதே.. அதில் சில ஊடக அலுவலகங்களின் கட்டிடங்கள் அமைந்திருக்கும் இடம் எவ்விடமாக இருக்கிறது என்று நோக்கினால்.. பெரும்பாலும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புச் செய்து கட்டியவைகளாகவும் இருக்கும். ஊருக்கு உபதேசம் சொல்லும் ஒருவன் முதலில் தான் ஒழக்கமானவனா என்பதை பரிசோதித்துக்கொள்ளட்டும் இல்லையா ?.

ஈர நிலப்பகுதியில் கட்டிடம் கட்ட அனுமதிக்கும் போது.. நிலச் சட்டங்களை முறையாக பின்பற்ற வேண்டும், ரியல் எஸ்டேட்டு முதலாளிகள் வீசும் பண எலும்புத்துண்டுகளுக்கு நாய்களாகவே மாறிவிடுகின்றனர் சில அரசு அதிகாரிகள். மேலும் அரசியல் செல்வாக்கு எனும் ஜனநாயக விரோத கம்பையெடுத்து அரசு அதிகாரிகள் மிரட்டப்படவும் செய்கின்றனர். மக்களுக்கும் நீர்நிலைகளை மூடிய நிலத்தின் மீது வீடு கட்டக்கூடாது. கட்டிய அடுக்குமாடிகளில் குடியிருக்க கூடாது எனும் போதிய விழிப்புணர்வும் இல்லை. சிலருக்கு விழிப்புணர்வு இருந்தாலும்.. சுயநல ஆசைப் போதையில் ஒழக்கங்கெட்ட செயலுக்கு உடந்தையாகி விடுகின்றனர். ஒவ்வொரு குற்றச்செயலுக்கும் அடிப்படைக் காரணம் ஒவ்வொரு மனிதனின் பேரரசையே காரணமாக இருக்கும்.

அந்நிய முதலீடுகளில் ஒரு தலைநகரில் கட்டிடங்கள், தொழிற்சாலைகள் அமைந்தால் போதும்.அதுவே வளர்ச்சி என்பதாக கருதிவிட்டார்கள்...அரசியல்வாதிகள். அரசியல் என்பதன் சொல்லுக்கு முழு அர்த்தமும் புரிதலும் இல்லாதவர்கள் ஆட்சி செய்தால் எத்தகைய பேரழிவுக்கு குடிமக்கள் ஆளாகுவார்கள் என்பதற்கு இந்த பருவமழை நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

மழை நீரானது

குட்டையில் நிரம்பி வழிந்தால் குளத்திலும்
குளம் நிரம்பி வழிந்தால் கண்மாயிலும்
கண்மாய் நிரம்பி வழிந்தால் ஏரியிலும்
ஏரி நிரம்பி வழிந்தால் ஆற்றிலும்
ஆறும் நிரம்பினால் கடலிலும்

சென்றுச் சேரும் வகையில் நீர் மேலாண்மை இயற்கையாக இருந்திருக்கிறது. இல்லாவிட்டாலும் ஓர் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். அமைந்த இது போன்ற நீர்நிலைகளை சரியான கால இடைவெளியில் தூர்வாரி இருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன.. ?

லஞ்சம் கொடுத்தோம். சுயநலத்தோடு குட்டையை, குளத்தை மூடினோம் கனவு இல்லத்தை கட்டினோம்
கண்மாய் ஏரி ஆறு என யாவும் ஆக்கிரமித்து சகலவசதியோடு அடுக்குமாடி கட்டி குடிப்புகுந்தோம்.
ஒரு சிறு கால்வாய்களையும் விட்டுவைக்காமல் அதனையும் மூடி நடைபாதை என்றாக்கிவிட்டோம்..

நீர்நிலைகள் இருந்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும். விவசாயம் செழித்தால் நாடு செழிக்கும். மானுடம் வளரும் எனும் அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் நாம் வாழ்வதற்கான இடத்தை மட்டும் நாம் தேர்வு செய்வதில் ஒழக்கங்கெட்ட நாட்டம் செலுத்திவிட்டோம்.

மழை பெய்தால் நாம் ஒதுங்கிக்கொள்ள கட்டிய கட்டிங்கள் இருக்கிறது. ஆனால்.. மழை நீர் எங்கு தஞ்சம் புகும்..? தஞ்சம் புக வேண்டிய ஆறு, ஏரி,குளம் யாவற்றையும் மூடிவிட்டோமே..

தன் குடியிருப்புக்கள் எங்கே என கேட்டு ஒவ்வொருவர் இல்லத்தையும் சூழ்ந்து நீதி கேட்டிருக்கிறது தோழர்களே. நீர் நீதி கேட்ட அசூர வேகத்தில் நம்மில் சிலர் பலியாகிவிட்டோம் , நம்மில் சிலரின் உடமைகள், வாழ்வாதாரங்களை இழந்துவிட்டோம் என்பது மட்டுமே பெரும் துயரம்.
இயற்கைக்கு உண்டான துயரத்தை நாம் இனியாவது புரிந்து.. இயற்கைக்கு.. மழைநீருக்கு உண்டான பாதையை நாம் மறிக்காமல்..அதன் போக்கில் செல்ல நாம் அனுமதிப்போம்.

சரி., இக்கட்டுரை வேறு ஒரு பார்வையிலும் அரசாங்கத்தை .. அரசியல்வாதிகளை கேள்வி கேட்பது யாதெனில்

எப்படியோ.. நம் அரசும் நாமும் பொறுப்பற்ற முறையில் நீர்நிலைகளையும்.. அதன் வடிகால்களையும் சீரழித்துவிட்டோம். அறியாத செய்த தவறாகவும் இருக்கட்டும். ஆனால்
மக்கள் ஒரு பெரும் இயற்கை பேரிடர்களை துணிச்சலாக எதிர்கொண்டு வாழ்வதற்கான சூழமைவுகளை அமைத்துக் கொடுக்காதது ஏன்?

குறைந்த மக்கள் தொகை இருக்கும் போது அதற்கு உண்டான நிலத்தடி நீரின் தேவையையும்.. பெருகி விட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப நிலத்தடி நீரின் தேவையையும் விகிதாசார ரீதியிலான கொள்ளவைக் கொண்டிருக்க வேண்டுமென கணக்கீடுச் செய்து .. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்தாதது ஏன் ?

மக்கள் தொகைக்கு ஏற்ப நீர்நிலைகளை புதிதாக ஏற்படுத்தி இருக்க வேண்டாமா ? இல்லையேல் இயற்கையாக அமைந்த நீர்நிலைகளை தூர்வாரி எப்பேரிடரையும் சமாளிக்க ஒர் அரசானது இருந்திருக்க வேண்டும் அல்லவா ?





சுயநலத்தோடு பொறுப்பற்ற மக்கள், வக்கற்ற அரசாங்கங்கள் அமைந்த ஒரு நாடு பெருமழையானாலும் சிறுமழையானாலும் பாதிக்கப்படத்தான் செய்யும். .

இலஞ்சம், ஊழல் ஆசை, பொறுப்பின்மை, விழிப்புணர்வு இல்லாமை போன்ற மனித ஒழக்ககேடுகளின் ஒட்டுமொத்த சாட்சியே... இந்த வடகிழக்குப் பெருமழையில் உண்டான பெரும் பாதிப்பு...!

இப்பாதிப்புக்கு முழு முதல் காரணம்.. நான்.. நீங்கள்.. நாம்...


இணையத் தள சக்தி. மாபெரும் இணைப்புச் சக்தி. :
---------------------------------------------------------------------------------------------------------------

இப் பெருமழையில் பாதிக்கப்பட்டோருக்கு முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள உறுப்பினர்கள் ஓர் அரசாங்கத்திற்கு நிகரான.. நிவாரணப் பணியை முன்னெடுத்துச் செய்து.. அரசாங்கத்திற்கே பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். தலைக்குணிந்து அலைப்பேசியில் மூழ்கியிருந்த இளையச் சமுதாயம் தான். இன்று மூழ்கிய சென்னை/ கடலூரை மீட்டு மனிதர்களிடமுள்ள மனிதத்தை மீண்டும் தலைதூக்கச் செய்ய வழிக்காட்டியது. விவேகானந்தர் கேட்ட நூறு நூறு இளைஞர்கள் இங்கே.! இவர்களை வழி நடத்த தேவை ஒரேயொரு விவேகானந்தர் மட்டுமே. ! யாரந்த விவேகானந்தர். உங்களில் யாரந்த விவேகானந்தர் ?


**

-இரா.சந்தோஷ் குமார்.


இக்கட்டுரையிலுள்ள தகவல், புள்ளி விபரங்களுக்கு நன்றி


-பி.பி.சி. (சுனிதா நரெயின் ஆய்வு)
-ஆனந்த விகடன்
-தி இந்து பிசினஸ் லைன்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (10-Dec-15, 3:04 pm)
Tanglish : neer ketta neethi
பார்வை : 444

சிறந்த கட்டுரைகள்

மேலே