குச்சிக்காலன் 9

குச்சிக்காலன் 9

செய்தியைப் படித்தபின் தொழில் நுட்ப அதிகாரி குச்சியார் மீது கருப்பையாவுக்கு இருந்த மரியாதை அடியோடு காற்றோடு கலக்க எரிச்சலும் வெறுப்பும் தான் மிஞ்சியது. டீ கூட குடிக்காமல் ஏட்டு அங்குசாமி வீட்டுக்கு ஓடிவந்தார். அப்பொழுது தான் ஏட்டு அங்குவும் இரவு நேரப் பணி முடித்துவிட்டு வந்து உடை மாற்றிக் கொண்டிருந்தார்.
====
வியர்க்க விறுவிறுக்க வந்த கருப்பையாவைப் பார்த்து “ என்ன கருப்பையா நீ வர்ற வேகத்தைப் பாத்தா ஏதோ அவசரச் செய்தியோட வந்திருப்ப போல இருக்குது” என்றார் ஏட்டு அங்குசாமி. ”என்னத்தச் சொல்வேன் ஏட்டையா. இந்த அநியாயத்தைப் பாத்தீங்களா? இதுவரைக்கும் அந்த நெட்டக்காலு பலராமன் தன்ன பெரிய தொழில் நுட்ப அதிகாரின்னு நம்மகிட்டச் சொல்லி நம்மள ஏமாத்திட்டு இருந்திருக்கான்ய்யா. நானும் எம்பசங்களும் அத நம்பி அந்த நெட்டக்காலு முள்ளம்பன்னித் தலையனுக்கு எடுபிடி வேலையெல்லாம் செஞ்சு குடுத்திருக்கோம். இந்த மாதிரி ஏமாத்திட்டானே அந்தப் பரதேசி நாயி”ன்னு .பொரிந்து தள்ளினார் கருப்பையா.
=======
”ஆமாங் கருப்பையா. இந்த விஷயம் நேத்து ராத்திரி எட்டு ,மணிக்கே எனக்குத் தெரியும். அந்த நெட்டக்காலு நாயி வேல பாக்கற ஃபினாயில் கம்பெனி சைதாப்பேட்டையாப் போச்சய்யா. நம்ம தேனாம்பேட்டையா இருந்திருந்தா அவன நானே அரஸ்ட் பண்ணியிருப்பேன். அவன் பெரிய படிப்புப் படிச்சவன்னு நம்பிகிட்டு இருந்தோமே. நம்ம புத்தியச் செருப்பால அடிச்சிக்கணும். அவன் கைதாகிவிட்டதுக்கு அப்புறம் நம்ம சப்-இன்ஸ்பெக்டர் அய்யாகிட்ட அவன் படிப்பைப் பத்தி விசாரிச்சேன். எம் பையன் கண்ணன் பி.ஏ. ரண்டெழுத்துப் பட்டம் வாங்கியவன். அந்த நெட்டக் காலன் பலராமன் டி.எம்.சி. படிச்சவன். அவன் பெரிய இஞ்ஜினியர். மூனெழுத்துப் பட்டம் வாங்கினவன். அவன் படிப்புத் தான் எம் பையன் பி.ஏ. படிப்பவிட ஒசந்ததுன்னு நேத்துவரைக்கும் நான் நெனச்சய்யா. பி. ஏ. படிச்சவங்க ஐ.ஏ.எஸ்., ஐ. பி.எஸ் தேர்வு கூட எழுதலாமாம். 2001ல் ஒரு மதுரைக்காரப் பொண்ணு பிஏ. சமூகவியல் (சோசியாலஜி) படிச்சிட்டு ஐ.ஏ.எஸ் பரிட்சையிலே 10 வது ரேங்க் வாங்கி பாஸ் பண்ணிச்சுன்னும் சொன்னாரு. அந்த நெட்டக்காலன் படிச்சது டிப்ளமா. பட்டப் படிப்பு இல்லையாம். பட்டயப்படிப்பாம். பட்டயப்படிப்பு பி.ஏ., முதலாம் ஆண்டு பாஸ் பண்ணினதுக்குத் தான் சமம்ன்னு சப்-இன்ஸ்பெகடர் அய்யா சொன்னாரு. தெரியாத் தனமா அந்தக் குச்சிக்காலு நாயப் பெரிய படிப்பாளி அதிகாரின்னு நெனச்சுகிட்டு அவனுக்கு சலாம் போட்டு மரியாதை கொடுத்துக் கொண்டதை நெனச்சா எனக்கு வெட்கமா இருக்கய்யா” என்று தன் உள்ளக் குமுறலைக் கொட்டித் தீர்த்தார் ஏட்டு அங்குசாமி. .
======
அன்று நாள் முழுவதும் சுரைக்காய் மூஞ்சி கலாவும் அவளது மூன்று பெண் குழந்தைகளும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள்.. வதந்தி மேதாவிகள் கீரி மூஞ்சி காத்தாயி, மீனுவாச்சி மல்லிகா, குண்டுப் பெருச்சாளி குமுதா, கோரைப்பல் கிழவி ரங்கநாயகி ஆகியோர் செய்தித் தாளில் வெளியான செய்திக்கு கண், காது, மூக்கு வைத்து முச்சந்தியில் கூடி ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.
=======
இதையெல்லாம் வீட்டிற்குள் இருந்தபடியே ஜன்னலை லேசாகத் திறந்த நிலையில் வைத்து அந்த சந்து வழியாக சித்தானை கலா கவனித்துக் கொண்டிருந்தாள். தான் வீட்டு வேலைகளைச் செய்யும் போது ஒட்டுக் கேட்கும் பொறுப்பைத் தன் மகள்களிடம் ஒப்படைத்தாள்.
======
வதந்தி பரப்புவோர் கழக உறுப்பினர்களின் எழுதாத சட்டம் சத்தம் போட்டுப் பேசவேண்டுமென்பதே. அது இப்போது கலாவுக்கு வசதியாகப் போனது. அன்றும் வதந்தி பரப்புவோர் கழகத்தின் ஒப்பற்ற பெருந்தலைவி கீரி மூஞ்சி காத்தாயி தலைமையில் பல முறை நடந்த தெருமுனை பரப்புரைக் கூட்டங்களில் என்னென்ன பேசினார்கள் என்பதெல்லாம் கலாவுக்குத் தெளிவாகக் கேட்டது. தன்னையும். தன் காதல் கணவனையும் கேவலப்படுத்த அவர்கள் போட்ட திட்டங்களையெல்லாம் கலாவல்லி புரிந்து கொண்டாள்.
======
இனியும் தான் குடியிருக்கும் வாடகை வீட்டில் தங்கியிருந்தால் தினமும் அவமானப்படவேண்டியிருக்கும் எனபதைப் புரிந்து கொண்ட கலா தன் கணவன் பணியாற்றும் கலாவல்லி பினாயில் கம்பெனியின் முதலாளி தனபாலைத் தொடர்பு கொண்டாள்.
=======
அன்று நள்ளிரவு மார்கழி மாதக் கடுங்குளிரில் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரத்தில் பத்து ஆட்களுடன் வந்த லாரி ஒன்று கலாவின் வீட்டிற்குமுன் வந்து நின்றது, அடுத்த ஒரு மணி நேரத்தில் பலாவின் வீட்டுப் பொருள்கள் அனைத்தும் அந்த லாரியில் ஏற்றப்பட்டது. கடைசியாக கலாவும் அவளது மூன்று குழந்தைகளும் லாரியில் ஏறியவுடன் லாரி புறப்பட்டது.
=======

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அந்த லாரி கலாவல்லி ஃபினாயில் கம்பெனி வளாகத்தில் இருக்கும் காலி ஷெட் ஒன்றின் அருகில் நினறது. தேனாம்பேட்டை பாரி நகரைச் சேர்ந்த யார் கண்ணிலும் படாமல் வந்து சேர்ந்தது பற்றி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் கலா. வார விடுமுறை நாட்களான சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் குச்சியார் விரும்பும் சாப்பாடு கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார் தனபால். திங்கள் கிழமை குச்சியைப் பிணையில் (ஜாமீனில்) கொண்டுவருவதில் எந்த சிரமும் இல்லை.
======
பாரி நகர் மக்கள் குச்சிக்காலன் வழக்கு பற்றிய தீர்ப்பை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். குறிப்பாக கீரி மூஞ்சிக் காத்தாயி தலைமையில் பெயர்ப் பலகை இல்லாமல் இயங்கி வரும் வதந்தி பரப்பும் மகளிர் நலச் சங்கத்தின் உறுப்பினர்கள் தான் நீதி மன்றத் தீர்ப்பை அறிய மிகுந்த ஆவலுடன் இருந்தனர்.
======

வழக்கு விசாரணை ஒரு மாதத்தில் முடிந்தது. இருப்பினும் சட்டச் சிக்கல் கருதி வழக்கின் தீர்ப்பை ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார். வதந்தி பரப்புவோர் கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் பொறுத்துக்கொள்ள முடியாத ஏமாற்றம். ஆறு மாதம் என்பது ஆறு யுகமாகத் தோன்றியது.
======
குச்சியார் குடும்பத்தினர் மற்றும் அவனுடன் பணியாற்றுவோர், அவனது முதலாளி தனபால் மற்றும் டிரைவர் வாசுதேவன் குடும்பத்தினர் எல்லாம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைக்கப்பட்டது குறித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். டான்சி போன்ற முக்கிய வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு பிறகு வெளியான தீர்ப்புகளில் பல குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிராபதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். அது போன்ற தீர்ப்பையே இந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட குச்சி மற்றும் வாசுதேவனின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
=======

காலச் சுழற்சியை யாரும் கட்டுப்படுத்த முடியாதல்லவா? ஆறு மாதம் உருண்டோட வழக்கின் தீர்ப்பைக் அறிவிக்கும் நாளை நீதிபதி அறிவித்தார். அந்த நாளும் வந்தது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கீரி, கருப்பையா தலைமையில் ஒரு பெருங்கூட்டமும், குச்சியப்பரின் முதலாளி தனபால் தலைமையில் கலாவல்லி பினாயில் கம்பெனி தொழிலாளர் கூட்டம், மற்றும் அரசு வேன் டிரைவர் வாசுதேவனுக்கு ஆதரவாக சென்னையில் பணியாற்றும் அரசு டிரைவர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானவர்களும் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர்.
அத்தோடு நீதிமன்றத்திலிருந்த கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே வந்து அரைமணி நேரத்தில் பெருங்கூட்டம் கூடிவிட்டது.
=======
தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் அங்கு கூடிய கூட்டத்தை விரட்டியடிடித்தால் தொழிற் சங்கங்களை ச் சேர்ந்தவர்கள் அதைப் பெரிய பிரசனையாக்கி விடுவார்கள் என்று உயர் காவல் அதிகாரிகள் நினைத்தனர். அதனால் அண்ணாசாலையில் சைதாப்பேட்டை கூவம் பாலத்திலிருந்து நந்தனம் கலைக்கல்லூரி வரை மூன்று மணி நேரத்திற்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் இணை ஆணையர் ஒருவர் தலைமையில் கீழ்நிலைக் காவல் அதிகாரிகள் மற்றும் ஏராளமான காவலர்களும் பலரும் களத்தில் இறங்கினர்.
=====
அன்று காலை 10.30 மணிக்குப் பின்னர் தான் நல்ல நேரம் என்பதால் நீதிபதி சரியாக 10.31-ஆனவுடன் தனது இருக்கையில் அமர்ந்தார். அவர் தனது தீர்ப்பை முழுமையாகப் வாசித்து முடிக்க சுமார் இரண்டு மணி நேரம் ஆனது.
======
தீர்ப்பின் சுருக்கம் இது தான்:
அரசு வேன் டிரைவர் வாசுதேவன் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அரசு வாகனத்தை தனியார் ஃபினாயில் கம்பெனியில் பணியாற்றும் தொழில் நுட்ப அதிகாரி பலராமன் என்பவரின் சொந்த உபயோகத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதே குற்றச்சாட்டு.
====
அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டவர், அரசு வேனை அரசு ஊழியரல்லாத ஒருவரின் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தியது தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
===
ஆனால் அரசு டிரைவர் வாசுதேவன் அந்த வேன் ஒதுக்கப்பட்ட அரசு அதிகாரி பன்னீர்செல்வத்திற்கு எந்தவித இடையூறும் வராமலும், அரசு ஊழியர் என்ற முறையில் கடமை தவறாமலும் பணியாற்றியிருக்கிறார். அதற்காக இந்த நீதி மன்றம் அவரைப் பாராட்டுகிறது.
======
மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை தனியார் நிறுவனத்தின் தொழில் நுடப் அதிகாரி பலராமனிடமிருந்து பெற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அரசு டிரைவர் வாசுதேவன் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு மாதந்தோறும் கையூட்டுத் தந்ததை தனியார் கம்பெனி தொழில் நுட்ப அதிகாரி பலராமனும் மறுக்கவில்லை.
======
இந்தக் காலத்தில் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களும், அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் கூட நீதிமன்றங்களில் தாங்கள் சொன்னதை ஆதாரத்துடன் நிரூபித்தால் கூட தாங்கள் அது போல் சொல்லவேயில்லை என்று பொய் பேசுவதும். தங்களது கையொப்பத்தை தாங்கள் இடவில்லை என்று மறுப்பதும், நீதியரசர்கள் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதும் நம் நாட்டில் ஒரு மரபாக இருக்கிறது.
=====

இத்தகைய சூழ்நிலையில் தாங்கள் செய்த குற்றத்தை உண்மை என்று ஒப்புக்கொண்ட டிரைவர் வாசுதேவன், தனியார் தொழில் நுட்ப அதிகாரி பலராமன் ஆகியோரின் நேர்மையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. சில வழக்குகளில் பிறரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டுபவர்களில் சிலர் கூட சட்டத்தில் உள்ள நெழிவு சுழிவுகளைப் பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறார்கள்.
======
ஆனால் இந்த வழக்கைப் பொருத்தவரை அரசுக்கு சிறு நஷ்டம் கூட ஏற்படுத்தாமல் அரசு வேனைப் பயன்படுத்திய அரசு டிரைவர் வாசுதேவனைக் குற்றவாளியாகக் கருத முடியாது. எனவே அவரின் கடமை உணர்வையும் நேர்மையையும் பாராட்டி விடுதலை செய்யும் அதே நேரத்தில் அவர் கையூட்டுப் பெற்றதற்காக அவரைத் தண்டிக்க வேண்டியது இந்த நீதிமன்றத்தின் கடமை. அவர் செய்த கையூட்டுப் பெற்ற குற்றத்திற்காக அவருக்கு ரூபாய் 10,000/- அபராதம் செலுத்தும்படி ஆணையிட்டு அவரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது. அதே போல கலாவல்லி ஃபினாயில் கம்பெனியின் தொழில் நுட்ப அதிகாரி பலராமனின் நேர்மையையும் பாராட்ட இந்த நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது.
=======
விவசாயத்திற்கு அடுத்த படியாக நாட்டின் பெரும்பாலோர்க்கு வேலை வாய்ப்பை அளித்து நாட்டின் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவது தொழிற்சாலைகள் தான். தனியார் கம்பெனியின் தொழில் நுட்ப அதிகாரி, தாழ்வு மனப்பான்மையால் வறட்டு கவுரவத்திற்காக அரசு வேனை அது ஒதுக்கப்பட்ட அதிகாரி பன்னீர்செல்வத்துக்கோ அரசுக்கோ ஏந்தவித இடையூறும் இல்லாமல் பயன்படுத்தியிருப்பதால் இந்த நீதிமன்றம் அவரை மன்னித்து விடுதலை செய்கிறது. அதே சமயம் அவர் அரசு வேன் டிரைவர் வாசுதேவனுக்கு கையூட்டுக் கொடுத்தமைக்காக அவரைத் தண்டிக்காமல் விட்டால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே அவருக்கும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து இந்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்கிறது” என்று நீதிபதி தனது தீர்ப்பை வாசித்து முடித்தார்.
=======

தீர்ப்பைக் கேட்டதும் அரசு டிரைவர் வாசுதேவன், கலாவல்லி ஃபினாயில் கம்பெனியின் தொழில் நுட்ப அதிகாரி குச்சியார் பலராமனின் நலம் விரும்பிகளும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தி ஆரவாரம் செய்தனர். அரசு வாகன ஓட்டுனர் சங்கத்தினர் வாசுதேவனுக்கு மாலை அணிவித்து வாழ்த்து ஒலிகளை எழுப்பிய வண்ணம் மெரினா கடற் கரையில் எழிலகத்திற்கு எதிரோ உள்ள உழைப்பாளர் சிலையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
=======
இன்னொரு அணியின் காவிய நாயகனான பலராமனுக்கு அவனது முதலாளி தனபால் தான் முதலில் மாலை அணிவித்தார். எதிர்பார்த்த தீர்ப்பே என்றாலும் குச்சியப்பருக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. அவனது தலைமுடி முள்ளம் பன்றியின் பாதுகாப்பு கவசத்தைப் போல் சிலிர்த்துக் கொண்டது. அவனது கம்பெனி ஊழியர்கள் இருவர் அவனை மின்னல் வேகத்தில் தூக்கித் தங்கள் தோள்களில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.
======
ஒரு அரசியல்வாதியை நீதிமன்றம் விடுதலை செய்தால் அவரது கட்சித் தொண்டர்கள் சரம் சராமாய் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்து பாதையில் செல்லும் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் இடையூறு செய்வார்கள். அதை அந்தத் தலைவரும் தடுத்த நிறுத்த எண்ணமாட்டார். ஆனால் அதிகம் படிக்காத எழுதப் படிக்கத் தெரிந்த தொழிலாளர்கள் அது போன்ற இடையூறைத் தரவில்லை. பட்டாசு வெடித்து அடுத்தவர்களுக்கு இடையூறு செய்பவர்கள் இந்தத் தொழிலாளர்களின் நற்பண்பைப் பார்த்து வெட்கப்படவேண்டும்.
========
நீதிமன்றத்துக்கு வந்திருந்த மற்ற தொழிலாளர் சாலையோரமாக வரிசையாக சென்று கொண்டு “தொழில் நுட்ப அதிகாரி அண்ணன் பலராமர் வாழ்க; தொழில் நுட்ப மேதை அண்ணன் பலராமர் வாழ்க; இந்தப் படை போதுமா இன்னுங் கொஞ்சம் வேண்டுமா?” என்ற கோஷங்களை எழுப்பிய வண்ணம் கலாவல்லி ஃபினாயில் கம்பெனியை நோக்கி நகர்ந்து சென்றனர்.
=======
கம்பெனி வாசலில் ஆரத்தித் தட்டுடன் நின்றுகொண்டிருந்த போண்டா மூக்கி கலாவல்லி கணவனை வரவேற்று ஆரத்தி எடுத்து, பூசணிக் காய் ஒன்றைக் கம்பெனி வாசலில் போட்டு உடைத்தாள். உணர்ச்சி வசப்பட்ட அவள், கண்ணீர் மல்க தன் காதல் கணவன் குச்சியப்பரைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.
======
கீரி மூஞ்சி காத்தாயி மற்றும் கருப்பையா தலைமையில் நீதிமன்றத்தின் அருகே காத்திருந்த வதந்தி பரப்புவோர் கழக உறுப்பினர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர் “நீதி செத்துவிட்டது” என்று முனகிக் கொண்டே.

=============
==================முற்றும்=======

எழுதியவர் : மலர் (10-Dec-15, 7:18 pm)
பார்வை : 145

மேலே