பயித்தியக்காரி

வெறி பிடித்து விட்டதோ என்று
என்னைப் பற்றிக் கவலைப் படாதே!
சிறிய இந்த வீட்டின் தரையில்
சின்னக் கைகளால் பள்ளம் தோண்டி
ஏற்கெனவே அங்கு புதைந்து கிடக்கும்
எலும்புக் கூடுகள் நடுவில் நானும்
படுத்துக் கொண்டு சிதைய மாட்டேன்

ஊக்கம் கெடுக்கும் இருளில் ஒளிந்து
காணாமலே போய் விடுவதற்கு என்னிடம்
தூக்க மாத்திரை ஏதும் இல்லை ஆனால்
காணலாமே நீ நானிங்கு இருப்பதை

ஓட்டை உடைசல் பொருள்களைக் குவித்து
வீட்டு மாடியின் ஓரத்து அறையினில்
திரைப் படங்களில் இலக்கியங்களில்
உரைப்பது போலவே பயித்தியக்காரியாய்
பூட்டிய அறையினில் கால்களைக் கட்டி
ஒட்டிய கன்னங்கள் கண்ணீரில் அழுகி!

எல்லோரும் என்னை மறந்து போகலாம்
நல்லா இருக்கட்டும் அவர்கள் பாவம்
எனக்கென்று ஒரேயொரு தீக்குச்சி போதும்
கிடைத்தால் போதும், அதுவே போதும்
கடைசியில் என்னோடு சேர்ந்து எரியலாம்!.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (11-Dec-15, 12:25 pm)
பார்வை : 113

மேலே