பிரம்மக் கோளாறு-5

நீவீர் விழுந்த இடம்
என் ராச்சியத்தில் காணப்படவில்லை .
ஆவிகளின் துணை கொண்டு
அலங்கரித்த ஓவியக் கூட்டில்
நாணங்கள் பேணப்படவில்லை .

விலை மதிப்புமிக்க நீர்ச்சுழல்களின்
சுத்தமெனக்கேடுகள்
நெகிழிப் பைகளிலும்
நீட்சியான மிச்சங்களிலும்
எழுதிச் சென்றது தன்னிறுதி சவ ஊர்வலத்தை.
பன்னீர் பூக்களான வார்த்தைப் பந்தலில்
பகல் ராப் பொழுதுகள் செத்துப் பிறந்து
வெளிச்ச ரேகைகளில் தேடின நவ ஆர்வத்தை .

கவிதைப் பரிசல்களில்
வலி நிவாரணம் ஏற்றி வந்தவர்கள்
வந்து விட்டுப் போன பிறகு
வலி இன்னும் அதிகம்.

எங்கே தேடுவதென்றும்
எவரை நாடுவதென்றும்
யாரோடு கூடுவதென்றும்
எவ்வண்ணம் பாடுவதென்றும்
கலங்கிய என்பேனாவின்
கருப்பு மையின் உள்ளிருப்பு போராட்டத்தில்
என்கவிதை வானத்தில்
எப்போதும் கிரகணப் படிமம்.

இவன் பித்தனா சித்தனா வென்று
சித்தம் கலங்கியது போதும்
இவனோடு
இவன் வீட்டு குடிசைக்குள் நுழைந்து
கூரை வானத்து சூரியர்களை எண்ணுங்கள்
அப்படி சூரியன் என்ற ஒன்று
அப்போது வந்தால்.

எழுதியவர் : சுசீந்திரன். (12-Dec-15, 11:23 am)
பார்வை : 61

மேலே