மழைமழைஎங்கே பிழை கவிதை
மழை…மழை… எங்கே பிழை…??
*
இனிய குரல் கொடுத்து எனை
அழைக்கும் சிநேகிதர்களைப்
பார்த்துப் இருபது நாள்களாயிற்று.
மழைவெள்ளப் பெருக்கின்போது
எங்கே போயிருந்தன?
அந்தமனப் பறவைகள்.
வெள்ளநீர் பார்வையிடப் போயிருந்ததா?
அணைகள் ஏரிகள் உடைப்புப் பார்த்து
ஆத்திரம் கொண்டு சிலிர்த்ததா?
விளைநிலங்களைப் பார்த்து அழுததா?
வாழ்நாளில் சேகரித்தப் பொருள்கள்
வாரிச்சுருட்டிப் போன அவலத்தைப்
பார்த்துக் கதறியழுததா?
கோரமுகங்காட்டியப் பேயாய் பாய்ந்து
மனிதஉயிர்களைப் பலிகொண்டதைப்
பார்த்து பதறித் துடித்ததா?
உணவின்றி நீரின்றி உறக்கமின்றி
அல்லல்பட்டவர்களைப் பார்த்து
ஆவேசப்பட்டதா?
மின்சாரமின்றி போக்குவரத்தின்றி
வீட்டுச் சிறையிலிருந்த மனிதங்களின்
இருட்டில் வாடிய முகங்களைப் பார்த்துக்
கண்ணீர் வடித்ததா?
நிவாரணப் பணியில் இயங்கும் சமூகத்
தொண்டர்களின் செயல்களின்
அர்ப்பணிப்புப் பாராட்டி உதவிக்கு துணை நின்றதா?
இன்னும் இயல்பு திரும்பாதா? என
ஏங்கித் தவிக்கும் மனிதக் கவலைகளை
எண்ணி ஆறுதல் சொல்லித் திரிந்ததா?
எப்பொழுதேனும் மகிழ்ச்சி தரும் நீர்த்துளிகள்
இப்பொழுது மட்டும் ஏனிந்த கோரமுகம்.
காட்டி பயமுறுத்தி விட்டது இப்பெருமழை….!!
*