திருக் குற்றாலம் --இயற்கை

படித்ததில் பிடித்தது
;நமது குற்றாலம்;
------------------------------------------
குறத்தி வசந்தவல்லிக்குத் தலமகிமை கூறுதல்
-------------------------------------------------------------------

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நாட்டு வளம்

அரிகூட அயன்கூட மறைகூடத் தினந்தேட அரிதாய் நின்ற
திரிகூட பதிஇருக்குந் திருநாட்டு வளமுரைக்கத் தெவிட்டா தம்மே
கரிகூடப் பிடிதிரியுஞ் சாரலிலே ஒருவேடன் கையில் ஏந்தி
நரிகூடக் கயிலைசென்ற திரிகூடத் தலமகிமை நவிலக் கேளே.

(பொ-ரை) திருமால்கூட-பிரமன்கூட வேதங்கள்கூட ஒவ்வொரு நாளும் தேடியும் காண்பதற்கு அரியராய் நின்ற திருக்குற்றாலநாதர் எழுந்தருளியிருக்கின்ற சிறப்புள்ள நாட்டின் வளப்பத்தைச் சொன்னால் அதைக் கேட்கக்கேட்க இன்பமாகத் தோன்றுவதன்று வெறுப்புத் தோன்றாது அம்மே! ஆண் யானையுடன் பெண்யானைகள் திரிகின்ற மலையடிவாரத்திலே ஒரு வேடனானவன் கையில் வில்லைத் தாங்கிக் கொண்டு நரியைத் துரத்தியவாறே திருக்கைலை மலையைச் சேர்ந்து வீடுபெறுதற்கு காரணமான திரிகூடத்தலத்தின் சிறப்பைச் சொல்வேன், நீ கேட்பாயாக.



(வி-ரை)
அரி-திருமால். தெவிட்டாது-போதுமென்று சொல்லமுடியாது; வெறுப்பாகாது. பிடி-பெண்யானை. நவில-சொல்ல.
(57)

இராகம் - பிலகரி
தாளம் - சம்பை.
கண்ணிகள்

(1) ஞானிகளும் அறியார்கள் சித்ரநதி மூலம்
நானறிந்த வகைசிறிது பேசகேள் அம்மே
மேன்மைபெறுந் திரிகூடத் தேனருவித் துறைக்கே
மேவுமொரு சிவலிங்கந் தேவரக சியமாய்
ஆனதுறை அயனுரைத்த தானம்அறி யாமல்
அருந்தவத்துக் காய்த்தேடித் திரிந்தலையுங் காலம்
மோனவா னவர்க்கெங்கள் கானவர்கள் காட்டும்
முதுகங்கை ஆறுசிவ மதுகங்கை ஆறே;

(2)
சிவமதுகங் கையின்மகிமை புவனமெங்கும் புகழுஞ்
செண்பகா டவித்துறையின் பண்புசொல்லக் கேளாய்
தவ முனிவர் கூட்டரவும் அவரிருக்கும் குகையும்
சஞ்சீவி முதலான விஞ்சைமூ லிகையும்
கவன சித்தர்ஆதியரும் மவுனயோ கியரும்
காத்திருக்குங் கயிலாயம் ஒத்திருக்கும் அம்மே
நவநிதியும் விளையுமிடம் அவிடமது கடந்தால்
நங்கைமார் குரவையொலிப் பொங்குமா கடலே

(3)
பொங்குகடல் திரிவேணி சங்கமெனச் செழிக்கும்
பொருந்து சித்ர நதித்துறைகள் பொன்னுமுத்துங் கொழிக்கும்;
கங்கையென்னும் வடஅருவி தங்குமிந்த்ர சாபம்
கலந்தாடிற் கழுநீராய்த் தொலைந்தோடும் பாபம்
சங்கவீ தியிற்பரந்து சங்கினங்கள் மேயும்
தழைத்தமதிட் சிகரமெங்கும் கொழுத்தகயல் பாயும்
கொங்கலர்செண் பகச்சோலைக் குறும்பலா ஈசர்
குற்றாலத் திரிகூடத் தலைமெங்கள் தலமே;

(4)
மன்றுதனில் தெய்முர சென்றுமேல் முழங்கும்
வளமைபெறுஞ் சதுரயுகம் கிழமைபோல் வழங்கும்
நின்றுமத கரிபூசை அன்றுசெய்த தலமே
நிந்தனைசெய் புட்பகந்தன் வந்தனைசெய் தலமே
பன்றியொடு வேடன் வலஞ் சென்றதிந்தத் தலமே
பற்றாகப் பரமர்உரை குற்றாலத் தலமே
வென்றிபெறுந் தேவர்களுங் குன்றமாய் மரமாய்
மிருகமதாய்த் தவசிருக்கும் பெரியதலம் அம்மே!

(பொ-ரை) (1) மெய்யுணர்வுடையார்கூடச் சித்திரநதி தோன்றிய வரலாற்றை அறியமாட்டார்கள்: ஆனாலும் சிறிது சொல்வேன் அம்மே! கேட்பாயாக உயர்வு பெற்ற திரிகூடத்திலுள்ள தேனருவித் துறையிடத்தே ஒரு சிவலிங்கம் தேவர்கட்கு மட்டும் அறிந்த மறை பொருளாய்த் தோன்றாநின்றது. அத்தகைய தேனருவித் துறையை அயன் உரைத்த இடம் இன்னதென்று அறியாமல் அரிய தவஞ்செய்தற்காகத் தேடி அலைகின்ற காலத்தில், மௌனநிலை யெய்திய தேவர்கட்கு எங்கள் குலத்துத் தோன்றல்களான வேடர்கள் இஃதென்று காட்டிக்கொடுத்த பழைய கங்கையாறே இப்போது சிவமது கங்கை ஆறாக வழங்கப் பெறுவது:

(2) அந்தச் சிவமது கங்கையின் சிறப்பை உலகமெங்கும் புகழ்ந்து கூறும்; அத்தகைய சிவமது கங்கையிலுள்ள நீராடும் செண்பகாடவித் துறையினது சிறப்பை நான் சொல்லுகின்றேன்; நீ கேட்பாயாக. தவமுனிவர்களுடைய கூட்டமும் அவர் தங்கியிருக்கின்ற குகையும் சஞ்சீவி முதலான மந்திரசக்தியைத் தரும் பச்சிலையும் வான்வழிச் செல்லும் சித்தர்களும் மௌனயோகிகளும் இறைவன் திருமுன்பு காத்துக்கிடக்கின்ற திருக்கைலாய மலையை ஒத்ததாக விளங்கும் அம்மா! ஒன்பது வகை மணிகளும் விளைகின்றதான அந்த இடங்களைக் கடந்துபோனால் போகுமிடங்களில் மங்கைமார்கள் குரவைக் கூத்தாடுகின்றதால் உண்டாகும் பேரொலி அலையெறிந்து குதிக்கும் கடலின் ஒலிபோல் கேட்கும்;

(3) கங்கை யமுனை சரசுவதி முதலிய ஆறுகளின் அலையால் மிகும் கடல்போன்ற திரிவேணி சங்கமமென்னும்படி வளம்பெற்றிருக்கும்; அதைச் சார்ந்துள்ள சித்திர நதியின் துறைமுகங்கள் தோறும் பொன்னையும் முத்துக்களையும் கொண்டு வந்து அலைகள் ஒதுக்கும்; கங்கைப் பேராற்றை யொத்ததென்று சொல்லுதற்குரிய வானவில்லின் நிறம்போல் பன்னிறங் காட்டுகின்ற வட அருவித் தீர்த்தத்தில் முழுகினால் கழுவப்பட்ட நீரில் அழுக்குகள் கழிந்தொழிவது போலப் பாவங்கள் எல்லாம் நிற்காமல் ஓடிப்போகும்; சங்கவீதியில் பரவிவந்து சங்குக்கூட்டங்கள் மேயும்; மேம்பட்ட மதில்களின், மேலிடமெங்கும், கொழுமை கொண்ட கெண்டை மீன்கள் பாய்ந்து செல்லும்; இத்தகைய சிறப்புகளையுடைய செண்பகச் சோலையையுடைய மணம் கமழுகின்ற குறும்பலா மரத்தினடியில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதருக்குரிய திருக்குற்றாலத் திரிகூடத் தலமே, எங்களுக்குரியதலமாகும்.

(4) சித்திரசபையில் தெய்வத்தன்மை பொருந்திய முரசமானது எக்காலத்தும் முழங்கிக்கொண்டேயிருக்கும்; சிறப்புப் பொருந்திய நான்கு ஊழிக் காலமுங்கூடஇத் தலத்தில் நான்கு நாட்கள்போல் இருக்கும். (இத் தலத்தில் இருப்பவர்க்கு நாள் கழியவில்லையே என்று வெறுப்புத் தோன்றாது, இன்பமாக இருக்கும்) மதயானை தவறாது வந்து வழிபாடு செய்த திருநகரமும் இதுவே. யாவரும் பழித்தற்குரிய புட்பகந்தன் என்பவன் வழிபாடு செய்த திருநகரமும் இதுவேயாகும்; பன்றியுடன் வேடனும் வலமாகச் சுற்றிச் சென்றதும் இந்தத் திருநகரமேயாகும்; அருளுடன் மேலானவராகிய திருக்குற்றால நாதர் எழுந்தருளியிருக்கின்றதானது இத்திருக்குற்றால நகரமேயாகும்: இன்னும் இத்திருநகர், தேவர்களெல்லாம் சிறு மலைகளாகவும் மரங்களாகவும் விலங்குகளாகவும் தம் உருமாறித்தவம் செய்து கொண்டிருக்கின்ற சிறந்த திருத்தலம் இக்குற்றால நகரமேயாகும் அம்மே!



(வி-ரை)
மூலம்-காரணம். மேவும்-பொருந்தும். கூட்டரவு-கூட்டம். குரவை-குரவைமுழக்கம். திரிவேணி-கங்கை யமுனை சரசுவதி ஆகிய ஆறுகள் கூடுமிடம். கழுநீர்-அழுக்குகளைக் கழுவுகின்ற நீர், கொங்கு அலர்-வாசனை விரிந்த. வழங்கும்-செல்லும். புட்பகந்தன்-கொற்கை நகரத்துக் குசலன் என்னும் பிராமணன்.

எழுதியவர் : (14-Dec-15, 9:35 am)
பார்வை : 187

மேலே