1ஆதாமின் அப்துல்லா - பொள்ளாச்சி அபி

கிழக்கு திசையில் லேசான வெளிச்சக் கீற்று,மஞ்சளும்,சிவப்புமாக ஓவியங்களை வரையத் துவங்கிய அதிகாலை.., வழக்கம்போல ஜிப்பாவும், லுங்கியுமாக,குளிர் ஊடுருவி விடாத வகையில்,இறுக்கிக் கட்டிய தலைப் பாகையுடன்,மெதுவே பள்ளிவாசலை நோக்கி நடந்து கொண்டிருந்தார் அறுபது வயதைக் கடந்திருந்த முஸ்தபா. ‘சுபஹ்’ தொழுகையை சரியான நேரத்தில் நடத்திவைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரை வேகமாக உந்தித் தள்ளிக் கொண்டிருந்தாலும், தளர்ச்சியால் அவரது நடை லேசாகத் தள்ளாடிக் கொண்டு இருந்தது.

அந்த அதிகாலை நேரத்திலேயே எழுந்து தமது பணிகளுக்காக தோட்டங்களுக்கு சென்று கொண்டிருந்த விவசாயிகளும்,அன்றைய நெசவிற்காக பாவு பிரிக்கும் பணிக்கான ஆயத்தத்தில் ஈடுபட்டிருந்த நெசவாளர்களும், முஸ்தபாவைக் கண்டு வணக்கம் என்றோ,அஸ்ஸலாமு அலைக்கும் என்றோ கூறி வணங்கினர். இன்று வழக்கமான நேரத்தைக் காட்டிலும் சற்று தாமதமாகி விட்டதை உணர்ந்திருந்த முஸ்தபா,அவர்களுக்கு பதில் வணக்கம் தெரிவித்தபடியே நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

பசேலென பரந்து விரிந்திருந்த நீலகிரி மலைச்சாரலிலிருந்து, ஏழைக்கு உதவும் வள்ளலைப் போல,மிக வேகமாய் சமவெளிக்குப் பாய்ந்து கொண்டிருந்தது பவானி ஆறு.வழியெங்கும் அது விதைத்திருந்த பசுமையில் வாழை, தென்னை,பாக்கு, வெற்றிலை, மஞ்சள் என பணப்பயிர்கள் விளைந்திருந்தன. வருடம் முழுவதும் ஜீவநதியாக இருந்த பவானி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு,அதன் வழியெங்கும் இருந்த ஏராளமான கிராமங்களில் ஒன்றுதான் பக்தூர்.

முந்நூறுக்கும் குறைவான வீடுகளைக் கொண்ட பக்தூரில்,விவசாயம் செழித்திருந்தது மட்டுமல்ல.நெசவாளிகளும் அதிகளவில் இருந்தனர். அதேபோல் விவசாயிகளாகவும்,விவசாயக் கூலிகளாகவும் இருந்த கணிசமான இஸ்லாமியர்களும் சகோதரர்களாகக் கலந்து வாழ்ந்து வந்தனர்.

பள்ளிவாசலை அடைவதற்கு இன்னும் சிறிது தூரம் இருக்கும் நிலையில்தான், “அல்லாஹூ அக்பர்..அல்லாஹூ அக்பர்..”, என்று தொழுகைக்கு அனைவரையும் அழைக்கும் பாங்கு ஒலி.., நிசப்தமான நேரத்தில் காதுகளைத் தேடிவரும் குயிலின் இனிமை கொஞ்சும் ஒலி போல, பாங்கின் ஓசை அந்தக் கிராமத்து வான்வெளியில் மெதுவாய்த் தவழ்ந்து,ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைந்து வெளியேறியது.

“இது என்ன..இத்தனைக் காலமுமில்லாத அபூர்வக் குரலாக உள்ளதே..” என வியந்த அதே சமயம்,இவ்வளவு இனிமையாக ஒரு இசையினைப் போல யார் பாங்கு சொல்கிறார்கள்..!’ என்று எண்ணமிட்டபடியே, உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட இஸ்லாமியர்கள்,தமது வீட்டிலிருந்து வேகமாய் ,பள்ளிவாசலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

முஸ்தபாவிற்கும் ஆச்சரியமாக இருந்தது.தனது நீளமான தாடியை நீவிக் கொண்டார்.‘தனக்கு முன்பே பள்ளிவாசலுக்கு சென்று பாங்கு சொல்வது யாராக இருக்கும்...?’ ஆவல் உந்தித் தள்ள, தற்போது அவரது நடையில் சற்றே வேகம் கூடியிருந்தது.

பக்தூரிலிருந்த அந்த பள்ளிவாசல், திப்புசுல்தானிடம் கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் பணி புரிந்த,திப்புவின் பல வெற்றிகளுக்கு காரணமானவராக இருந்த மாவீரர் சையத் கபார் என்பவரால் கட்டப்பட்டதாக ஒரு வரலாறு உண்டு. நூற்றாண்டு பழமையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் அந்தப் பள்ளிவாசல், தற்போது சுற்றுச்சுவர் இடிந்தும்,தொழுகை நடத்தும் கூடம் சிதிலமடைந்தும் காணப்பட்டது.அங்கு ஒரு முப்பது பேர் மட்டுமே தொழுகை நடத்தும் அளவிற்கு சுத்தம் செய்யப்பட்டிருந்தது.அங்குதான் முஸ்தபாவும்,மற்றவர்களும் ஐந்து வேளையும் தொழுகை நடத்துவார்கள்.

பள்ளிவாசலுக்குள் நுழைந்த முஸ்தபா,ஒருவர் மேற்கு நோக்கி நின்றிருப்பதைக் கண்டார். முகம் தெரியவில்லை.தெரிகின்ற முதுகுப் புறத்தை வைத்துப் பார்த்தால்.., பக்தூரைச் சேர்ந்த யாருமே நினைவுக்கு வரவில்லை, ‘இவர் யாரோ புதிய மனிதராக இருக்கிறாரே..’ எண்ணமிட்டபடியே,“அஸ்ஸலாமு அலைக்கும்..”என்றார் முஸ்தபா.

மெதுவாகத் திரும்பிய அந்த மனிதர்,“வாலேக்கும் அஸ்ஸலாம்.., ரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹி..” என்று முஸ்தபாவை நோக்கி,பதிலிறுத்தபடியே மெல்லிதாகப் புன்னகைத்தார்.

குரலில் இருந்த நிதானமும்,வார்த்தைகளை அட்சர சுத்தமாய் அவர் உச்சரித்ததும், நட்பான அவரது புன்னகையும்.., முஸ்தபாவின் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஊட்டியது. அவருக்கு சுமார் நாற்பது வயதிருக்கலாம் என்றும் முஸ்தபாவால் கணிக்க முடிந்தது. அவர் அணிந்திருந்த சுத்தமான உடைகளும், நேர்த்தியான, பச்சைநிற தலைப்பாகையும், நெற்றியில் தொழுகையால் ஏற்பட்டிருந்த கருநிறத் தழும்பும், அவரை மிகுந்த மரியாதைக்குரியவராகக் காட்டியது. மாநிறத்துடன்,சராசரிக்கும் சற்று உயர்ந்தவராகக் காணப்பட்ட அந்தப் புதிய மனிதரின் முகம், அபரிமிதமான தேஜஸுடன் இருப்பதாகவே முஸ்தபாவிற்கு தோன்றியது.

அவரை அருகில் சென்று தொட்டுப் பார்க்க வேண்டும் என்று,ஏனோ திடீரென்று முஸ்தபாவிற்குத் தோன்றிய அந்த விநாடியில்,மேலும் சிலர் சலாம் சொல்லிய படியே, பள்ளிவாசலுக்குள் நுழைந்தனர். காலைநேரத் தொழுகைக்கு நேரம் நெருங்கி விட்டது என்பதையறிந்த முஸ்தபா,அந்தப் புதிய மனிதரையே, இமாமாக நின்று தொழுகையை நடத்துமாறு கேட்டுக் கொள்ள,அவரும் சரியெனக் கூறி தொழுகையைத் துவங்கினார்.

அந்த சுபஹ் தொழுகை இரண்டு ரக்காத்திலும்,அவர் ஓதிய ‘சனா’ எனும்,புனித குரானின் வரிகள்,இனிமையிலும் இனிமையாக இருந்தது.குரானின் வரிகளை இப்படியும் இனிமையாக ஓதமுடியும் என்பதை,முஸ்தபாவும்,அவருடன் தொழுதவர்களும் இன்றைக்குத்தான் உணர்ந்தார்கள்.அந்த நேரத் தொழுகை, பூரணத்துவம் பெற்றதாக எண்ணி ஒவ்வொருவரும் மகிழ்ந்தார்கள்.

தொழுகை முடிந்ததும், வந்தவர்கள் அனைவரும் அந்தப் புதியவரைச் சுற்றி அமர்ந்து கொண்டார்கள். பெரியவர் முஸ்தபாதான் பேச்சைத் துவங்கினார். “இவ்வளவு அழகா பாங்கு சொல்லி,ரொம்ப இனிமையா ‘சனா’ ஓதி தொழுகை நடத்தி வெச்சுருக்கீங்க.., எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு பாய். ஆனா..பாய்..யாருன்னுதான் எங்களுக்கு சரியாத் தெரியலை..,இதுக்கு முன்னாடி உங்களை இந்தப்பக்கத்துலே பாத்ததாகவும் நெனப்பில்லே..!”, புதிய மனிதரை தாங்கள் சந்தேகிப்பதாகவோ, அச்சப்படுவதாகவோ, தவறாக எதுவும் அவரால் புரிந்துகொள்ளப் பட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையில்,மிக நிதானமாய், தேர்ந்தெடுத்த வார்த்தைகளில்,முகத்தில் மலர்ச்சியும்,பணிவும் தொனிக்க முஸ்தபா பேசினார்.அது அவருடைய குணமும் கூட..அதனால்தான் குடும்பத்திலோ, பொதுவிலோ எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், முஸ்தபா -விடம் ஆலோசனைகளைக் கேட்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தது பக்தூர்.

புதியவரின் முகத்தில் மெலிதான புன்னகை அரும்பியது.அனைவரின் பார்வையிலும் தன்னைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆவல் ததும்புவதைக் கண்டு அவரின் அகம் மகிழ்ந்திருக்க வேண்டும்.அன்பும்,நட்பும் மிளிரும் நெருக்கமான வார்த்தைகளில் அவர் பதில் சொல்லத் துவங்கினார்.
“என்னோட பேரு நாகூர் மீரான்..”
--------------- ---------------- [-தொடரும் ]

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (15-Dec-15, 6:16 pm)
பார்வை : 120

புதிய படைப்புகள்

மேலே