ஓ சிகரெட் துண்டே

அரும்பில் இல்லாத ஒன்று
அறிந்தபின் முளைக்கிறது
விரல்களுக்கிடையில் ஆறாம் விரலாய்..
சிகரெட் துண்டு..
உணவில்லை அடுப்பெரிக்க
புகைமட்டும் வந்துகொண்டிருக்கிறது..
எங்கள் உறவுகளின்
நுரையீரலில் இருந்து..
உயிர்வளி அங்கே
உள்ளே செல்ல மறுக்கிறது
இரத்தத்தின் ராஜாங்கத்தில்
கரியமில வாயு
காரியஸ்தனாகி விட்டதால்..
அழகு என்றும்
ஆறுதல் என்றும்
கரம் பிடித்த புகையிலை
நம் சந்ததியை அழித்து
சமாச்சாரம் சொல்கிறது
புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என்று..
அறிவில் வளர்ச்சியடைந்து
அழிவைத்தேடுகிறோம்
நம் அழிவின் வளர்ச்சியில்
அது
பரிணாம வளர்ச்சியடைகிறது..
சுருட்டு,பீடி,சிகரெட்டாக..
விரலாக்கி வழியமைத்தோம்
வாழ்வு அழிய..
அதில்
நெருப்புவைத்தோம்
நாம் எரிய..
அழகை கண்ட நீவீர்
அபாயம் காண மறந்துவிட்டீரே..
அதோ புகைக்கு நடுவே பூதமொன்று
சிரிக்கிறது..
உமை விழுங்க...