மடியவில்லை மனித நேயம்

மடியவில்லை மனித நேயம்

மடியவில்லை மனித நேயம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

இருள்படரும் முன்னிரவு மனைவி யோடு
இருசக்கர வண்டியிலே சென்ற போது
தெருமுனையின் குறுக்கினிலே ஓடி வந்து
தேர்க்காலில் விழுந்தகன்றாய் நுழைந்த நாயால்
இருவருமே நிலைகுலைந்து கீழே வீழ
இடைநின்ற கம்பத்தில் தலையும் மோத
பெருகிவந்த குருதியாலே மனைவி மயங்க
பெருத்தவடி வலியாலே துடித்தேன் நானும் !

பார்த்தவர்கள் பார்த்தபடி பதைப்பே யின்றிப்
பாதையிரு திசைகளிலும் நடந்து சென்றார்
ஊர்விழாவில் வேடிக்கை பார்ப்ப தைப்போல்
உற்றுநோக்கி அவர்வழியே கடந்து சென்றார்
யார்இவர்கள் எனத்தமக்குள் கேட்டுக் கொண்டு
யாதொன்றும் நடவாதது போல்ம றைந்தார்
வேர்போன்ற கணியன்தன் கேளிர் சொல்லோ
வெறுஞ்சொல்லாய் ஆனதென்றே நொந்து போனேன்!

எந்திரமாய் மாறிவிட்ட வாழ்க்கை தன்னில்
எல்லோர்க்கும் அவர்பணியே தலையாய் ஆக
முந்தியிங்கே செழித்திருந்த காடோ யின்று
முற்றிலுமாக மொட்டையாகிப் போன போல
சந்ததியை வாழவைத்த ஆறோ யின்று
சாக்கடையாய் மாறிவிட்ட தன்மை யாக
சிந்தனையில் சிறந்திருந்த நேய மின்று
சரழிந்து போனதுவே எனக்கு மைந்தேன் !

பெரியவர்கள் பெண்களென அத்த னைப்பேர்
பெயரளவில் உச்சுகொட்டி சென்ற போது
உரியதொரு பொறுப்பற்றோர் என்றே ஏசி
ஊர்தூற்றும் இளைஞர்கள் இருவர் வந்து
தெரியாத எங்களினை எடுத்துச் சென்று
தேவையெனும் குருதியையும் கொடுத்தே காத்தார்
அரிதாகி மடியவில்லை மனித நேயம்
ஆங்காங்கு இருப்பதாலே உள்ளோம் நாமும் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (17-Dec-15, 11:02 am)
பார்வை : 110

மேலே