வினையால் அனையும் பெயர்

கொஞ்சம் உணவுக்காகவும்
நிறைய சுயமரியாதைக்காகவும்
நடக்கிறது,
தாக்குதல் தொடர்பான
திட்டமிடல்கள் யாவுமே
கூரிய பற்களையும்
திணவெடுத்த தோள்களையும்
எதிரியின் குடல் சரிக்கும்
கால் நகங்களையும்
நேரில் பார்க்கும் திராணியில்லை
உங்களுக்கு...,
ஆனால்,
நிறைய மஞ்சளும்
கொஞ்சம் கருப்பு வர்ணமும் இருந்தால்
பயமில்லாமல் புலியை
வரைந்துவிடுகிறீர்கள்...
வெளிக் காற்றுக்குப் பயந்து
பூட்டிய ஓர் அறையிலிருந்து
வியர்வை ஏதும் சிந்தாமலே
புலிகள் எம்மை
`பூனை` வகைக் குடும்பம் என்று
வகைப் பிரித்த
உங்களின் ஏளனத்தை மட்டும்
எங்களால்
தாங்கிக்கொள்ளவே முடியவில்லை...