கேள்விகளால் ஒரு வேள்வி
கேள்விகளால் ஒரு வேள்வி
காட்டாறா ஆதவனை இழுத்து செல்லும்?
கருந்தேளா தன்கொடுக்கால் தேனை நல்கும்?
ஆட்டிடமா ஓநாயும் அன்பைப் பொழியும்?
அறுசுவையா கடும்பசியில் ருசியைக் கொடுக்கும்?
சாட்டையில்லா பம்பரமா நன்றாய் சுழலும்?
சாதிமதம் பார்த்திருந்தால் நாடா வளரும்
நாட்டுநலம் வெறுப்பவனா நண்மைக் கொள்வான்?
தாய்நாட்டை காப்பவனே நல்லோன் ஆவான்?
அழைப்பில்லா இல்லத்தில் விருந்தா கிட்டும்?
ஆழமில்லா குளம்தானா படகைத் தாங்கும்?
புழுப்பூச்சா வரலாற்றை மாற்ற செய்யும்?
புண்னேற்கா வீரனாலா வெற்றி கிட்டும்?
கொழுகொம்பா மரத்தினைத் தாங்கி நிற்கும்?
குரங்கிடமா பூமாலை அழகை ஏற்கும்?
உழைக்காத ஊதியமா உயர்வை ஈட்டும்?
உண்மையிலா பேச்சுக்கு புகழா கிட்டும்?
கற்பூர வாசத்தை கழுதைகளா நுகரும்?
கத்துகடலலை ஆழமதைக் கண்களா அறியும்?
கற்றாழையா கன்னியின் கூந்தலில் மணக்கும்?
காதலதன் மாண்புதனை காமூகனா அறிவான்?
பூக்களின் மென்மையை புயலா அறியும்?
பூந்தேனின் சுவைதனை பூனைகளா ருசிக்கும்?
தாமரையின் சிறப்பினை தவளைகளா அறியும்?
தாய்நாட்டை பழிப்பவர்க்கா பெருமைக் கிட்டும்?
கருத்தில்லா மனிதனாலே கால ஓட்டம்!
கணக்கிலே வருவதில்லை கலகம் மூட்டும்!
நிறத்திலே ஏற்றத்தாழ்வு நேர்மை ஓட்டும்!
நெஞ்சத்தின் வஞ்சகத்தால் நன்மை இல்லை!
தரத்திலே உயர்ந்தாலே தரணி ஓங்கும்!
தாய்நாட்டு பெருமையெலாம் தலை சிறக்கும்!
உரம்வேண்டும் உழைப்போடு ஊக்கமும் வேண்டும்!
ஒளிமயமாய் நம்நாடு வாழ்தல் வேண்டும்!
- கே. அசோகன்