தாரிணி
தாரிணி ! பேறு நீ ..
பெரும் பேறு நீ கரும்பாறு நீ
உனை விரும்பார் யாரடி
இங்கு யாரடி ...
யாழினி மழலை பேசும் யாழ் நீ
தேன்மொழி நீ பேசுவது தேன் மொழி
பூமணி நீ பூ மணி
பூவே உன்மேனி பூமேனி ...
தீந்தமிழ் பேசும் தேவி நீ
இனிக்கும் நாவினி லாவணி
உன்னுளறல் கூட ஒரு லாவணி
தேம்பாவணி நீ தேன் பா அணி ...
காமினி பாமினி யாமினி
மாதுளை இதழினி -இளம்
மாவிலை மா விலை உதட்டினி
நீ ஒரு நடமாடும் பூவிதழ் ...
மீனலோசினி நீலவேணினி நீசிந்தும் நகையினில்
நீ அருகில் இருக்கையில் தேவைகள் ஏதடி...
மலர்விழி காந்தம் அதன்வழி ஈர்ப்பதால்
உன் கண்கள் மலர்விழி !
உன்னை அள்ளி அணைக்க - நீ
துள்ளி குதிக்க உன்பாதம் சிவக்க
வெள்ளி சிரிப்பால் முல்லைக் கணை தொடுக்கும்
நறுமுகையே அறிய அலர்வகையே ...
ஓடடி நீ ஓடடி பாடடி நீ பாடடி
விளையாடடி உனக்கு விலை ஏதடி
சிரிக்கணும் நீ வாழ்வில் சிறக்கணும்
பறக்கணும் நீ கொடிகட்டி பறக்கணும் ..
தாரிணி ! பேறு நீ ..
பெரும் பேறு நீ கரும்பாறு நீ
உனை விரும்பார் யாரடி
இங்கு யாரடி ...