உதறி எழும் நியாயங்கள்

* * * * * * * * * * * * * * * * * * *
அது ஒரு அசாத்திய வழியோரம்
இதமான குளிர் தென்றல்
இளையோடி நனைத்துக் கொண்டிருந்தது
அசம்பாவிதம் ஏதும்
நடப்பதற்கு சாத்தியமில்லை
அவன் ஓசையின்றி
உலகத்தை அசைபோட்டபடியே
நடந்து கொண்டிருந்தான்

தென்றலின் இதத்தோடு
மெல்லியதாய் நகர்ந்த
பாரத்தை தாங்கிய பாதத்தின் சின்னிவிரலை
திடீரென்று ஈரம்
கசிந்து உருகிக் கொண்டிருந்தது
உதறி விடப்பட்ட கல்லா
உதறி எழுந்த காலா
காயத்தை உண்டாக்கியது
உணர முடியாதிருந்தது. ...

முளைத்தெழுந்த கல்
புத்திசாலி போல்
முதுகைக் காட்டி நின்றது
மென்மைப்பாதத்தின
இரத்தக் கண்ணீர் வடிய சின்னி விரல்
வாக்குவாதம் புரிந்தது
தெளிவாய் இரு என்று
கல் புத்தி பகன்றது
தெளிந்து நடந்ததா அந்தப் பாதம்

இருந்தும் காலுக்கு கோபம்
வந்திருக்க கூடாது
ஒரு கணம்
உதைத்துக் காட்டியது
துள்ளிப் பாய்ந்தது கல்
தூர்ந்து சிதைந்தது கால் .......

மனசாட்சியை தூசு தட்டி
மீள அடுக்கினான்
ஆழ் அகப்பெட்டகத்தினுள்
அப்போதும் உதறி எழுந்து
அடம் பிடித்தது
என் குற்றமல்ல
கல் குற்றமென்று. .............
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (20-Dec-15, 9:37 pm)
பார்வை : 77

மேலே