வைகுண்ட ஏகாதசி தொகுப்பு செய்தி
படித்த செய்தி
வைகுண்ட ஏகாதசி..
மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் போற்றி வணங்குவர். இந்நாளில் விரதம் கடைப்பிடித்து பெருமாளை தரிசித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பரம பத வாசல்
இந்த பரமபத வாசல் திறப்பு விழா நம்மாழ்வார் காலத்துக்குமுன் இல்லை என்று கூறுவர்.
கலியுகத்தில், நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்குச் செல்வோர் யாரும் இல்லாததால், வைகுண்ட வாசல் மூடப்பட்டு இருந்ததாம். நம்மாழ்வார் முக்தியடைந்த நாளில்தான் அது திறக்கப்பட்டதாம். இதனை அறிந்த நம்மாழ்வார், "எனக்கு மட்டும் வைகுண்ட வாசல் திறந்தால் போதாது; என்னைத் தொடர்ந்து தங்கள்மீது பக்தி செலுத்தும் அடியவர்களுக்காகவும் வைகுண்ட வாசல் திறக்கவேண்டும்' என்று பெருமாளிடம் வேண்டினார். நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்க வழி செய்தார் மகாவிஷ்ணு. அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியாகப் போற்றப்படுகிறது என்பர்.
துவாபர யுகம் முடிந்து கலியுகம் பிறந்ததும், வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்ட வாசலை மூடிவிட்டனர். இதனைக் கண்ட பெருமாள் அவர்களிடம், ""வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ""எம்பெருமானே! கலியுகம் பிறந்துவிட்டது. இனிமேல் அதர்மம் தலைதூக்கும்; தர்மம் நிலை குலையும். பாவங்கள் பலவிதங்களில் பெருகும். ஊழல்கள் பல ரூபங்களில் தலைதூக்கும். தெரிந்தே தவறு செய்வார்கள். நீதி வழங்குபவர்கூட சுயநலத்திற்கு ஆளாகி தீர்ப்பினை மாற்றி எழுதுவார்கள். அந்தச் சூழலிலிருந்து மானிடர்கள் யாரும் தப்பமுடியாது. அதனால் வைகுண்டம் வருபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் வாசலை மூடிவிட்டோம்'' என்றனர்.
அதற்கு பெருமாள், ""கலியுகத்தில் பக்தி பெருகும்; தர்மம் செய்பவர்கள் பெருகுவார்கள். சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்'' என்றருளினார். இந்த விளக்கத்தை பெருமாள் சொன்ன நாள் மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினம் என்றும் கூறுவர்.
எல்லாவற்றையும் விட உயர்ந்த இடத்தில் இருப்பதுதான் பரமபதம். இதை வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். இங்குதான் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய திவ்ய மஹிஷியான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் நித்ய வாசம் செய்து வருகிறார். ஒரு ஆத்மா, தன்னுடைய புண்ணிய பாவங்களை எல்லாம் விட்டு ஒழித்தபின் ஸ்ரீமன் நாராயணனுடைய கருணையாலே, அந்த உயர்ந்த ஸ்தானமாகிய பரமபதத்தை அடைகிறான் என்று வைணவ சித்தாந்தம் கூறுகிறது.
சற்று விரிவாகக் கூறினால், சுவர்க்கம் சென்ற ஆத்மாக்களும் கூட மறுபடியும் இந்த பூமிக்கு வந்து பிறப்பெடுத்து திரும்பவும் கஷ்டப் பட நேரிடும். ஆனால், பரமபதத்தை அடைந்து விட்ட ஆத்மா ஒரு போதும் பூமிக்கு மீண்டும் வருவதில்லை. அது எப்போதும், அங்கேயே இருந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணனுடைய பாதங்களில் சேவை செய்து மகிழ்வோடு இருக்கிறது.
அதை நினைவூட்டும் விதமாகத்தான் இந்த பரமபத வாசல் திறப்பு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் எல்லா வைணவ திருக்கோயில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.