காலைச் சாரல் 22 - வீடு

20-12-2015

அதிகாலை எண்ணங்கள்..

காலை மாடம் தரும் சுகம், சிந்தனையை சற்று சிதறடிக்கும்.... நம் பழய நினைவுகளை அசை போட வைத்து, புதியதுடன் இணைக்க முயலும்....

****

மொட்ட மாடிமேல் ஏறி, "அதோ தெரியுது பாருங்க தூரத்துல, அதுதான் பக்கத்து வீடு" 'க்ரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகத்தின் வசனம்..(1960 களில்)

கையில் இருக்கும் எல்லாப் பணத்தையும் திரட்டி, மனைவியின், வெள்ளி, தங்கத்தை விற்று, PF-ல் லோன் போட்டு, ரூ 15,000/-த்தில், மூன்றில் ஒரு பங்கு விலையைக் கொடுத்து, அன்று முகப்பேரில் 385 சதுர அடி, வீட்டு வசதி வாரியத்தின் அடுக்கு மாடியில் தரைத் தளத்தை வாங்கி (குலுக்கல் முறை தேற்வின் அதிஷ்டசாலி) குடி புகும்போது, மாம்பலத்தில் வசிக்கும் அப்பா சொன்னது.. "எப்பொழுதாவது பெங்களூர் செல்லும்போது வருகிறேன்...." (1982)

முன்னால் 25 அடி, பின்னால் 20 அடி என்று இடம் விட்டு கட்டித் தந்த வாரியத்தின் கொடையை, சிதைத்த பெருமையும் எமக்கு உண்டு....

அந்தப் பிரதான 120 அடிச் சாலையில் அன்று ஒரு மணி நேரத்தில் ஒரு வாகனம் கடக்கும்.... (இன்று ஒரு மணிக்கு ஒரு விபத்து நடக்குமோ என்ற அளவுக்கு போக்குவரத்து நெரிசல்)... பொது போக்குவரத்து என்ற பெயரில் ஒரு மினி பஸ் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை .... சில நாட்கள் வாரா.....
****

வாடகை வீடுதான் வாசம் என்ற நிலையில் இருந்தபோது, பலவித வீடுகளைப் பார்த்தாகிவிட்டது....

ஆரம்பத்தில் பழைய மாம்பலத்தில் எல்லா வீடுகளும் 1 1/2 யிலிருந்து 2 கிரவுண்ட் அளவில், முன்னால் பத்தடி, பின்னால் இருபது அடி இடம் விட்டு, பின்புறம் கோடியில் கழிவறையும், வீட்டில் கிணரும் இருக்கும்.... மரங்களும், நிழலும், செடி கொடிகளும், குழந்தைகள் விளையாட இடமும், குழந்தைகளும் இருக்கும்.... வீட்டின் பக்கவாட்டுப் பகுதி வாடகைக்கு என்றே அமைப்பில், நடுவில் ஹால், வலது பக்கம் ஒரு அறை, இடது பக்கம் சமையல் அறை என்ற பொது விதியில் இருக்கும்... சில விடுகள் இரயில் பெட்டி தொடர் போல் ஒரு அறையிலிருந்து அடுத்த அறை செல்லும்...

பிரதானப் பகுதியில் வீட்டின் சொந்தக்காரர் இருப்பார்.. அவரின் நேரடிப் பார்வையில் இருந்ததால் அடிக்கடி சச்சரவில், குடியிருப்பவர் வீடுகள் மாறுவர்... ஆனால் அதே பகுதிக்குள் சுற்றி சுற்றி வருவார்... வாடகைக்கு விடாமல் தனி வீடாய் இருந்தவர்களும் பலர்... (மாமரம் இருக்கும், எங்கள் கல்லடி படும்...)

பசுமையாக நினைவில் நிற்பது, அந்த இரண்டு கிரவுண்டில் ஒரு ஓரத்தில் 500 சதுர அடி வாடகைக்கு வீடு அமைத்து , மற்ற இடத்தில் எருமை மாடுகளை வளர்த்த அம்மணியை.... அங்கு நான் தோட்டத்தில் போட்ட வெண்டையும் தான்...

தனி வீடுகளைத் தாண்டி வளர மறுத்த கால கட்டத்தில், அடிக்கடி வீடு மாறி அல்லலுறுவோரின் தீராக் கனவு தனக்கென ஒரு வீடு. இதன் வெளிப்பாடே சென்னைப் புற நகர் வளர்ச்சி.... வளசரவாக்கம், பழவந்தாங்கல், மடிப்பாக்கம், பம்மல், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, போன்ற பகுதி.... இதன் தொடர்ச்சியாக, இப்பொழுது இந்தப் பகுதியிலிருந்து துரத்தப்படுபவர்களின் தேடலே 'சென்னைக்கு மிக அருகில்....'

கிராமத்து வீட்டில் வீடு நிறைய பொருட்கள் இருக்க வாசலில் பாய் விரித்து நட்சத்திரம் எண்ணிப் படுத்த காலங்கள் போய் அட்டை பெட்டி வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் காலம்வரை வீடுகளின் பரிமாண வளர்ச்சி தொடர்கிறது.. மாடி வீட்டுப் பெட்டியிலிருந்து வரும் குழந்தை கீழ் வீட்டில் 'எங்கம்மா வீட்டுக்குள்ளேயே விளையாடச் சொன்னார்கள்' என்பது வரை.... வசதிகளின் பெருக்கத்தில், கிராமத்தின் குளத்தையும், நகரத்தின் கேளிக்கைகளையும் இன்று வளாகத்திற்குள் கொண்டுவரப் படுகிறது....

நாலு வருடங்கள் படிப்பு நிமித்தமும், ஐந்து வருடங்கள் வேலை நிமித்தமும் (1969-78), மாம்பலத்திலிருந்து மீனம்பாக்கம் புற நகர் இரயிலில் செல்லும் பொழுது நான் வழி நெடுக கண்ட மாற்றங்கள்.. இந்த வருட நிகழ்வின் முன்னோடியாகவும் இருக்கலாம்.... ஸ்பிக் கட்டிடம், கரையோரம் கல்லூரி, ஆறுகளின் ஓரம் குடியிருப்புகள், கரையோரம் சமன்படுத்தி நீள்/உயர் மதில்கள்.. மேற்கும் தெற்கும் இணைக்க தண்டவாளத்தின் கீழ் சுரங்கப் பாலங்கள்... கீரைப் பாத்திகளும், பரந்த வெளிகளும், வீடுகளாக மாறியபோதும்... அது ஒரு வளர்ச்சி என எண்ணியதும் உண்டு.... அப்போழுதும் ஒரு முறை, ரயில் தடம் தொட்டு அடையாறு ஆறு ஓடியது உண்டு.... கோட்டூர்புரமும் முழுகியது.... ஜாஃப்ரகான் பேட்டையும் முழுகியது..... மிஞ்சிய நீரை ஊர் உள்வாங்கியது என்றே கொள்ளலாம்.... இம்முறை நீர் அந்த சுரங்கப் பாலங்களை நிறைத்ததையும் கண்டேன்..
****

வீடு என்பது நான்கு சுவர்களுக்குள் அடங்கி நம்மைப் பற்றியே கவலைப்படுவது.... கலவரமான நேரங்களில் ஊரைப் பற்றி....

மற்றபடி, பழையபடி.....

----- முரளி

எழுதியவர் : முரளி (20-Dec-15, 12:39 pm)
பார்வை : 380

சிறந்த கட்டுரைகள்

மேலே