கல்லூரி நினைவலை
![](https://eluthu.com/images/loading.gif)
கனவுக்கும்
நனவுக்குமிடை
உத்தரிக்கும்
உணர்வென
நளின
கோலமிடும்
அந்நினைவலைகளுள்
மூழ்கையில்
காலம் செரித்த
எச்சமாகிறேன்
நான்!
வெட்டிப்
பேச்சு...
குறுகுறுப்
பார்வை...
நையாண்டிப்
போக்கென
நான் பயின்ற
இடம்தான்
புதிதில்லை...!
காண்கிறேன்
இன்றும்
அநாதைக்கு
அடையாளம்
காட்டப்பட்ட
அம்மாவாய்...!
கட்டியணைக்க
முயலுந் தருணம்
கலைந்துப்
போகும்
முதற்காதல்
கனவாய்!!...
காலப்பெருவெளியில்
இன்று எப்பக்கம்
புதைந்துள்ளதோ
அந்நாட்கள்?!
கனவின்
மொழியில்தான்
கேட்க வேண்டும்
முகவரியை...!
வேண்டாமென
நான் மறுத்தும்
நண்பர்கள்
இழுத்துச்சென்று
உணவளித்த
அக்கேண்டினோ...
காலமெல்லாம்
வாளாவிருந்து
கடைசி நொடி
புத்தகங்களுடன்
மல்லுக்கு நின்ற
அந்த இயற்பியல்
துறை
திண்ணையோ...
சினிமா,அரசியலென
வீண்வாதத்தில்
களைக்கட்டிய
அம்முனீஸ்வரன்
கோயிலோ...
துளியேனும்
தரப்போவதில்லை
அன்றைய
உணர்வையின்று!...
அடுத்தகட்ட
நகர்வுதான்
வாழ்க்கையெனில்
தொலையும்
ஒவ்வொரு
நொடி
சுவாரஸ்யத்தின்
விலையென்ன?
நினைவுகளை
மீட்க தெரிந்த
மனத்திற்கு
உணர்வுகளை
மீட்க
தெரியாததேன்?!
இளமையின்
வேந்தென
கர்வத்துடன்
சுற்றித்திரிந்த
நானெங்கே?!
வறண்டுவிட்ட
காவிரியாய் ஈரம்
காய்ந்த
இன்றைய
நானெங்கே?!
ச்சீ...ச்சீ! எல்லாம்
அர்த்தமற்றவை...!
இதோவென
கைநீட்டி
அடையாளம்
காட்டும்
முன்னம் களவு
போன
நந்தவன
நாட்களவை...!
கனநொடி
தோன்றி
மறையும்
வானவில்லாய்
கண் ரசிக்கும்
கணம்
பறிபோன
பொக்கிஷமவை...!
காலத்தின்
கீறல்களில்
பட்டுப்போன
இந்நிலைக்கும்...
பசுமைகாயா
பட்டாம்பூச்சியாய்
மனம் சிறகடித்த
அந்நாட்களுக்கும்
பாலமமைக்கின்றன...
சட்டென
கண்ணவிழ்ந்து
திரளமென
கன்னத்தில்
கசியும்
இருதுளிகள்
காயா
ஈரத்துடன்!!!
********************