நீ பெண்ணானதால்

சத்தமாய்
வாய்விட்டு சிரித்தது
இதுவரை போதும்
இனியும் வேண்டாம்
நிறுத்திவிடு
ஐந்தில் ஒன்று
அவிழ்த்து விடப்பட்டதாய்
கதவற்றிருக்கும்
காதுகளைப்போல்
இதயத்தையும் இருக்க
வைத்து விடாதே
அனுமதியின்றி நுழைந்து
அலங்கோலம் செய்பவர்கள்
அதிகம் இங்கு
ஏதேனுமொரு கருவி
கொண்டு மூடு- இல்லையேல்
அரைமதி இருகூர் முக்கூர்
என மூன்று உள்ளது
மூன்றில் ஒன்றையேனும்
உபயோகித்துக்கொள்
நாடி வழி குருதி
அழுந்திப் பாயாவிடினும்
பரவாயில்லை
ஒரு சில ஓட்டை வழி
ஊடுருவும் போலிப்
புன்னகையை உதடுகளின்
ஓரங்களில் பங்குவைத்து
இதழ் ஒடுக்கி புன்னகை செய்
அது போதும்
இங்குள்ளவர்களிற்கு
பாசத்தை பந்தியில்
பலவித பலகாரங்களுடன்
பங்கு வைக்காதே
அதிகமாய் கேட்டு
அள்ளி உண்டுவிட்டு
உப்பில்லை காரமில்லை
இன்னும் கொஞ்சம்
வெந்தது போதாதென
குறை கூறி
குற்றம் கடிபவர்
அதிகம்
இலை மட்டும் போதும்
அவர்களுக்கு
இயற்க்கையின் நியதி
பிழை என்றால்
அதை இறைவன்
பொறுக்கட்டும்
அங்குள்ள ஒரு சிலருக்கு
இலை கூட வேண்டாம்
மாமிசம் உண்பவர்கள்
கிட்டப் போகாமல்
எட்டி இருப்பதே நல்லது
அகல விரிந்த வாய்களுடன்
உன் உணவிற்க்காய்
நீண்ட விரதமிருப்பவர்கள்
பாசாங்கு புரிவார்கள்-உன்
பாதையின் பயணம் பற்றி
பத்திரமாய்இரு
பருவமெய்தியவர்களிற்க்கு
மட்டும் - என
கொட்டை எழுத்துக்களில்
இதுவரை போடப்பட்டது - இன்று
பால்குடி மறந்த
உனக்கும் உரைக்கிரேன்- நீ
பெண்ணென்று பிறந்ததால்