திருடிய கவிதையவள்
* * * * * * * * * * * * * * * * * * * *
அந்த திருடன்
என் வீட்டு யன்னல் அருகே
நிலவை விட்டுச் சென்று விட்டான். ..
யன்னல் திரைச்சீலை வழியே
அந்த நிலவின் துடிப்பான கண்கள்
திரு திரு என்று முழித்துப் பார்க்கின்றன
என்னுள் ஒரு பூரண வெட்கம்
பூத்துப் பூத்து அடங்குகிறது
அவள் பார்க்கிறாளா என்றே
நானும் பலதடவை பார்த்துப் பார்த்து
பார்வையை பரிமாறிக் கொள்கின்றேன். ..
இருட்டிக்கிடந்த இதயத்தின் சுவர்களில்
திடீரென்று மஞ்சள் செவ்வந்திப் பூக்கள்
மலர்ந்து குலுங்கிச் சிரிக்கிறது
ஒளி நீட்டிய விழி அம்புகள் விடியலைக் கண்டதும் காணாமல்
அடுத்த வீட்டுக் கோடியில் மறைந்து கொண்டது
திருட்டுத்தனமாய் தேடும் என் மஞ்சள் தடவிய இதயச் சுவர்
மங்காமல் இருளத் தொடங்கியது
அது திருட்டுக் காதலா
என் இதயம் திருடப்பட்டு கீறிய கிழிசலா ....?
புரியவில்லை எனக்கு
நானும் ஒரு கவிதையை திருடிய திருடன் தான். ..
இன்னும் கைது செய்யப்படாமலேயே
விலங்கு பூட்டி இருக்கிறேன். ..!
- பிரியத்தமிழ் -