ஒரு மாணவனின் குரல்

மழை விடுமுறை
மாணவர்கள் படிப்பு பாதிப்பாம்!
புலம்பிக் கொண்டிருக்காதீர்கள் பெருசுகளே!
மழை கற்றுக் கொடுக்காததையா
ஆசிரியர் கற்றுக் கொடுத்து விடப் போகிறார்?
.
ஆர்க்கிமெடிஸ் தத்துவத்தையும்
மிதத்தல் விதிகளையும்
அறிவியல் ஆசிரியரை விட
நன்றாகவே சொல்லித் தந்தது மழை!
.
ஆற்றங்கரை,
நாகரீகங்களை வளர்த்த
வரலாற்றை பாடத்தில் படித்தோம்.
நாகரீகம்
ஆற்றங்கரைகளை அழித்த வரலாறு
மழை தானே சொல்லியது

கொள்ளளவும், செ.மீ, .டிஎம் சி கணிதப் பாடத்தை
கச்சிதமாக கற்பித்துக் காட்டியது மழைதானே!

ஒண்டிக்கொள்ள இடமின்றி தவித்தபோது
நிவாரணம் செய்ய வந்தோரால்
அரசியலும் கொஞ்சம் அறிய முடிந்ததே!

வெள்ளம் பெருக்கெடுத்துப் பரவிய போது
புவியியல் பாடமும் புரிந்து போனது

எந்த பள்ளிப்பாடத்தினாலும்
அறிய முடியாத
நல்லமனம் படைத்தோரை
மழைதான் அடையாளம் காட்டியது! .

இத்தனை பாடங்கள் போதாதா?
இன்னொரு முறை சொல்லாதீர்!
மழை விடுமுறையால்
படிப்பு பாழாய்ப் போனதென்று!

எழுதியவர் : டி.என்.முரளிதரன் (23-Dec-15, 6:55 am)
பார்வை : 86

மேலே