காட்சிப் பிழைகள் - 13 பழனி குமார்

காட்சிப் பிழைகள் ......13
***************************************

மின்சாரம் அறுந்த நள்ளிரவில்
நான் நிலவுக்காக காத்திருந்தேன்
நீயோ ஒரு மின்மினிப்பூச்சியென
என் தோள்களில் அமர்ந்தாய் .

கருத்திருந்த மேகம்
உன் கார்கூந்தலை காட்டியபடி
என்னையும் மிதக்கச் செய்து
மிதந்து போனது .

காதலின் பேரலையில்
உன் காலடியில் சேர்ந்தேன்
எனை அள்ளிக்கொண்டு போகும்
பரிசல் நீ.!

வெளிச்சம் மின்னிய என் கடலில்
நிலாவென நீ மிதந்திருந்தாய்
கரை ஒதுங்கிய அலையாவும்
காதல் நுரைத்திருந்தது .

என் மதியங்கள்கூட உன்
மதிமுகம் காண ஏங்குகிறது !
இந்தச்
சூரியனை என்ன செய்வது ?

மௌனம்தான் உன்
மொழியெனில் கற்றுக்கொடு
எனக்கும்,
நான் உன்
இதயத்தைப் படிக்கவேண்டும்

இளவேனிற் காலங்களில்
இணைந்திருந்த நம்
இதயங்களில்
உதிர்ந்துவிட்டதே உன் இதயம்
இதென்ன இலையுதிர்காலமா ?

உன் புன்னகை கண்டுதான் நான்
காதல்கூடு கட்டினேன் ,
நீ விட்டுப்போனதால் நான்
கிளையை வெட்டினேன் .!

இமையைத்திறந்து கருவிழிக்குள்
உன்னை வைத்திருக்கிறேன்
காட்சிகள் யாவும்
காதலும் நீயும்தான் .!

அறுந்த பட்டமாய் வெளியில் நீ
அலைந்து போகின்றாய்.
வெறும் நூலை மட்டும்
வைத்துக்கொண்டு நான் வானம்
பார்த்து நிற்கின்றேன் .

நீ மலர் நான் காற்று
நான் உன் இதழ் அவிழ்க்கிறேன்
நீ அழகாகிறாய் .!

சிறகொடிந்த பறவையை
வரைந்து
கை கழுவி விட்டாய் நீ !
என் வானம் நிறம்
இழந்து விட்டது .!


- பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Dec-15, 1:15 am)
பார்வை : 733

மேலே