8ஆதாமின் அப்துல்லா – பொள்ளாச்சி அபி

பக்தூர் பள்ளிவாசல், அன்று எளிமையான அலங்காரத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஊரின் மதிப்பு மிக்க மனிதரான முஸ்தபாவின் வீட்டுக் கல்யாணம் என்பதால், நெசவாளிகளும், விவசாயிகளும்,விவசாயக் கூலிகளுமாக பள்ளிவாசல் முகப்பு நிறைந்திருந்திருந்தது.

பள்ளிவாசலின் வாயிலிலிருந்து,நீண்டு சென்ற அகலமான பந்தலுக்கு கீழே,மக்கள் கொண்டு வந்து போட்ட விதவிதமான இருக்கைகள் கிடந்தன.

யாரோ ஒருவர் பந்தலின் முகப்பில் செழுமையான வாழை மரங்களை பக்கத்திற்கொன்றாய் கட்டி வைத்திருந்தார். முசல்மான்களின் நிக்காவில் இது வழக்கமில்லையென்றாலும், தங்கள் அன்பை அவர்களுக்குத் தெரிந்த வழியில் காட்டுவதை, வேண்டாம் என்று சொல்ல முடியாதே..!

இதேபோல்தான்,நிக்காவில் போடப்படும் மதிய விருந்துக்காக, நெசவாளியான கிருஷ்ண -மூர்த்தி நல்ல வளர்ந்த ஆடு ஒன்றை முதல்நாள் இரவே முஸ்தபாவின் வீட்டிற்கு கொண்டு வந்து கட்டிவைத்துப் போக, காய்கறி மண்டிக்காரர் குலாம்காதர் மளிகை சாமான்களை இறக்கி வைத்துப் போனார்.

எளிய மனிதர்களின்,அன்புமிக்க ஆதரவோடு பள்ளிவாசலில் நாகூர் மீரான்-பாத்திமாவின் நிக்கா நடந்து முடிந்தது.

முஸ்தபாவின் வீட்டின் அருகிலேயே புதுமணத் தம்பதிகளின், குடித்தனத்திற்கான பண்ட பாத்திரங்களுடன் அறையொன்று ஒதுக்கித் தரப்பட்டிருந்தது.

அறையில் விரிக்கப்பட்டிருந்த புதிய பாயில் நாகூர் மீரான் அமர்ந்திருந்தார். சற்றுத் தள்ளி வைக்கப்பட்டிருந்த லாந்தர் விளக்கிலிருந்து மங்கிய வெளிச்சம் அறையெங்கும் ஒரு மெல்லிய சந்தனப்பூச்சு போலப் பரவியிருந்தது.மணத்திற்காக எரிந்து கொண்டிருந்த ஊதுபத்திகள் ஏறக்குறைய தீரும் நிலையிலிருந்தன.

லேசாக மூடி வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு திறக்கப் படுவதும்,பாத்திமா உள்ளே நுழைந்தாள். “கதவைத் தாழ் போட்டுக்கோ..” உசேன் பீவியின் குரல் தொடர்ந்து வந்தது.பாத்திமா அதனை மெதுவாகச் சாத்திடத்தான் முயற்சித்தாள். பழைய கதவு சுலபத்தில் நகர முடியாமல் முரண்டு காட்ட,சற்றே அழுத்தம் கொடுத்து சாத்தியதில்,வேகமாகச் சென்ற கதவு “டப்..”என்று சத்தத்துடன் மூடிக் கொள்ள, “ஹஹ்..ஹஹ்ஹா..பெண்ணுக்கு ரொம்ப அவசரம் போல.. ஹஹ்ஹா..என்று சிரித்தது பெண்கள் கூட்டம். பாத்திமாவிற்கு மிகவும் வெட்கமாய்ப் போய்விட்டது. கதவருகே குனிந்தவள் இன்னும் நிமிரவில்லை.

“பாத்திமா..நல்லா என்னை நிமிர்ந்து பாரு..” நாகூர்மீரானின் கணீரென்ற குரலில் ஈர்க்கப்பட்ட பாத்திமா தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

லாந்தரின் வெளிச்சத்தில் தெரிந்த நாகூர்மீரானை அவளுடைய கண்கள் எடைபோட்டுக் கொண்டிருந்தன.

“நிக்காவைப் பத்தி உனக்கு என்னமாதிரி கனவு இருந்ததுன்னு எனக்குத் தெரியாது.ஆனா,அது பத்தி எந்த சிந்தனையுமில்லாம இருந்த என்னை,முஸ்தபா பாய் கேட்டுகிட்டதாலத்தான் நான் இந்த நிக்காவுக்கு சம்மதிச்சேன்.ஒருவகையிலே அவருக்கு நான் காட்டுற நன்றிக்கடனாவும் தோணுச்சு..,உங்கிட்டயும் என்னைப் பத்தி முதல்லேயே சொல்லியிருப்பாங்கன்னு நம்புறேன்..” நாகூர் மீரான் சொல்லிக் கொண்டிருக்க,பாத்திமா அமைதியாக அவரையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

“இஸ்லாத்துலே பொண்ணுகளுக்கு நிக்கா பண்ணும்போதுதான், சம்பிரதாயத்துக்காக.., கபூல்ஹை..ன்னு கேப்பாங்க.., ஆனா..நான் உன்னோட சம்மதத்தை நிக்காவுக்கு மொதல்லேயே தெரிஞ்சுக்கனும்னு சொல்லியிருந்தேன், அதுக்கப்புறம் நிக்காவுக்கான ஏற்பாடெல்லாம் நடந்தப்பத்தான் உனக்கும் சம்மதம்னு தெரிஞ்சது.

உன்னைவிட வயசுலே ரொம்ப அதிகமா இருந்தும்,நீ நிக்காவுக்கு சம்மதிச்சது,எனக்கு ரொம்ப சந்தோஷம் பாத்திமா,இன்னும் சொல்லணும்னா.., எனனோட வாழ்க்கை இந்த மாதிரி அமையும்னு நான் நினக்கவே இல்லை.. உனக்குத்தான் முதல்லே நன்றி சொல்லணும்” நாகூர் மீரானின் குரலில் நெகிழ்ச்சியும், அன்பும் வழிந்தது.

பாத்திமாவுக்கு நினைவுகள் சற்றே பின்னோக்கி ஓடியது.‘தனக்கு நிக்கா செய்து வைக்க இருப்பதாகச் சொன்ன யாருமே,தனது கணவனாக வரப்போகிறவரின் வயது குறித்து சொல்லவே இல்லையே..!

ஆனால்,சற்று வயது கூடியிருந்தாலும் மிக நிதானமாக,கனிவுடன் பேசுகின்ற இவரிடம், அதுவும் தன்னை நிக்கா செய்து கொள்ள சம்மதித்தற்கு நன்றி சொல்லும் பண்புள்ளவரிடம், உங்கள் வயது பற்றி எனக்கு யாருமே சொல்லவில்லை..என்று சொன்னால்.., அது பண்புடைய செயலாகவா இருக்கும். மேலும் அது எவ்வளவு சிக்கல்களை உருவாக்கும்..?,

எனது திருமண வாழ்வு குறித்து,கனவு காணும் நிலையிலா இருந்தேன்.? தாய்,தந்தையின்றி, அண்ணன்களின் ஆதரவுமின்றி தவித்தபோது உணவுக்கும்,உடைக்குமே பஞ்சம் வந்துவிடுமோ.. என்று அச்சப்பட்ட நேரமும் இருந்ததே..!, அல்லாவிடம், நல்ல வழியைக் காட்டு என்று இறைஞ்சியதன் பலனாக,முஸ்தபா மூலமாக இப்படியேனும் தனக்கொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து, தனக்கொரு பாதுகாப்பை உருவாக்கிக் கொடுத்த ஆண்டவனுக்கு நன்றியுடையவளாக அல்லவா நான் நடந்து கொள்ளவேண்டும்..?

அவள் அமைதியாக நிற்பதைப் பார்த்து, “பாத்திமா..நான் கேட்டதற்கு பதிலே சொல்லலையே..?” நாகூர் மீரானின் குரலில் இப்போது லேசான பதட்டம் தெரிந்தது.

பாத்திமா சுயநினைவுக்கு வந்தாள்.. “ கதீஜா நாயகத்தின் வயசுக்கும், இறைத்தூதர் முகமது நபிக்கும் வயசு வித்தியாசம் எத்தனைன்னு நான் சொல்லி,நீங்க தெரிஞ்சுக்கணுமா..? கதீஜா நாயகம் ஒரு பெண்,அவங்க இடத்துலே இப்ப நீங்க இருக்கீங்க.. அவ்வளவுதானே..?”

‘ஆஹா..ஆஹா..என்னவொரு அழகான,பத்திசாலித்தனமான உதாரணம்..’ பாத்திமாவின் பதில்,நாகூர்மீரானுக்குள் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.மேலும்,மார்க்கக் கல்வியில் அவளின் மேதமையும் புரிந்தது.

“ரொம்ப அருமையாச் சொன்னே பாத்திமா..!” எனக்கு இப்பத்தான் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கு.. வா..இங்க வந்து உக்காரு..”என்று அவளது கையைப் பற்றி மெதுவாய் தன்னருகே அமரவைத்துக் கொண்டார். அதுவரை,பாத்திமாவிடம் அவருக்கு இருந்த அந்நியம்,சில மணித்துளிகளில் அந்நியோன்னியமாய் மாறிப்போனது.

இடைவெளிவிட்டு கடந்து கொண்டிருந்த மேகக் கூட்டங்களுக்கு நடுவே நிலாவும், நட்சத்திரங்களும் இப்போது மகிழ்ச்சியோடு உலாப் போய்க் கொண்டிருந்தது.

முதல் நாளிரவில் ஏற்பட்ட புரிதலும்,அன்பும்,இனிமையும் நாள்தோறும் அதிகரிக்க, நாகூர்மீரான் பாத்திமா தம்பதிகளின் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது.பள்ளிவாசல் மூலமாக வந்து கொண்டிருந்த சிறு வருமானமும்,பாத்திமா, குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் மார்க்கக் கல்வியின் பலனாகவும் ஓரளவு நல்ல வருமானம் வந்து கொண்டிருந்தது. இஸ்லாமிய நெறிகள், வரலாறுகள்,அவை உணர்த்தும் உண்மைகள் என ஓய்வாயிருக்கும் மாலை நேரங்கள்,அருமையான விவாதங்களுடன் நகர்ந்து கொண்டிருந்தது.

முஸ்தபாவின் வீட்டு முற்றமும் வாசலும், இப்போதெல்லாம் மனிதர்களின் சந்தடிகளே நிறைந்து காணப்படுகின்றன. பாத்திமாவின் சந்தேகங்களுக்கு நாகூர் மீரானும்,அவரின் கேள்விக்கு பாத்திமா பதில் கண்டுபிடித்து சொல்வதுமாக நகர்ந்த பொழுதுகள்,அந்த ஊரிலிருந்த முசல்மானுகளுக்கு நல்ல தீனியாயிருந்தன.எத்தனை கேள்விகள்..? எத்தனை பதில்கள்..! அடேங்கப்பா..தம்பதிகள் என்றால் இவர்கள் அல்லவோ தம்பதிகள்.. அந்தப் பெண்ணாகட்டும், ஹஜரத்தாகட்டும்..என்னவொரு ஞானம்,என்னவொரு தேடல்..?

பதில் இல்லாத கேள்வியே அவங்ககிட்டே இல்லப்பா..! புருஷங்கிட்டே கேட்டா,பட்டாசு வெடிச்ச மாதிரி, பொண்டாட்டிகிட்டேயிருந்து பதில் வருது.அதே மாதிரித்தான்..அந்தப் பொண்ணு ஒரு நொடி தாமதிச்சாக்கூட, ஹஜரத்துகிட்டேயிருந்து பதில் வருது. நல்ல வேளையப்பா…நாம இந்த ஊருலே பொறந்தோம்.. இல்லைன்னா இந்த ஜென்மத்துலே இந்த மாதிரியெல்லாம் கேட்டுருக்க முடியுமா..?” பக்தூரில் திரும்பிய பக்கமெல்லாம் இப்படிப்பட்ட மகிழ்ச்சியான பேச்சுக்களே பரவியிருந்தன.

அந்த மகிழ்ச்சியை மேலும் அதிகமாக்கும் விதத்தில்,அந்த வருட இறுதியில்,ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள் பாத்திமா.

--------தொடரும்

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (24-Dec-15, 9:05 pm)
பார்வை : 117

மேலே