காந்தியும் தூய்மை இந்தியாவும்
காந்தியும் தூய்மை இந்தியாவும்
-----------------
நாஞ்சில்நாடனின் மிதவை நாவலில் பம்பாய் சேரி பகுதிகளின் வாழ்க்கைச் சித்திரம் வரும். காலையில் ‘சண்டாஸ்’ கழிக்க கருக்கிருட்டில் ரயில் இருப்புப்பாதைகளுக்கு செல்ல வேண்டும். கருக்கிருட்டில் சென்றால் மட்டுமே கவுரவமாக கழிக்க முடியும். பெண்களும் ஆண்களுமாய் எல்லோருக்கும் அதுதான் ஒரேவழி. நிச்சயிக்கப்பட்ட பெண் மலக்குழியில் விழுந்ததால் பித்தாகும் காதலனின் சித்திரம் உறையவைக்கும்.
ஜெயமோகனின் புறப்பாடிலும் மும்பையின் மலக்குழி பற்றிய சித்திரம் வரும். அவருடைய ஒலைச்சிலுவை கதையிலும்கூட காலரா பற்றிய சித்திரம் விரியும். கிரெகரி டேவிஸ் எழுதிய ஷாந்தாராம் தாராவி சேரியின் பின்புலத்தில் விரிகிறது. சுந்தர ராமசாமி மொழியாக்கம் செய்த தகழியின் ‘தோட்டியின் மகன்’ நாவல் அவர்களின் உலகையும் அதிலிருந்து விடுபட வேண்டும் எனும் வேட்கையையும் பதிவு செய்கிறது. ஒவ்வொரு மழைகாலங்களிலும் கொள்ளை நோய் ஏற்பட்டு குடிசைகளுக்குள் நீர்புகுந்து மொத்தமாக உயிரை அள்ளிப்போகும் சித்திரங்களைதான் இப்படைப்புகள் அனைத்துமே வழங்குகின்றன. இப்படைப்புகள் காட்டும் அழிவின் சித்திரங்கள் பொது சுகாதாரம் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.
சிந்து சமவெளி கழிப்பிடம்
தனிச் சுகாதாரம் பேணுவதற்கு இந்திய மரபு விரிவான வழிமுறைகளை வகுத்திருக்கிறது. தனிச் சுகாதாரத்தை பேணும் நாம் பொதுச் சுகாதாரம் குறித்து அக்கறையற்ற சமூகமாகவே இருக்கிறோம். இந்த முரண் குறித்து காந்தியும் பேசியிருக்கிறார். நம் வசிப்பிடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனும் உந்துதல் நமக்கிருக்கிறது ஆனால் அந்தக் குப்பைகளை நம் வீட்டிற்கு வெளியே சாலையில் கொட்டுவதில் நமக்கு எவ்வித குற்ற உணர்வும் இல்லை.
இந்தியாவின் மிகமுக்கியமான சவால் பொது சுகாதாரம் என்றே எண்ணுகிறேன். பெரும்தொகையிலான மக்களுக்கு இன்னும் கழிப்பறை வசதி சென்று சேரவில்லை என்பதே நிதர்சனம். சுமார் 638 மில்லியன் மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒவ்வொருநாளும் இந்தியா முழுவதும் தவிர்க்கக்கூடிய வயிற்றுப் போக்கினால் ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் மரிக்கிறார்கள் என்கிறது மற்றொரு தகவல்.
திறந்தவெளியில் மலம் கழிப்பது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எளிதாக வழிவகுக்கிறது. பிறப்புறுப்பில், மூத்திர பாதையில், குடலில் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவினால் வளர்ச்சி தடைபட்டு ஊட்டம் குன்றியவர்களாக ஆகிறார்கள். இன்றளவும்கூட மனிதர்கள் மலத்தைச் சுமந்து செல்லும், சுத்தம் செய்யும் அவலம் இங்கு நீடிக்கிறது.
சென்ற இதழில் வெளிவந்த நிகழ்கண காந்தி கட்டுரையில் நண்பர் கொண்டைவளை அளிக்கும் சித்திரம் மனிதநேயம் கொண்ட எவரையும் அதிர்ச்சியில் உறையச் செய்யும். மலம் அகற்றும் துப்புரவு தொழிலாளிகள் தொடர்ந்து சுரண்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் உயிர்களைப் பற்றி அக்கறை கொள்ள எவருமில்லை.
கழிப்பறை மிக முக்கியமான சமூக – பொருளாதார சிக்கலும்கூட. கழிப்பறை கட்டுவது மட்டுமல்ல அதன் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் வேண்டும். பெரும்பாலும் அரசு கட்டிக்கொடுக்கும் கழிப்பறைகள் பயன்படுத்த இயலாத அளவிற்கு பராமரிப்பின்றி கிடக்கின்றன. வருடத்திற்கு ஏழாயிரம் கோடி ரூபாய் கழிப்பறைகள் கட்டிகொடுக்க அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனாலும் திறந்தவெளி மல கழிப்பில் இந்தியாவே அகில உலக முதல்வன், அதிலும் அதன் அடுத்த நிலைகளில் இருக்கும் பதினெட்டு நாடுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இருமடங்கு அதிகமானவர்கள் திறந்தவெளியில்தான் மலம் கழிக்கிறார்கள்.
சிந்து சமவெளி காலகட்டத்தில் நீர் பயன்படுத்தப்பட்ட ஃபிளஷ் கழிப்பறைகள் புழக்கத்தில் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன என்பது ஒரு நகைமுரண்தான். உலகத்தில் முதன்முதலில் ஃபிளஷ் கழிப்பிடம் பயன்படுத்திய சமூகம்தான் இன்று இத்தனை பின்தங்கியிருக்கிறது.
அரசின் திட்டங்கள் மக்களின் இயல்பு என இருபுள்ளிகளிலும் மாற்றம் நிகழ வேண்டும். நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின்கீழ் மானியத்தொகையில் கிராமப்புறங்களில் கழிவறை கட்டிக் கொடுக்க அரசு முன்வந்திருக்கிறது. ஆனால் மானியத்தொகை 4600 மட்டுமே வழங்கப்படுகிறது. அது கழிவறை கட்டுமானத்திற்கு போதியதாக இல்லை. மேற்கொண்டு பணம் போட்டு கட்டுவதற்கு மக்களும் விரும்புவதில்லை. நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் அறுபது சதவிகிதமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
2011 புள்ளிவிவரப்படி அரசு உதவியின் கீழ் 71 மில்லியன் கழிப்பறைகள் கட்டிகொடுத்தாலும் இருபது மில்லியன் கழிப்பறைகள் பயன்பாட்டில் இல்லை. வடிவமைப்பில் பிராந்திய தேவைகள் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதே இது விடுக்கும் செய்தி.
திட்ட அளவில் அரசு உயர்ந்த நோக்கங்கள் கொண்டதாகவும், மக்களுக்கு பயனுள்ளதாகவும்தான் இருக்கிறது ஆனால் அதை அமல்படுத்துவதில்தான் நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. அரசு நிர்வாகம் முழுமையான முனைப்புடனும் அக்கறையுடனும் செயல்பட்டால்தான் திட்டங்கள் வெற்றி அடைய முடியும். மேலும் பிராந்திய தேவைகள் மைய திட்டமிடலில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இயந்திரத்தனமாக செயல்படுத்த முனையும்போது எல்லா இடங்களிலும் சம அளவிலான பலன்கள் வருவதில்லை. உள்ளூர் சூழலுக்கு ஏற்ப திட்டங்கள் தகவமைக்கபட வேண்டும்.
கிராமாலயா அமைப்பு இருபது ஆண்டுகளுக்கு மேலாக கிராமப்புறங்களில் கழிப்பறைகளை கட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு செலவழிக்க இயலும்? ஒதுக்கப்படும் இடம் எவ்வளவு? மண்ணின் இயல்பு, நிலத்தடி நீர் போன்ற புவியியல் காரணிகள், பண்பாட்டு பழக்கவழக்கங்கள், நீர் பற்றாக்குறை/ நீர் இருப்பு, உரிய மனிதவளம் என இவ்வனைத்தும் கழிப்பறை வடிவமைப்பில் கணக்கில் கொள்ளப்படவேண்டும் என்கிறார்கள். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பத்து வடிவமாதிரிகளை இச்சுட்டி விவரிக்கிறது.
காந்தியின் பேரன் அருண் காந்தி அவருடைய ஆசிரம வாழ்வை பற்றிய கட்டுரை ஒன்றில் கழிப்பகற்றல் குறித்தான காந்தியின் பார்வையை, தனது அனுபவத்தை முன்வைத்து விரிவாக எழுதுகிறார்.
“ஆசிரமத்துவாசிகள் அனைவரும் தயங்கிய, கடினமான பணியோன்று உண்டென்றால் அது ஆசிரமத்து பொது கழிவறைகளை சுத்தப்படுத்துவதுதான். காந்தி வேண்டுமென்றே தனி கழிவறைகளை அனுமதிக்கவில்லை. ஆசிரமத்தின் ஒரு மூலையில் இருந்த பொது கழிப்பிடத்தையே அனைவரும் பயன்படுத்தவேண்டும். சாதி அடக்குமுறை கழிவறை சுத்திகரிப்பில் இருந்து தொடங்குவதாக காந்தி எண்ணினார். இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் அவர்களுடைய பணியின் காரணமாகவே தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தனர்.
"தாழ்த்தப்பட்ட சாதி மக்களே தெருக்களை கூட்டுவது, குப்பைகளை அகற்றுவது, பொது கழிப்பிடங்களை சுத்தம் செய்வது போன்ற கீழான பணிகளைச் செய்யத் தகுந்தவர்கள் என்று நம்பப்பட்டது. அவர்களுடைய பணி கீழானதாகக் கருதப்பட்டதால் அதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலியும் மிகக் குறைவாக இருந்தது. ஆதலால் அவர்கள் வறுமையிலும் அறியாமையிலும் காலம் கழிக்க வேண்டியதானது.
"விதிவிலக்கின்றி அனைவரும் கழிப்பிடங்கள் சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டாக வேண்டும். முதன் முறையாக எனக்கு இந்த பணி வழங்கப்பட்டபோது, அது என்னை கொந்தளிக்கச் செய்தது. ஆனால், என் தாத்தா உட்பட அனைவரும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். நான் யாரிடம் சென்று புகார் செய்திட முடியும்? நான் எனக்கு கொடுக்கப்பட்ட பணியை கீழ்படிந்து செய்யத் தொடங்கினேன், காலப்போக்கில் என் ஆரம்பக்கால கொந்தளிப்புகள் அடங்கின. பணியின் மதிப்பையும் மகிமையையும் புரிந்துகொள்ள அது ஓர் வாய்ப்பாக இருந்தது."
துஷார் காந்தி மற்றும் அருண் காந்தி வெவ்வேறு கட்டுரைகளில் ஆசிரமத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை (சற்றே வேறு வார்த்தைகளில்) பதிவு செய்திருக்கிறார்கள்.
காந்தியின் உற்ற தோழரின் புதல்வர் ஸ்ரீமன் நாராயன் செழிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து பிரித்தானியாவின் லண்டன் பொருளியல் கல்லூரியில் பொருளியல் பாடத்தில் பட்டம் பெற்று பெரும் கனவுகளுடன், மகத்தான யோசனைகளுடன் நாடு திரும்பியவர். குடும்பத் தொழிலை தொடர்வதற்கு முன்னர் காந்தியைக் கண்டு ஆசி பெற்று இந்தியாவின் வருங்காலத்தை உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்த விரும்பினார். காந்தி அவரை தன்னுடைய சேவாக்ராம் ஆசிரமத்தில் ஏற்றுகொண்டார். தனக்கு எதாவது பனி வழங்க வேண்டும் என அவர் கோரியபோது, மறுநாளிலிருந்து கழிவறை சுத்தபடுத்த வேண்டும் என காந்தி கூறினார்.
ஸ்ரீமன் நாராயன் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், எல்லா வேலைகளைச் செய்யவும் வேலையாட்கள் உண்டு. ஆனால் அவரால் காந்தியின் வாக்கை மீற இயலவில்லை. மிகுந்த மனக்கசப்புடன் முதல்நாள் அவ்வேலையை செய்தார். ஒருவாரம் கழிந்த பின்னர் காந்தியிடம் “பாபு நான் கழிப்பறைகளை இந்த ஒருவார காலம் சுத்தம் செய்துவிட்டேன். .நான் மற்றைய முக்கியமான பணிகளை எப்போது தொடங்குவது?” என கேட்டார். காந்தி திரும்பவும் அதே வேலைக்கு அனுப்பினார். ஒரு மாதம் கழிந்தது “ பாபு நான் லண்டன் பொருளியல் கல்லூரியில் பட்டம் பெற்றவன், என்னால் மகத்தான விஷயங்களை சாதிக்க இயலும், எனது திறமையை இப்படி கழிவறை சுத்தப்படுத்துவதிலேயே விரயம் செய்வது ஏனோ?” என வாதம்செய்தார்.
“நீ வெளிநாட்டில் கற்றவன், பெரிய விஷயங்களை உன்னால் சாதிக்க முடியும் என்பதெல்லாம் எனக்கு தெரியும், ஆனால் சிறிய விஷயங்களைச் செய்வதற்கு உண்டான தகுதி உன்னிடம் இருக்கிறதா என்பதை நான் இன்னும் அறியவில்லை. வறுமை ஒழிப்பு, வளர்ச்சி, கல்வி வழங்குதல் போன்ற பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என விரும்புவது புரிகிறது ஆனால் மிகக் கீழான வேலைகளைச் செய்வதற்கான மனப்பக்குவம் இல்லாது போனால் உனது தாய்நாட்டை சூழ்ந்திருக்கும் உண்மையான பிரச்சனைகளை நீ உணரமால் போய்விடலாம். உண்மையில் ஏதேனும் மாற்றங்களை உண்டாக்க விரும்பினால் நீ உனது அகந்தையை விட்டகல வேண்டும், அப்போதுதான் முக்கியத்துவமற்ற கீழான பணிகளைச் செய்வதற்கு தேவையான பணிவை உணர்ந்துகொள்ள முடியும், அதை கவுரவத்துடனும் மரியாதையுடன் செய்யத் துவங்கும்போது பெரிய காரியங்கள் எல்லாம் தானாக எளிதில் கைகூடும்.” என்றார் காந்தி.
காந்தி கழிவறை சுத்தத்தை இரு வகையில் அணுகினார் என்பது தெளிவாகிறது. ஒன்று எல்லாவித உடலுழைப்பும் சமமானதே எனும் கருத்தை நிறுவி ஏற்றத்தாழ்வை போக்க முனைந்தார் மற்றொன்று பொதுச் சேவையில் அகந்தையை விடுத்து களப்பணிக்கு தயார் செய்யும் நோக்கம். கொல்கத்தா காங்கிரஸ் நிகழ்வில் பங்கேற்க இந்தியா வரும் காந்தி மலக்குழிகளை தூய்மைப்படுத்தத் தொடங்குகிறார்.
தேசகட்டுமானத்தின் மிக முக்கியமான பகுதியாகவே கழிப்பிடத்தை கருதினார் என்பதற்கு இதுவே சான்று. அணு பந்தோபத்யாயா எழுதிய பகுருபி காந்தி எனும் நூலில் காந்தி எனும் தோட்டியை பற்றி விவரிக்கிறார். கொள்ளை நோய் காலங்களில் காந்தி வீடுவீடாகச் சென்று கழிப்பிடங்களை ஆய்வு செய்தார். செல்வந்தர்கள் வீட்டு கழிப்பிடங்கள் மிக மோசமாக இருந்ததைக் கண்டு வருந்துகிறார்.
காந்தி சுயாட்சியை ஒரு மரத்துடன் ஒப்பிட்டார். தீண்டாமை ஒழிப்பு, ஆக்கப்பூர்வ செயல்திட்டம், விடுதலை போராட்டம், போன்றவை எல்லாம் அதன் வேர்கள். எந்த வேருக்கு நீருற்றி பேணினாலும் அது மரத்திற்கான ஊட்டம்தான் என அவர் கருதினார். காந்திக்கு ஆங்கிலேய அரசிடமிருந்து விடுதலை பெறுவதைப் பற்றி எந்த அளவிற்கு கவலை இருந்ததோ அதேயளவு இந்தியர்களின் கழிப்பிட வழக்கங்களை பற்றிய கவலையும் இருந்தது. .
“ விருந்தினர் அறை எப்படி சுத்தமாக இருக்கிறதோ அதேயளவு கழிப்பறையும் சுத்தமாக இருக்க வேண்டும் என முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னரே நான் கற்றுக்கொண்டேன். மேற்கிலிருந்துதான் இதைக் கற்றுக்கொண்டேன். கிழக்கைக் காட்டிலும் மேற்கில் கழிப்பறை தூய்மைக்காக பல விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுகிறார்கள் என்றே நம்புகிறேன்.” என்கிறார் காந்தி.
சேவாக்ராம் - காந்தியின் கழிப்பறை
நோய் பரவாமலிருக்க உரிய முறையில் மலத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கருதினார். “நமது இந்திய கழிப்பிடங்கள் நமது நாகரீகத்தையே இழிவு செய்கின்றன. அவை அடிப்படைச் சுகாதார விதிகளுக்கு எதிரானவை.” என்று காந்தி 1925 ல் எழுதுகிறார்.
சேவாக்ராம் காந்தி ஆசிரமத்தில் உள்ள அவரது குடிலில் விசாலமான கழிப்பறை இருக்கிறது. திறந்தவெளி கழிப்பிடம் மட்டுமே புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் வேறுவழியின்றி எளிமையாக கட்டப்பட்டிருந்த காந்தி குடிலில் கழிப்பறை வசதி இருந்திருக்கிறது. காந்தி வடிவமைத்த கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவு சுற்றுவட்டாரத்தில் உள்ள வயல்வெளிகளுக்கு உரமாகும் வண்ணம் அமைந்திருக்கிறது.
சமூக மாற்றத்தின் மிக முக்கியமான கருவியாக கழிப்பறையை சுத்தம் செய்தலை கருதினார் காந்தி. ஒரு சமூகத்தின் உண்மையான சுதந்திரம் மற்றும் பெருமை பொது மற்றும் தனி மனித சுகாதாரம் குறித்தான பார்வையில் அடங்கி இருக்கிறது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அடுத்த பிறவியில் தான் ஒரு பங்கியாக பிறக்க வேண்டும் என்றே விரும்பினார்.
இவ்வாண்டு காந்தி ஜெயந்தியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி முன்னெடுத்திருக்கும் ‘தூய்மை பாரதத்திற்கான முயற்சி வெற்று விளம்பரம் என விமர்சிக்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் நாட்டின் பிரதமர் கையில் துடைப்பத்துடன் தெருவில் இறங்கியதும், அவருடைய சவாலை ஏற்று வேறு பல முக்கிய ஆளுமைகளும் தூய்மையாக்கப் புறப்பட்டிருப்பதும் வரவேற்கபட வேண்டியதே.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் சிலர் இணைந்து அருகில் உள்ள பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி அதன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டோம். குச்சிகளை கூராக்கி, கையுறை, மூச்சுறை எல்லாம் அணிந்துகொண்டு மூன்று தெருக்களில் ஒரு காலைவேளை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பொறுக்கினோம். அந்தப் பகுதி மக்கள் சிறிது நேரம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துவிட்டு அகன்று சென்றனர். மூட்டை மூட்டையாக சேகரித்த மட்காத குப்பைகளை பேரூராட்சி குப்பை வண்டியில் சேர்ப்பித்தோம். அதன் பின்னர் ஒவ்வொரு வீடாக சென்று பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளை விளக்கும் துண்டு பிரசுரத்தை அளித்தோம்.. படித்த இளைஞர்கள், வேறு பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களே தங்கள் பகுதியில் குப்பையை அகற்றினார்கள் எனும் செய்தி ஒரு முன்மாதிரியாக, தூண்டுகோலாக இருக்கும் என நம்பினோம். ஆகவே அதன் பின்னர் சொல்லப்படும் செய்திக்கு ஒரு மதிப்பு இருக்கும் என்றும் எண்ணினோம். இரண்டே வாரங்களில் அப்பகுதி பழையபடி ஆனது. தொடர்ந்து சில வாரங்கள் செய்திருந்தால் மாற்றம் ஏதும் நிகழ்ந்திருக்குமோ என்னவோ? தெரியவில்லை.
இம்முயற்சிகள் பெருந்திறள் மக்களுடன் குறியீட்டு ரீதியாக உரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாய்ப்பிருக்கிறது என்பதில் ஐயமில்லை ஆனால் இவை ஆரம்ப சூரத்தனங்களுடன் நின்றுபோய்விடகூடிய அபாயமும் இருக்கவே செய்கிறது.
இது தீர்வை நோக்கிய பயணத்தின் ஒரு அடி எனும் தெளிவு அரசிற்கும் மக்களிற்கும் இருக்க வேண்டும். இத்துடன் சேர்ந்து நெடுங்காலத்திற்கு பலனளிக்கும் செயல்திட்டமும் இணைய வேண்டும். காந்தியின் கனவான மாசற்ற, திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத, தூய்மையான இந்தியா நனவாக வேண்டும்.