பட்டாம்பூச்சி
ஏன் எங்கேயோ பார்க்கிறாய்?
என்னைப் பார்க்க மாட்டாயா?
என் தோட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
என் பூக்களின் தேனை குடிக்க வந்தாயா?
யார் தீட்டிய ஓவியங்கள் அவை? உன் இறக்கையில்?
ஓ,உன் கூட்டில் ஒளிந்துகொண்டு இதைத்தான் வரைந்திருந்தாயா?
அடடா! அழகாய் ஜொலிக்கிறதே! உனக்கதை விற்க ஆசையா?
கறுப்புக்குட்டைகளில் காவி வண்ணத்தை ஊற்றியதுபோல் உள்ளனவே!
வெள்ளைப் புள்ளிகள் என்னவோ?
நான் ஒன்று சொல்லவா? நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்?
எனக்கு உன்னைத் தொட ஆசை, தொடவா?
அசையாதே, உன் இறக்கையைத்தான் நான் தொடப்போகிறேன்.
என்ன இது? ஏன் பறந்து விட்டாய்?
உன்னைக் கேட்டுத்தானே தொட வந்தேன்?
எண்டே செல்கிறாய்? நில்! போகாதே.
போ, உன்னோடு நான் பேசமாட்டேன்............................................
ம்...........இன்றும் வந்துவிட்டாயா? போ,உன்மேல் எனக்கு கோபம்.
நேற்று ஏன் பறந்து சென்றுவிட்டாய்?
ம்,ஆனால் உனக்குத்தான் என்னைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.
சரி நீபோய் தேன் குடி.உனக்கு பசியாயிருக்கும்.
உனக்கொன்று தெரியுமா? நான் இன்றைக்கு ஊருக்குப் போகப்போகிறேன்.
நீ ஏன் அங்கு வரமாட்டேன் என்கிறாய்?
உனக்கு நகரம் பிடிக்காதா?
நீயும் இம்முறை என்னுடன் வருகிறாயா? ஏன் அப்படி பார்க்கிறாய்?
உனக்கும் என்னைப்போல் பாட்டி வீடுதான் பிடிக்குமா?
பயப்படாதே,நான் உன்னைப் பிடித்துப் போகமாட்டேன்.
சரி சரி அம்மா கூப்பிடிறா நான் போகிறேன்.
நான் வரும் வரை பாட்டியைப் பார்த்துக்கொள்.
அப்புறம் இம்முறை உன் இறக்கையில் வேறு ஓவியம் தீட்டிவை.
சரியா? நான் வருகிறேன்......