விடை தருவாயா

எங்கிருக்கிறாய்
என் ஒளியே
நிழல் போல்
எனைத் தொடர்ந்தது
நீயென்பது நிஜமா?

என்னைச் சுற்றி
ஒலித்த ஓராயிரம்
குரல்களுள்
உன் குரலைத் தேடித்
தொலைந்து போகிறேன்..
எனக்காகவா இது வரை
நீ பாடிக் கொண்டிருந்தாய்?

நானோர் குழந்தை
எனக்குள் தவழும்
இன்னோர்
குழந்தையா நீ

தீர்க்கப் படாத
சமன் பாட்டின்
முரண்பாடுகளை
காரணிப்படுத்த முடியாத
குறைகள்
என் பக்கமே இருக்கட்டும்..

இப்படித்தான்
என்பதை எப்படி
விளங்க வைப்பது?
இதில்
கணக்கே என்னுடன்
பிணக்காகிறது.

வெட்டியது நானல்ல..
நம் விதி.
காயங்களைக் குருதியால்
கழுவுகிறேன் எனத்
தெரிந்தும்
கட்டுப் போட மட்டும்
கத்தியை தேர்ந்தெடுக்காதே

நீமட்டுமல்ல
நானும்தான்
அழுகிறேன்
விதி மட்டும் அங்கே
கை கொட்டிச் சிரித்துக்
கொண்டிருக்கிறது

இந்த மேடையில்
இறுதி வரை நடித்த
இந்த ஒரேயொரு முகத்தை
பையில் போட்டுப்
பயணிக்க முயல்கிறேன்
விடை தருவாயா?

பிரச்சனைகள் எல்லாம்
சிறு பிடிவாதத்தில்
இருந்தே ஆரம்பிக்கின்றன
பிறந்து வளர்ந்த விதந்தான்
காரணமாகுமா?
பெற்றவர்கள் தான்
இங்கு இல்லையே..
வியத்தம் அடையாத இந்த
வினாவிற்கான விடையை
விடை பெறுமுன் கூறி விடுவாயா???

எழுதியவர் : சிவநாதன் (3-Jan-16, 12:15 am)
Tanglish : mannithu vidu
பார்வை : 110

மேலே