பொல்லா அறம்

இல்லானை இல்லாளும் வேண்டாள்
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்
இல்லான் சொல்லு வெறும்
செல்லாக்காசு


எல்லாளன் இல்லானாலும்
இல்லாள் இல்லாவிடின்
இல்லாது போகும்
ஈடேற்றம்


இல்லாளன் இல்லா இல்லாளை
என்னாளும் இஞ்ஞாலம் நல்லாள்
என்னும் சொல்லால் வாழ்த்தாதது
அல்லால் பொல்லாள் என்றே தாழ்த்தும்


கல்லால் எறிந்தே கொல்லும்
பொல்லால் அடித்தே கொல்லும்
வில்லால் எய்தே கொல்லும்
யாக்கை அளிக்கும் வள்ளலவள்
காக்கை குளிக்கும்
கூளத்தொட்டியவள்
ரவிக்கை கிழிக்கும் அடங்காப்பிடாரி


பாக்கை சப்பி நாக்குச்சிவக்கத்துப்பி
வாழ்க்கை முதலும் முடிவும்
முழுதும்-ஒரு
கூழ்கை வாங்க ஆடவரை
கூகை யது போல் கூவியழைக்கிறாள்


தெருத்தரித்து ஆடவரை ஆர்ப்பரித்து
வரவழைத்து உறவதனால் உழைத்து
கருத்தரித்து கேடவளை சுதாகரித்து
வரமாய் வந்தது மடியினில் மகவொன்று


தன் உதரம் ஆற
தன் அதரம் கூற
பின் ஆடவர் நகரமே
பெண்பின் கூட


நின் உதரம் ஆற மகவே!
என் உதிரத்தினில் பாற்சாறூற
என் மேனி கூவி விற்கவேண்டும்
உன் மேனி இல்லை விற்கவேண்டும்


மஞ்சத்தசையுது மங்கையவள் கொங்கை
பஞ்சத்தால் பறந்ததே சங்கை
செஞ்சோற்றுக்கடன் செய்து
முடிப்பதற்குள்
செத்துப்பிழைக்கிறாள் இவள்


பத்துப்பணம் பெற்று பால்மா பெற்று
பிள்ளைக்கு புகட்டுவதற்குள்
மங்கைக்கு புகட்டும் இந்திரியங்கள்
சங்கையெனச்சொல்லும்
இந்திரலோகத்திலும் இல்லை


இல்லறமும் நல்லறமும் போக்கி
துறவம் நீக்கி
மேதினியில் இல்லா பொல்லா
அறம் போக்க
எத்தனை செல்வச்சிங்கங்கள் இருந்தும்
இத்தனை அசிங்கங்கள் இகமே வருந்தும்


யாக்கை-உடல்
கூகை-குயில்
உதரம்-வயிறு
அதரம்-உதடு
மஞ்சம்-கட்டில

எழுதியவர் : மன்னாரமுது அஹ்னப் (5-Jan-16, 1:44 pm)
பார்வை : 90

மேலே