அப்பா எனும் ஒற்றைச்சொல் பேரன்பு

ஒருமுறை என் எதிரே என் மனைவிக்கும் மாமனாருக்கும் ஏதோ ஒரு விவாதம் வந்தது.

மனைவி மாமனாரை (அவர் அப்பாவை) செமையாக திட்டிவிட்டார். எனக்கே கொஞ்சம் தர்மசங்கடமாகவும் மாமனார் முகத்தைப் பார்க்க கூச்சமாகவும் ஆகிவிட்டது.

மனைவியை நான் கூட கொஞ்சம் திட்டிப்பார்த்தேன். அதற்கெல்லாம் மசியவில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் நேரடியான நியாயம்தான். அதற்கு உடன்படாத எல்லோருக்கும் திட்டுதான்.

ஒருமுறை ஹதிராபாத்தில் மாமனாரும் நானும் வீட்டில் பரோட்டாவும் விதவிதமான சிக்கன் வகைகளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஹைதிராபாத்தில் சிக்கன் சுவையாக இருக்கும் என்பதால் ஹோட்டலில் வாங்கி வந்திருந்தேன்.

நானும் மாமனாரும் வெளுத்துக் கொண்டிருக்கும் போது என் மனைவி வந்தார்

“ஹலோ எவ்வளவு வாங்கினீங்கன்னு உங்களுக்கு தெரியும். அதுல நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு சாப்டீங்கன்னா மிச்சம் எவ்வளவு இருக்கும். இன்னும் ரெண்டு லேடீஸ் சாப்பிடனும்ன்னு உங்களுக்கா தெரியலையா” என்று ஒரே போடாய் போட்டார்.

நான் கிச்சனுக்குள் சென்று “என்ன பிள்ள கர்டசி இல்லாம” என்றேன்.

“என்ன கர்டசி. உங்களுக்கெல்லாம் ஏன் கர்டசி இல்ல” என்று பதில் கிடைத்தது.

பொதுவாக வீட்டில் இருக்கும் ஆண்கள், பெண்கள் தியாகம் செய்வாள் என்பதை
உறுதியாக நம்புவது தவறு என்பது மட்டுமில்லாமல் அது அநியாயம் என்பதை பலமுறை புரியவைத்திருக்கிறார்.

என்ன ஒன்று புரியவைக்கும் முறை கொஞ்சம் ஊசியால் குத்தியது போலிருக்கும்.

இதுமாதிரியான ஒரு நியாயமான விசயத்தை முன்னிட்டு அவர் அப்பாவை திட்டிவிட்டார். மாமனார் முகம் சோர்ந்திருந்தார்.

இதைவிட மாமனாரிடம் நல்ல பெயர் எடுக்க வாய்ப்பு கிடைக்காது என்று பேசினேன். உண்மையான அக்கறையும் இருந்தது.

“நீங்க என்ன மாமா. அப்பாதான. அவ பேசினா நீங்க குறுக்க இறங்கி அவள திட்டி அடக்க வேண்டியதுதான. ஏன் ரொம்ப பேச விடுறீங்க”

மாமனார் சிரித்தார்

“அப்படி மனசு வராதுல்லா. அஞ்சு வயசு வரைக்கும் அவ எப்படி தூங்குவா தெரியுமா? என் முதுகல அல்லது நெஞ்சுலதான் படுத்து தூங்குவா. எடுத்து கட்டில்ல கிடத்தினாலும் எந்திரிச்சி வந்து மேல படுத்து தூங்குவா. சின்னபிள்ளையா இருக்கும் போது அவ்வளவு பாசமா இருப்பா. அவ சின்ன பிள்ளதான ஏதாவது சும்மா சொல்லுவா. நாம கண்டுக்க கூடாது”

என்றார் கூலாக.

மகள்களைப் பெற்ற தகப்பன்களின் வீக்னஸப் பாருங்க

எழுதியவர் : செல்வமணி (5-Jan-16, 8:37 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 146

மேலே