பாட்டி சொல்லும் கைவைத்தியம்

பர்கர், பீட்ஸா என்று மைதாவும் சீஸையும் குழப்பிய கலவையை நாகரிகம் என்ற பெயரால் நண்பர்கள் நண்பிகளோடு வாரி வளைத்துத் தின்றுவிட்டு இரை தின்ற மலைப்பாம்பாய் செரிக்க முடியாமல் திணறும் வயிறுகளுக்கு...

தனியா எனப்படும் கொத்துமல்லி விதையைக் கொஞ்சம் எடுத்து [1 டேபிள்ஸ்பூன்] வெந்நீரில் ஊற வைத்து, அதனுடன் ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி அதில் கொஞ்சம் தேன், ஒரு மூடி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடித்தால் செரிமானம் ஆகிவிடும்.

பரீட்சைக்குப் படிச்சுப் படிச்சு கண்ணைச் சுத்தி ஒரே கருவளையம். அதற்கு வைத்தியம், விளக்கெண்ணெய் 10 சொட்டு, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் 10 சொட்டு, கொஞ்சம் பன்னீர் சேர்த்துக் குழைத்துக் கண்ணைச் சுற்றித் தடவலாம். பன்னீர் என்றால், ரோசாப்பூ தண்ணீர்.

தலையிலே நீர் கோத்துக்கொண்டால், தலைபாரம், கண்ணிலே மூக்கிலே நீராகக் கொட்டிக்கொண்டு, தும்மல், தொண்டைவலி இதெல்லாம் தொடர்ந்து வரும். ஜலம் என்றால் தண்ணீர்; அதனாலே ஏற்படுகிற உபாதை, தோஷம்; அதுதான் ஜலதோஷம். இவை எல்லாவற்றுக்குமே சுலபமான வைத்தியம் இதுதான்.

ஒரு வெற்றிலையைக் கழுவித் துடைத்து, அதிலே கிராம்பு [லவங்கம்] 2, ஏலக்காய் 2, மிளகு 6, 7, கொஞ்சம் வெல்லம் வைத்துச் சுருட்டி, வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளை என இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால், மூன்றாம் நாள் சளி குறைந்து, ஜலதோஷம் பறந்துவிடும்.

வேர்க்குரு இருந்தால், இரவு படுப்பதற்கு முன்னால், சந்தனக் கல்லிலே நன்கு சந்தனத்தை இழைத்து, அதில் பன்னீர் விட்டுக் குழைத்து, வேர்க்குரு இருக்கும் குழந்தைகளுக்கு உடம்பில் தடவினால் வேர்க்குரு போய்விடும். கிராமத்துப் பக்கம், பனை நுங்கு கொட்டிக்கிடக்கும். அந்த நுங்கை நன்கு தேய்த்துப் பிள்ளைகளுக்குக் குளிப்பாட்டுவார்கள்.

பெரியார் அடிக்கடி சொன்ன வெங்காயம், வேர்க்குருவை விரட்ட உதவும். வெங்காயத்தை இடித்துச் சாறு எடுத்து, வேர்க்குரு இருக்கிற இடத்திலே தடவலாம்.

சிலருக்கு வேனல் கட்டி வரும். அதற்கு மருந்து, செம்பருத்தி இலை அல்லது அந்திமந்தாரை இலைகளை எடுத்து, அதிலே விளக்கெண்ணெய் தடவி தணலில் வாட்டி, கட்டி மேல் போட்டால், கட்டி உடைந்துவிடும்.

தொண்டைப்புண், தொண்டைவலி:

சாதம் கொதிக்கும்போது, மேலாக எடுத்த கொதிகஞ்சியில் பனங்கல்கண்டு, வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடாகக் குடிக்கவும்.

அல்லது, சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, நெய்யில் வதக்கிப் பனங்கல்கண்டு சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

இருமல் கஷாயம்:

இரண்டு தம்ளர் தண்ணீரில், சிறு துண்டு, சுக்கு, அதிமதுரம், சித்தரத்தை, உடைத்த மிளகு, கொட்டை நீக்கிய பேரீச்சங்காய், வால் மிளகு... இவற்றைப் போட்டுக் கொதிக்கவிடவும். தண்ணீர் பாதியாகச் சுண்டியதும், மேலாக இறுத்து அதில் பனங்கல்கண்டு, பால் சேர்த்துக் குடித்தால், இருமல் குணமாகும். அடியில் இருக்கும் வண்டலைக் கொட்டிவிடாமல், மேலும் ஒரு தடவை அதில் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.

வறட்டு இருமல்:

சுண்டைக்காயை சிறிது நெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டால், இருமல் குறையும்.

பாலில் ஆறேழு பேரீச்சம்பழங்களை வேகவைத்துச் சாப்பிட்டால், இருமல் குறையும். அதனுடன் ஓமவல்லி இலைகளையும் சேர்க்கலாம்.

இயற்கை ஷாம்பூ:

ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப் பங்கு, புங்கங்காய் ஒரு கைப்பிடி... இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்துவைத்துக்கொள்ளவும். முடி வளர உதவும், ரசாயனக் கலப்பில்லாத, பக்க விளைவுகள் இல்லாத வீட்டு ஷாம்பூ இது.

கண் அரிப்பு, கிரிக் கட்டி (கண்கட்டி):

கடுக்காய்ப் பிஞ்சை, சந்தனக் கல்லில் இழைத்துக் கண் மீது தடவிக்கொண்டு படுத்து உறங்கினால், 2 நாட்களில் சரியாகும். பழங்கால மரப்பாச்சி பொம்மைகள் கருங்காலி மரத்தில் செய்யப்பட்டிருக்கும். அதை சந்தனக் கல்லில் இழைத்து, கிரிக்கட்டி மீது தடவினால் குணமாகும்.

-ரேவதி சங்கரன்

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (6-Jan-16, 11:56 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 153

மேலே