மழையுதிர் காலம்
மேகப் பொதிகளை
வானம் வரைக்கும்
சுமந்து சென்று
தாங்குவது யார் ?
முகிலின் முதுகில்
மின்னல் கிறுக்கல்கள்
எழுதி மீண்டும்
அழிப்பது யார் ?
வானுக்கும் பூமிக்கும்
தண்ணீர்த் தோரணம்
தொங்கவிட்டு
அறுப்பது யார் ?
வேரில் நீரைப்
பாய்ச்சும்போது
தலையில் இலையாய்த்
துளிர்ப்பது யார்?
மழையில் நனைந்த
மரங்களின் கூந்தலை
காற்றுக் கரங்களால்
துவட்டுவது யார் ?
நீர்நிலை வயிறு
நிறைந்த பின்னர்
ஆற்றுப் பெருக்கை
அமைப்பது யார் ?
கடலில் சேரும்
நன்னீர் சுவையை
உப்பாய் ஆக்கிச்
சிரிப்பது யார் ?
இத்தனை கேள்விக்கும்
ஒற்றை பதில்
இயற்கை !
இயற்கை எழுதும்
மாயச் செய்தியை
கார்காலம்
உரக்க வாசிக்கிறது !
அதை
சரியாகப் புரிந்துகொண்டால்
வாழ்க்கை இனிக்கிறது !
நீர்
அளவோடு இருந்தால்
புன்னகை !
கரைகளை மீறினால்
கண்ணீர் !
நாம்
இயற்கையோடு
இயைந்து போனால்
எல்லாம் நலம் !
இயற்கைக்கு
எதிராய்ப் போனால்
போர்க்களம் !