மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்

துவட்டாத மேகக் கூந்தலின் காயாத நீர்த்துளி
சில்லறையாய் மண்ணில் சிதறுகையில் மழைத்துளி
**
கைக்குள் பிடிபடாத கானல் நீர் மீன்களே!
கடலில் சிந்தினால் அலையாகும் வலை மீன்களே!
**
வெள்ளித்துண்டுகள் போல் காட்சி தரும் மழையே!
மின்சார வெள்ளத்தில் மிதக்கும் சிட்டுக்களின் மழையே!
**
மலர்கள் சிரித்து அமுதம் சிந்திடும் முத்தங்களின் மழையே!
புல்லாங்குழல் இசையில் எட்டிபிடிக்கமுடியாத சத்தங்களின் மழையே!
**
நீலவானின் கருமேகக்கருவில் பிறந்த வான்மகளே வா வா வா
தாகிக்கும் நோய்க்கு குளிரெனும் உடையால் குளங்கள் தா தா தா
**
புழுதிபடிந்த இயற்கையின் முகத்தை அழகுபடுத்தும் மழையே!
அழுக்கடைந்த மனதையும் தூய்மைப்படுத்தி போவாயா மழையே!
**
என் உள்ளம் ஒரு படகில் மிதந்து போகிறது மழையே!
அவள் இதய சமுத்திரத்தில் கரை சேர்த்திடு மழையே!
**
மார்கழியில் என்னவள் குளிக்கும் போது மென்சூடாகிடு மழையே!
அவள் மஞ்சத்தில் என் பெயர் எழுதி காதலுக்கு உதவிசெய்திடு மழையே!
**
தூரதேச கவிஞர்களின் பேனாவுக்குள் மைநிரப்பி கொடுத்திடு மழையே!
உரிமைக்காய் குரல் கொடுக்கும் உள்ளத்திற்கு பஞ்சம் வேண்டாம் மழையே!
**
முட்கள் மேல் நீ விழுந்தால் பூக்களுக்கும் காய்ச்சலடிக்கும் மழையே!
எங்கள் வயிற்றில் அடித்தால் இந்த உலகும் தாங்குமா மழையே!
**
காகிதக்கப்பல் கட்டி நங்கூரமிட்டு பரிசுகள் தருகிறேன் மழையே!
உதிரம் சிந்திய நினைவுகள் வாழும் செங்கல் வீட்டை கரைக்காதே மழையே!
**
என் எழுத்துக்களால் வீடு கட்டி உன்னில் நனைத்திட காத்திருக்கிறேன் மழையே!
அழகுக்கு காதலனாகவும் ரசனைக்கு தோழனாகவும் வந்திடு மழையே!
**

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (9-Jan-16, 1:03 am)
பார்வை : 170

மேலே