காட்சிப் பிழைகள் 30- உமை
கசல் -1
1.மன வாசல் நீங்காத புது மழையின் தோரணம்
என் மௌனங்கள் இசையாக உன் மொழிகள் காரணம்
2. உன் வழியெங்கும் மலர் தூவி நடக்கும் பூமரம்
நல் மொழி கண்டு கவி கொண்டு இசை வீசும் சாமரம்
3. என் விழியில் உன் விம்பம் வீழ்ந்தது எப்போது?
உன் உயிரில் என் உருவம் நிறைந்தது இப்போது.
4. கனவுகளில் கலந்து நிதம் கரைந்து போகிறேன்
காற்றில் ஒரு சருகாகத் தொலைந்து போகிறேன்
5. நீ தேடும் மழை மேகம் உன் உயிர் வந்து தூறும்
உன் நெஞ்சோடு புது ராகம் தினம் வந்து ஊறும்
6. எனைத் தேடி நடை பயிலும் கவிதைகளின் கோயில்
உனைச் சேராமல் வீழ்ந்தேனோ காதல் எனும் பாயில்
7. மன வெளியில் பெரு நெருப்பை மூட்டி விட நீயும்
மழை அறியாப் பாலை எனக் கருகும் இந்தக் காயம்
8. உன் காதல் நினைவுகாளால் நிறைந்த பாத்திரம்
உன் ஒளியன்றி வேறொன்றை உணரா நேத்திரம்.
9. விதியோடு விளையாடும் கடிகார முள்ளு- இவள்
விழியோடு இமையாக இருப்பாயோ சொல்லு
10. அலை அலையாய் மனதினிலே ஆசைகளை மூட்டி
அன்பு செய்த பின்னால் மறைவாயோ நிறம் காட்டி
11. கண் காணும் காட்சி இது பிழையாகிப் போமோ
கடல் வற்றிக் கானலென உருமாறிப் போமோ
*******************************************************************************************************************
கசல்- 2
----------------------------------------------------------------------------------------------------------------------
உன் நெற்றி வியர்வை
ஒற்றிய ஈரத் தென்றல்
உறங்கிக் கொள்கிறது
என் கைக்குட்டையுள்
பத்திரமாக.
--------------------------------
உன்னை உறங்க விடாது
துன்புறுத்தும்
என் பிடிவாதம்
நான் தூங்கிய பின்பும்
தாலாட்டும்
உன் தரப்பு வாதம்
----------------------------------------------
வீணை மீட்டத் தெரிய
பத்து மயிலிறகு
போதும் என்றாய்
விளங்காமல்
இன்னும் விழித்துக்
கொண்டிருக்கிறேன்
-----------------------------------------------------
உன் சுருக்கெழுத்தை
மொழி பெயர்க்கும்
அகராதி நான்
-----------------------------------------------------
இதழ்களை
அனுப்பி
நலம் விசாரித்தேன்
திருப்பி அனுப்பி விடு
பூவிடம் பத்திரமாக
--------------------------------------------------------
உன் மூச்சை
உள்வாங்கி
இறந்து விடுகிறேன்
நினைவுக் குடுவையில்
எஞ்சிய திரவத்தில் என்றும்
உன் முகம் இருக்க..
--------------------------------------------------------------