கவிதையானவள்

கவிதையானவள்
=================
வசந்தத்தினுடைய நாற்றத்திற்காய்
காற்றாடி மரங்கள்
காத்திருப்பதைப்போல
கூட்டிலிருந்து எங்குமே போகாதவள்
என் வருகைக்காக
காதோரத்து பார்த்திருப்பாய்
சலிப்புத் தட்டும்போதெல்லாம்
தலைவாசல் கடந்து
தாழ்வாரம் இறங்கிப்போய்
மஞ்சள் பரிதிகள் காதல் பட்சிகளுக்கு
இதமூட்டினவா என்று பார்ப்பாய்
உன் தினசரி உலகம்
அத்தனைதானோ என்பதைப்போலிருந்தாய்
வாதாயனங்களை
எட்டிப்பார்த்தாயானால்
காய்க்கரி நிரப்பியை
தலையோடு கோர்த்தபடி
சில அழுக்கு சேலைகளும்
கொசுவு முழுக்கை சட்டைகளும்
பனிப்படர்வினூடே நடந்து மறைவார்கள்
உனக்குத் தெரியுமா
அப்போதெல்லாம் நீ சொல்லுவாய்
வளியெண்ணெய் புகைக்கக்கும்
மகிழூந்தின் வேகத்தில்
கூதிர்க்காற்று முகம் கிழிக்கும்போது
என்னோடு பயணிப்பது
அவ்வளவு பிடித்திருக்கிறது என்று
ம்ம்ம் அதில்தானே நான்
உனக்குப்பிடிக்காத
சில வாசனைகளை களைந்திருக்கிறேன்
அந்த நாட்களில்
என் அலைப்பேசியின் அலறல்களாகியும்
தொப்புளின் அதிர்வுகளாகியும்
வாயாடிப்பட்சியாய் நீயே நிறைந்திருப்பாய்
உனக்குப்பிடித்த
மல்லிகைத்தொடுத்தலும்
மருதாணி வாசமுமாய்
நானும் இருந்திட ஆசைக்கொண்டுதானே
உன் ஆடைக்குள் பிரவேசித்தேன்
பாவாடை நிரிக்குள்
இறுக்கமாக பிடித்திருந்ததுபோய்
புடவை மடிப்பிலிருந்து
எனை அவிழ்த்துவிட்டவள் தூரமாகிவிட்டாயே
மேசைவிரித்த சித்திரத்தையலை
மெதுவாக பிரித்தவாறே
கரைந்திடும் காக்கைகளோடும்
க்ரீச்சிடும் குருவிகளோடும்
பறக்கும் வெண்புரவியில்
உனைக் கொண்டுப்போகவரும்
இராஜக்குமாரனைப்பற்றி
சொல்லிக்கொண்டிருந்தவளின் மீது
சாந்திரபிரகாச கறைதெளித்து
வெள்ளைநிழல் தரித்த வேடுவன்
உன் பொன்னிறத்தை
உனக்கெனவே தெளிவுசெய்த இகம்பரகந்தர்வன்
நீ சேலைக்குடைந்துவிட்ட இடம்பெயர்ந்து
இப்போதும் கிடக்கிறான்போல்
முன்னம்பெய்த மழைநீரில் உருண்டோடி
அதோ கடற்பாசிதள்ளிய
கூழாங்கற்களுக்கு இடையிலே மணற்மூடி
அங்கெங்கேயோ சிலையாகிக் கிடக்கிறான்போல் ம்ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"