காம்புகளுடன் வந்தவர்கள்
****""*"****"********""""**""""""""
மண்டலம் காற்று விற்கக்
கடை போட்டிருந்து
இலை பைகளைக்
கிளைக்கரங்களேந்தி
மர மனிதர்கள் வரக்கூடுமென
அது காத்திருந்தது
அழுத்த மைதானத்துள்
புழுக்கம் தாளாமல்
ஒதுங்கியிருந்த சருகு சிறுவர்களிடம்
சற்று இலவசமாய்ச் சுற்றிக் கொடுத்துத் தூதனுப்பிப் பார்த்தது
யாரும் வருவதாய் தெரியவில்லை
வியாபாரம் நடக்காத வேட்கையில்
தாகித்தக் காற்று
கொஞ்சம் நீரருந்தி வரவேண்டி
நதிக்கரை தேடிப் பார்த்தது
கண்ணுக்கெட்டிய தூரத்தில்
நதியோடிய தடயங்களே
இல்லாமல் ஏமாற்றத்துடன்
திரும்பி வந்து
மறுபடியும் எட்டிப் பார்த்தது
தூரத்தில்
தண்ணீர் குப்பிகளுடன்
சிலர் கோடரிக் காம்புகளுடன்
வந்து கொண்டிருந்தார்கள்..
*

