போகி BOGI
போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது, பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி" என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி" என்றாகிவிட்டது.
அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள், தேவையற்றபொருட்கள் யாவும் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.